உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அது தொடர்பான கைதுகள் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. அண்மையில், புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு வன்முறைகளை தூண்டும் வகையில் விரிவுரைகளை நடத்தி வந்ததாக கூறி இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ள சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமையவே இவர்களைக் கைது செய்ததாக சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில் பொலிஸார் விசாரணை நடத்தி மூன்று ஆண்டுகளுக்கு பின்னரே கைது செய்துள்ளனர். இந்நிலையில் எத்தவிதமான குற்றச்சாட்டுக்களுமின்றி, சட்ட மா அதிபரின் ஆலோசனை என கூறிக் கொன்டு, வெற்றுக் கடதாசிகளை முன் வைத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கக்கோருவது பொருத்தமற்றது என சி.ஐ.டி.யினரை நோக்கி நீதிவான் அதிருப்தி வெளியிட்டிருந்தமை பொலிசாரின் நீதியற்ற செயற்பாட்டை உறுதிப்படுத்துவதாகவுள்ளது.
இதேவேளை, இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வரை மூன்று வருடங்களின் பின்னர் சி.ஐ.டி.யினர் தற்போது கைது செய்துள்ளமையானது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான நடவடிக்கைகளை இறுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் அடிப்படையற்ற செயற்பாடு என பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரவூப் ஹக்கீம் அண்மையில் மன்றில் ஆஜராகி வாதிட்டிருந்தார்.
இதனிடையே, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நீக்குவதுடன் அவருக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருமாறு ‘சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள்’ அமைப்பு சட்டமா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது.
சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பெருமளவான முஸ்லிம்களுக்கு அவசியமான சட்ட உதவியை வழங்கியிருக்கின்றார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி குற்றவிசாரணைப் பிரிவினரால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அவ்வேளையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கோ அல்லது அவரது குடும்பத்தாருக்கோ கூறப்படவில்லை. இருப்பினும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அவரது தடுப்புக்காவல் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனையடுத்து பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்கப்பட்டு, 9 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னமும் நீக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இற்றைவரை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையிலான எந்தவொரு ஆதாரமும் வாதிகள் தரப்பினால் சமர்ப்பிக்கப்படவில்லை.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்ட முதலாவது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆவார். பயங்கரவாதத்தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதாக இலங்கை அரசாங்கம் பலமுறை உத்தரவாதமளித்திருக்கின்ற போதிலும், தற்போதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது. இந்நிலையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நீக்குவதுடன் அடக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் சாட்சியங்களை இட்டுக்கட்டியதாக குற்றம் சுமத்தினார். 52 நாள் அரசாங்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தமையே ஹிஜாஸை பழி வாங்குவதற்கான காரணமாகும் என்றும் அரசாங்கம் பயங்கரவாத தடை ச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என சர்வதேசத்துக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, இங்கு அதனை பயன்படுத்துவது இலங்கைக்கு ஜெனீவா மனித உரிமை பேரவை வரையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவல்லது என்றும் ரவூப் ஹக்கீம் அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றுகையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிசாரும் இந்த விவகாரத்தில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவையும் அவரது வழக்குடன் தொடர்புடையவர்களையும் வேண்டுமென்றே பழிவாங்கி வருகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது விடயத்தில் இவ்விரு தரப்பினரும் நியாயமாக செயற்படுவதுடன் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.– Vidivelli