எம்.எப்.அய்னா
பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா காட்டுப் பகுதியில், கல்லாறு சரணாலயப் பகுதியில் காட்டை அழித்தமை (துப்புரவு செய்தமை), கட்டுமாணங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தமையை மையப்படுத்திய ரிட் மனு மீதான விசாரணையின்போது, மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமை ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் நீதிமன்றை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த இந்த மனுவை, மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், மனுதாரர் தரப்பூடாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரிஷாத் பதியூதீனுக்கு அறிவித்தல் அனுப்பவும் இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுவில், பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்காவின் கல்லாறு சரணாலய காட்டுப் பகுதியில், காட்டை அழித்து சட்ட விரோத கட்டுமாணங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் உட்பட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாம் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அம்மனுவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், அத்தீர்ப்பில் அழிக்கப்பட்ட வனப்பகுதியை மீள உருவாக்க, அவர் அப்பகுதியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மர நடுகை நடவடிக்கைகளுக்கான முழுமையான செலவை கணித்து, இரு மாதங்களுக்குள் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு, வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 1067 மில்லியன் ரூபாவை மீள காடுகளை நடுவதற்காக செலுத்துமாறு அத்திணைக்களம் ரிஷாத் பதியுதீனுக்கு நீதிமன்றம் ஊடாக அறிவித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி குறித்த பணத்தை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் இதுவரை செலுத்தவில்லை எனவும், அதனூடாக அவர் நீதிமன்ற உத்தரவை மீறியிருப்பதாகவும் இது நீதிமன்றை அவமதிக்கும் செயல் எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன ? :
முன்னதாக கடந்த 2020 நவம்பர் 16 ஆம் திகதி, வில்பத்து விவகாரத்தில், பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா காட்டுப் பகுதியில், கல்லாறு சரணாலயப் பகுதியில் காட்டை அழித்தமை ( துப்பரவு செய்தமை), கட்டுமாணங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தமை சட்ட விரோதமானது என மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந் நடவடிக்கைகளுக்கு முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீன் பங்களிப்பு பொறுப்புக் கூற வேண்டும் என அப்போது தீர்மானித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், அழிக்கப்பட்ட வனப்பகுதியை மீள உருவாக்க, அவர் அப்பகுதியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது..
மேன் முறையீட்டு நீதிமன்றின் அப்போதைய நீதிபதியும் தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசருமான ஜனக் டி சில்வா மற்றும் தற்போதைய மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தது.
2015 இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டே நிறைவடைந்த நிலையில், கடந்த 2019 வருடம் ஆகஸ்ட் 6 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது.
எனினும், வழக்கை விசாரித்த நீதிபதி மஹிந்த சமயவர்தன தீர்ப்பை அறிவிக்க விருப்பம் தெரிவிக்காமையினால் மனுவை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி யசந்த கோதாகொட தீர்மானித்தார்.
அதன்படியே மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் கீழ் இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இவ்வழக்கை மீள விசாரித்தது. அந்த விசாரணைகளே நிறைவடைந்து தீர்ப்பு 2020 நவம்பர் 16 இல் அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் மனுதாரரான சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சார்பில் சட்டத்தரணி ரவீந்ரநாத் தாபரே, எஸ். பொன்னம்பெரும ஆகிய சட்டத்தரணிகள் ஆஜரானதுடன், 1 முதல் 6, 8,9 ஆம் பிரதிவாதிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி மனோகர ஜயசிங்க ஆஜரானார். 7 ஆம் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சட்டத்தரணிகளான பசீர் அஹமர் மற்றும் என்.எம்.ரியாஸ் ஆகியோருடன் ஆஜராகியிருந்தனர்.
இவ்வழக்கின் வாதங்கள் கடந்த 2019 ஜூலை 7, 2020 பெப்ரவரி 12 ,19 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தன.
எழுத்து மூல சமர்பணங்களை, மனுதாரர், கடந்த 2018 செப்டம்பர் 26, 2020 ஜூன் 12 ஆம் திகதிகளில் சமர்ப்பித்திருந்தார். 1 முதல் 6 மற்றும் 8,9 ஆம் பிரதிவாதிகள் சார்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்கள் கடந்த 2018 செப்டம்பர் 10 ஆம் திகதியும், 2020 மே 12 ஆம் திகதியும் சமர்ப்பிக்கப்பட்டன. 7 ஆம் பிரதிவாதி ரிஷாத் பதியூதீன் சார்பில் 2018 செப்டம்பர் 4 ஆம் திகதி எழுத்து மூல சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள மனுவில், சுமார் 1500 உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளின் (இடம்பெயர்ந்தோர்) குடும்பங்கள் சட்டத்திற்கு மாறாக கல்லாறு சரணாலயத்தில் சட்ட விரோதமாக குடியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையும் ஆராய்ந்திருந்த நீதிபதிகள் குழாம், 1907 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க வன பாதுகாப்பு கட்டளை சட்டத்தின்படி எந்தவொரு நபரும் சட்டத்திற்கு முரணாக செயற்படவும், காடுகளை அகற்றுதல், வீடுகள் மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உரிமை இல்லை என அறிவித்தனர்.
எவ்வாறாயினும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஜனாதிபதி செயலணி எடுத்த முடிவுகளின் அடிப்படையில் உரிய முறையில் அதற்கான நிலம் மீள்குடியேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரிஷாத் பதியூதீன் சார்பில் கூறப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அந்த விடயத்தை உறுதிப்படுத்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தவறிவிட்டதக 14 பக்கங்களைக் கொண்ட குறித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உள் நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளை மீளக் குடியமர்த்துவது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள இந்த தீர்ப்பு, அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டே மீள குடியமர்த்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயதானத்துடன் தொடர்புடைய மீள் குடியேற்றம் சட்டத்துக்கு அப்பால் சென்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய நபராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அடையாளம் கண்டுள்ள நீதிபதிகள் குழாம் கல்லாறு பகுதியில் தனிப்பட்ட நிதியை பயன்படுத்தி மீள் மர நடுகை திட்டமொன்றை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தர்வு பிறப்பித்திருந்தது,
தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மேன் முறையீடு:
எவ்வாறாயினும் பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா காட்டுப் பகுதியில், கல்லாறு சரணாலயத்தில் காட்டை அழித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பொறுப்புக் கூற வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ள நிலையில் அம்மனு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.
அழிக்கப்பட்ட வனப்பகுதியை மீள உருவாக்க, ரிஷாத் பதியுதீன் அப்பகுதியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் என, மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த தீர்ப்பானது சட்டத்துக்கு முரணானது எனவும், அத் தீர்ப்பை வலு விழக்கச் செய்யுமாறும் மேன் முறையீடு ஊடாக ரிஷத் பதியுதீன் கோரியுள்ளார்.
மேன் முறையீட்டு நீதிமன்றம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு உட்பட்ட விடயம் நடந்ததாக கூறப்படும் காலப்பகுதியில், தான் வீடமைப்பு அமைச்சரோ அல்லது வனப் பாதுகாப்பு அமைச்சராகவோ இருக்கவில்லை என விஷேட மேன் முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ள ரிஷாத் பதியுதீன், தான் காடழிப்பு மற்றும் மீள் குடியமர்த்தல் நடவடிக்கைகளை குறித்த பகுதியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கவில்லை எனவும், அவ்வாறு தான் செயற்பட்டமைக்கான எந்த சான்றுகளும் இல்லாத நிலையில் குறித்த மேன் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை செல்லுபடியற்றதாக்குமாறும் அம்மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.- Vidivelli