சர்ச்சையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி

0 899

நாட்டின் அதியுயர் பீடமான பாராளுமன்றத்தின் பிரதமர் நியமனத்தின் பின் உருவான நெருக்கடி நிலைமையை உயர் நீதிமன்றமே தீர்த்து வைத்தது. அந்த அரசியல் அதிர்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும், நாட்டு மக்களும் முழுமையாக மீள்வதற்கு முன்பு நேற்று முன்தினம் பாராளுமன்றில் மேலுமொரு நெருக்கடி நிலை உருவாகியிருக்கிறது.

இவ்வாறான இழுபறிநிலையும், நெருக்கடிகளும் அரசியல் ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் சவாலுக்குட்படுத்தி வருகின்றன என்றே கூறலாம். பிரதமர் பதவி கைகழுவிப் போனநிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சோர்ந்துபோகவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நோக்கி நகர்ந்துள்ளார்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக அறிவிப்புச் செய்தார். சபாநாயகரின் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் யோசனையை முன்வைத்திருந்தது. இதன் அடிப்படையிலே சபாநாயகர் இந்த நியமனத்தை அறிவித்தார்.

பாராளுமன்றத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களுக்கு அமைவாக எதிர்க்கட்சித் தலைவராக எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளுக்கிடையே அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினதோ அல்லது சுயாதீன குழுவினதோ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரையே நியமிக்க வேண்டும். இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் அதிகப்படியான எம்.பி க்களைக் கொண்ட கட்சி என்பதால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு நான் இணங்குகிறேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நியமனத்துக்கு சபையில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தமையை நாம் கண்டோம். பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாத நபர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் இன்று சவால்கள் ஏற்பட்டுள்ளன. நெருக்கடிநிலை உருவாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனை சவாலுக்குட்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் பிரதானியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் இருக்கும் நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவது எவ்வாறு? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் 99 ஆம் உறுப்புரிமை பிரகாரம் மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாத கட்சியில் இணைந்துள்ளதால் ஒரு மாதகாலத்தில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளார்கள். பிரதமர் பதவி பறிபோய்விட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் முனைப்பாக உள்ளார்கள்.

தமிழ்தேசியகூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆர். சம்பந்தனே எதிர்க்கட்சி தலைவராக பதவிவகிக்க வேண்டுமெனவும் இதுதொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டுமெனவும் சபாநாயகரைக் கோரியுள்ளனர்.

சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான தனது தீர்மானத்தை நாளை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார். நாளை அவரது தீர்மானம் எவ்வாறு அமையப்போகிறது? என்பதில் நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அரசியலில் தொடர்ந்து இழுபறிநிலையை உருவாக்கி ஸ்திரத்தன்மையை சிதைத்து அசாதாரண நிலைமையை மீண்டும் உருவாக்காது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்பதே அனைவரதும் அபிலாஷையாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.