(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இந்த வருட ஹஜ் யாத்திரையில் சுமார் 2.6 மில்லியன் மக்கள் உலகெங்கிலுமிருந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் பரவிய கால கட்டத்துக்குப் பின்பு இடம் பெறும் பாரிய அளவிலான ஹஜ் நிகழ்வு இதுவென சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரையில் பங்கேற்கவுள்ள மில்லியன் கணக்கான யாத்திரிகர்களின் நலன்களைப் பேணுவதற்கு சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. யாத்திரிகர்களுக்கு உதவும் பணியில் 14 ஆயிரம் உத்தியோகத்தர்களும் 8 ஆயிரம் தொண்டர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பொலிஸாரும் ஏனைய உத்தியோகத்தர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்காலத்தில் சவூதி ஹஜ் அமைச்சு ஹஜ் யாத்திரிகர்கள் தொடர்பில் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
யாத்திரிகர்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தியிருந்தது. ஹஜ் கோட்டாக்களும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்த வருட ஹஜ் யாத்திரை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குப் பின்னரான மிகப்பெரிய யாத்திரையாக அமையவுள்ளதாக இரு புனித பள்ளிவாசல்கள் விவகார பொதுத் தலைமைத்துவத்தின் தலைவர் கலாநிதி அப்துல் ரஹ்மான் அல்சுதைஸ் தெரிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குப் பின் ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை தொடர்பான வரையறையை நீக்கியுள்ளது.
மக்கா பெரிய பள்ளிவாசலிலும் மதினாவிலுள்ள நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலிலும் யாத்திரிகர்களுக்கு மொத்தம் 3 இலட்சம் புனித குர்ஆன் பிரதிகள் விநியோகிக்கப்படவுள்ளன எனவும் அல் சுதாயிஸ் தெரிவித்துள்ளார்.
உலகெங்குமிருந்து வருகைதரும் பல்வேறு மொழிகள் பேசும் யாத்திரிகர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக 51 மொழிகளில், மொழி பெயர்ப்பு சேவைகள் வழங்கப்படவுள்ளன. மேலும் இந்நிகழ்வில் குர்ஆன் மனனம், மற்றும் குர்ஆன் பாராயணம் செய்வதற்கான பயிற்சிப்பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யாத்திரிகர்களுக்கு கையடக்கத் தொலைபேசி செயலிகள், உள்ளடங்களான இலத்திரனியல் தொழில் நுட்ப வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
மக்கா, மதீனா இரு பள்ளிவாசல்களிலும் தினம் 2 மில்லியன் தண்ணீர் போத்தல்கள் அதாவது 40 ஆயிரம் லீற்றர் புனித ஸம்ஸம் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.-Vidivelli