- மாற்றுவழி குறித்து உலமா சபை அவசரமாக பத்வா வழங்க வேண்டும்
- சுகாதார நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதை அமைச்சும் திணைக்களமும் கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் ஹலீம் எம்.பி
(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாடளாவிய ரீதியில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவுதல் தீவிரமடைந்திருக்கிறது. நோய் தொற்று காரணமாக வடமேல், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் மாடுகள் அறுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் மூன்று வாரங்களில் ஹஜ் பெருநாளுடைய தினம் வருவதால் முஸ்லிம் மக்கள் குர்பானிக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, குர்பான் விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மத விவகார அமைச்சும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் வலியுறுத்தினார்.
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ச தலைமையில் மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டம் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது, ஹலீம் எம்.பி. மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ள சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியமையால் பல்வேறு ஆபத்துகளிலிருந்து தவிர்ந்துகொள்ள முடிந்தது. இதுபோன்றே, தற்போது குர்பான் கடமைகளை நிறைவேற்றும் ஹஜ்ஜுடைய காலம் நெருங்குகிறது. இந்நிலையில் முஸ்லிம் மக்கள் அதற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மாடுகளுக்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. குருநாகலில் இந்த தொற்று பரவ ஆரம்பித்து கிழக்கு, வடக்கு, மத்திய மாகாணங்களிலும் பரவல் தீவிரமடைந்திருக்கிறது. அத்தோடு, பல இடங்களிலும் மாடறுப்புக்கான தடையை அரசாங்கம் விதித்திருக்கின்றது.
இந்த சூழலில், குர்பான் விடயத்தில் மாற்று தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. அதற்கான வழிகாட்டல்களை வழங்கும் விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மத விவகார அமைச்சும் கரிசனை காட்ட வேண்டும்.
குறிப்பாக இஸ்லாமிய அறிஞர்களின் வழிகாட்டலில் மார்க்கத் தீர்ப்பு ஒன்று வழங்கப்படவேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய அமைப்புகளுடன் கலந்துரையாடி இதற்கான அவசர தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். இத்தோடு, இவ்விடயம் தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒருங்கமைக்கப்பட்ட குழுவொன்றை நியமித்து மக்களுக்கு சரியான மார்க்கத் தீர்ப்பை வழங்கி வீணான குழப்பங்களில் இருந்தும் முரண்பாடுகளில் இருந்தும் தவிர்ந்துகொள்ள விரைந்து செயற்பட வேண்டும்.
அத்தோடு, சுகாதார அமைச்சு மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அம்மை நோய் தொடர்பில் விசேட சுற்றுநிருபங்களை வெளியிட்டிருக்கிறது. குர்பான் விடயம் தொடர்பாக மத விவகார அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து மக்களுக்கு சரியான தெளிவூட்டல்களை வழங்கி கண்டிப்பான சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் காலதாமதங்கள் ஏற்படுத்தப்படுமானல் பல்வேறு நெருக்கடிகளுக்குள் மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை புரிந்துகொண்டு திணைக்களமும் அமைச்சும் விரைந்து செயற்படுவதுடன் மக்களுக்கு மாற்று தீர்வொன்றையும் சிறந்த வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும்.
அத்தோடு, மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அம்மை நோய் பற்றியும் இது குறித்த எமது தீர்மானத்தையும் மக்களுக்கு வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் போது தெளிவூட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஹலீம் எம்.பி. இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் மொஹமட் பைஸல், இதுவிடயமாக கவனம் செலுத்துவதாகவும் அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மத விவகார அமைச்சின் செயலாளரும் இதுவிடயத்தில் தனது உடன்பாட்டை தெரிவித்தார்.
மேற்படி துறைசார் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக, வேலுகுமார் மற்றும் மதவிவகார அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli