எம்.எல்.எம். மன்சூர்
“….‘கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி அவர்கள் நாட்டுக்குள் போதைப் பொருட்களை எடுத்து வரவில்லை; மாறாக, தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் போன்ற பொருட்களையே அவர் கடத்தி வந்திருக்கிறார். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனென்றால், போதைப் பொருட்கள் பிடிபடும் சந்தர்ப்பத்தில் சுங்க அதிகாரிகளால் அவற்றை பறிமுதல் செய்ய முடியுமே ஒழிய, விற்பனை செய்ய முடியாது. ஆனால், தங்கம் மற்றும் தொலைபேசி போன்ற பொருட்களை அரசாங்கம் சட்டபூர்வமாக ஏல விற்பனையில் விற்பனை செய்து, வருமானம் ஈட்டிக் கொள்ள முடியும். நெருக்கடியான இந்தத் தருணத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர் நாட்டு நலன் குறித்து சிந்தித்து, செயற்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது….”
‘திவயின‘ நாளிதழ், ஆசிரியர் தலையங்கத்திலிருந்து…
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியின் சார்பில் 2020 புத்தளம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான எம்பியான அலி சப்ரி ரஹீம் தங்க பிஸ்கட்கள், கையடக்கத் தொலைபேசிகள் போன்ற பொருட்களை சட்ட விரோதமாக நாட்டுக்குள் எடுத்து வந்த பொழுது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவமும், அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளும் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் மூன்று விதங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன:
1. அறகலயவுக்குப் பின்னர் சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஓரளவுக்கு தணிந்து போயிருந்த முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரம் (Hate Speech) மீண்டும் ஒரு முறை உயிர்ப்படைவதற்கான கதவுகளை அது திறந்து விட்டிருக்கிறது.
சிங்கள செய்தி ஊடகங்கள் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் நபரைக் குறிப்பிடும் பொழுது மீண்டும் மீண்டும் ‘முஸ்லிம் ஜாதிகயா‘ என்ற சொல்லை அழுத்தமாக உச்சரிப்பதை நாங்கள் பார்த்தோம். ‘முஸ்லிம்கள் கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள்‘ என்ற விதத்தில் சிங்கள மக்களின் பொதுப் புத்தியில் வேரூன்றியிருக்கும் மனப் பதிவுகளை மேலும் ஊர்ஜிதம் செய்வதற்கு தான் செய்த காரியத்தின் மூலம் அலி சப்ரி ரஹீம் பங்களிப்புச் செய்திருக்கிறார். இந்த விதத்தில் சமூகத்தின் நற்பெயருக்கு அவர் விளைவித்திருக்கும் சேதத்தை சரி செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
2. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எம்பி ‘முஸ்லிம் அடையாள அரசியல்‘ என்ற கருத்தாக்கத்தை முன்னெடுக்கும் ஒரு கட்சியில் ஓர் உறுப்பினராக இருந்திருப்பதுடன், புத்தளத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 2020 பாராளுமன்றத் தேர்தலில் அவர் SLMC மற்றும் ACMC கட்சிகளின் ஆசீர்வாதத்துடன் களமிறக்கப்பட்டவர். அடிப்படையில் ACMC உறுப்பினராக இருந்தவர்.
இப்பொழுது அவர் செய்திருக்கும் காரியம் ‘முஸ்லிம் அடையாள அரசியலின்‘ மறுபக்கம் எப்படியானது என்பதனை நாட்டிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. இது தொடர்பாக (சம்பந்தப்பட்ட எம்பி சார்ந்திருக்கும் சமூகத்தின் பெயரை மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறி) சிங்கள செய்தி ஊடகங்கள் எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் நியாயமானவை என்றே தோன்றுகிறது.
‘இந்த நபர் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட ஆறு தடவைகள் டுபாய் போய் வந்திருக்கிறார். இந்தக் கள்ளக் கடத்தல் நடவடிக்கை திட்டமிட்ட விதத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்திருப்பதுடன், இதில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருக்க முடியும்‘ என்ற விதத்தில் சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்தகைய சந்தேகங்களை நாங்கள் ஒரேயடியாக நிராகரிக்க முடியாது.
அவர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் எடுத்து வந்த பொருட்களின் மொத்த மதிப்பு மற்றும் (ஒரு சில மணித்தியாலங்களுக்குள்) செலுத்திய அபராதத் தொகை என்பவற்றின் கூட்டுத் தொகை கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய். அவருக்கு இந்த பணம் எப்படிக் கிடைத்தது? அவருடைய வருமான மூலங்கள் எவை?
புத்திஜீவிகளாகவும், அப்பழுக்கற்ற மக்கள் தலைவர்களாகவும் இருந்து வந்த எச் எஸ் இஸ்மாயில் மற்றும் நெய்னா மரிக்கார் போன்றவர்கள் கடந்த காலத்தில் பிரதிநிதித்துவம் செய்த ஒரு தொகுதியிலிருந்து இத்தகைய ஒரு நபர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது பெரும் துரதிர்ஷ்டம். இதே குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஹேவாஹெட்ட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அநுர டனியல் 1978 இல் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனவினால் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அலி சப்ரியும் அதே விதத்தில் வெளியேற்றப்பட்டாலும் கூட, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது அவர் ஏற்படுத்தியிருக்கும் களங்கத்தை எளிதில் துடைத்தெறிய முடியாது.
