முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: முஸ்லிம் எம்.பி.க்களின் சிபாரிசுகள் நீதியமைச்சரிடம் இன்று கையளிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் தனியார் சட்டத்தின் திருத்தம் தொடர்பிலான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகள் இன்றைய தினம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் விவாக–விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் நேற்றுக்காலை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் இரு பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டனர்.
சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸியின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஏ.எல்.எம். அதாவுல்லா, மர்ஜான் பளீல், காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் நீதியமைச்சர் மிலிந்தமொரகொட முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஓய்வு நிலை நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமித்திருந்த குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா குழுவினரால் முன்வைக்கப்பட்டிருந்த சிபாரிசுகள் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆராயப்பட்டன.
ஷரீஆவுக்கு முரணற்ற வகையில் திருத்தங்களை இறுதி செய்வதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளதுடன் இன்றைய கலந்துரையாடலுக்கு சமுகமளிக்காத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்றும் தொடர்ந்தும் கலந்துரையாடி இன்றைய தினமே (வியாழக்கிழமை) நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைச் சந்தித்து தங்கள் சிபாரிகளை கையளிக்கவுள்ளனர்.– Vidivelli