3. அடுத்த விடயம் மிகவும் முக்கியமானது. அதாவது, வடக்கு கிழக்குக்கு வெளியே தென்னிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதற்கு முஸ்லிம் எம் பிக்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே புத்தளம் வாழ் முஸ்லிம் மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கென அலி சப்ரி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். குருணாகல், அநுராதபுரம் மற்றும் ஏனைய சில மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் இதே மாதிரியான ஒரு மனக்குறை அதாவது தமக்கொரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்ற மனக்குறை – நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது.
சுதந்திரத்தின் பின்னரான தென்னிலங்கை தேர்தல் அரசியல் செயல்பட்டிருக்கும் விதம் மேற்படி நிலைப்பாடு – அதாவது, முஸ்லிம் எம்பி ஒருவரால் மட்டுமே முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும் என்ற நிலைப்பாடு -ஒரு மாயை என்பதனை காட்டுகிறது.
அதாவது, 1989 இல் விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்து வைக்கப்படும் வரையில் அமுலில் இருந்து வந்த தேர்தல் தொகுதி முறையின் கீழ், பெரும்பாலான தொகுதிகளில் வாழ்ந்து வந்த முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அநேகமாக கிடைக்கவில்லை. ஆனால், அந்த இழப்பை வாக்கு வங்கி அரசியல் – அதாவது, இன மத பேதமின்றி தமது ஆதரவாளர்களுக்கு அனுசரணை அளிக்கும் அரசியல் – பெருமளவுக்கு ஈடு செய்திருந்தது.
உதாரணமாக, டப்ளியூ தஹநாயக்க, ஆர் பிரேமதாச, ரொனி டி மெல், ரீ பி இலங்கரத்ன, டி பி விஜேதுங்க, தி மு ஜயரத்ன போன்ற சிங்களத் தலைவர்கள் தமது தேர்தல் தொகுதிகளில் கணிசமான அளவில் முஸ்லிம் சிறுபான்மையினர் வாழ்ந்து வருவதனை நன்கு அறிந்திருந்ததுடன், எப்பொழுதும் அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்து வைக்கும் விடயத்தில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். வளப் பகிர்வு மற்றும் அரச துறை நியமனங்கள் என்பவற்றிலும் மிகவும் நுட்பமான விதத்தில் இன விகிதாசார அடிப்படையில் தமது ஆதரவாளர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் ஓர் அணுகுமுறையை அவர்கள் பின்பற்றியிருந்தார்கள்.
சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் புதிதாக பள்ளிவாசல்களை நிர்மாணிப்பது போன்ற உணர்வுகளைத் தூண்டக் கூடிய சங்கடமான பிரச்சினைகள் (Sensitive Issues) தோன்றிய சந்தர்ப்பங்களிலும் கூட, அவர்கள் இராஜதந்திரமான விதத்தில் செயற்பட்டு, அப்பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைத்திருக்கிறார்கள். இதற்கு தென்னிலங்கையில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. (ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரால் அத்தகைய பிரச்சினைகளை எந்த விதத்திலும் தீர்த்து வைக்க முடியாது என்பது நிதர்சனம்). இன்றும் தென்னிலங்கை அரசியல் அவ்வாறு தான் செயற்பட்டு வருகின்றது. (ஜேவிபி யையும் உள்ளடக்கிய) தேசிய கட்சிகளுடனான தென்னிலங்கை முஸ்லிம்களின் நெருக்கமும், கூட்டுச் செயற்பாடும் இன நல்லுறவைப் பேணுவதற்கும், சக வாழ்வை போஷித்து வளர்ப்பதற்கும் பெருமளவுக்குப் பங்களிப்புச் செய்து வருகின்றன.
வெறுமனே அலங்கார மதிப்புக்கு (Ornamental Value) முஸ்லிம் பெயர் தாங்கிய ஒருவர், சொத்துச் சேர்ப்பதில் மட்டும் குறியாக இருக்கும் ஒருவர் தமது பாராளுமன்ற உறுப்பினராக வருவதிலும் பார்க்க, ‘மிதவாத அணுகுமுறையை பின்பற்றும், செயல்திறன் மிக்க முஸ்லிம் அல்லாத எம்பி ஒருவர் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்தால் போதும்‘ என்ற விதத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்பட வேண்டும்.
வடக்கிலும், கிழக்கிலும் அடையாள அரசியல் செய்யும் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் இனம், மதம் என்ற போர்வையில் மறைந்து தென்னிலங்கை முஸ்லிம் கிராமங்களில் ஊடுருவுவதற்கு எடுத்து வரும் முயற்சிகளை, அந்த இடங்களிலும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் போன்றவர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளாகவே நோக்க வேண்டியிருக்கிறது.
‘சிங்கள இனம் – பௌத்த மதம்’ என்ற கேடயத்தின் பின்னால் ஒளிந்து நின்று அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயன்று வரும் ஊழல் பேர்வழிகளை அம்பலப்படுத்துவற்கும், அத்தகைய ஆட்களின் தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கும் சிங்கள சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், புத்திஜீவிகளும், சமூக ஊடகப் பரப்புரையாளர்களும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அது தொடர்பான பரவலான உரையாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நாடெங்கிலும் நிகழ்ந்து வருகின்றன. அவற்றுக்கு இணையான விதத்தில் முஸ்லிம் சமூகத்திலும் உரையாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறுதல் வேண்டும்.
இலங்கை அரசியல் கலாசாரத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்ற விதத்தில் எதிர்பார்ப்புக்கள் துளிர் விட்டு வரும் ஒரு வரலாற்றுத் தருணத்தில் நாங்கள் நிற்கிறோம் என்பதனை மறந்து விடக் கூடாது.- Vidivelli