வை.எல்.எஸ்.ஹமீட் எனும் யதார்த்தவாதி!

0 412

எஸ்.என்.எம்.சுஹைல்

“அர­சாங்கம் கொண்­டு­வர எத்­த­னிக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூ­ல­மா­னது சட்­ட­மாக்­கப்­பட்டு நாளை மீண்டும் ஓர் இன­வாத அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் பிர­தான பாதிப்பு சிறு­பான்­மைக்கு, குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­ப­டலாம்” எனும் எச்­ச­ரிக்கை பதிவே வை.எல்.எஸ்.ஹமீட் தனது முக­நூலில் இறு­தி­யாக பகிர்ந்­தி­ருந்த பதி­வாகும்.

வை.எல்.எஸ்.ஹமீட் என்­பவர் இலங்கை முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் இலை­மறை காயாக இருந்த பெரும் ஆளு­மை என்று சொல்­வது பிழை­யா­காது. கடந்த புதன்­கி­ழமை மாலை 6 மணியிருக்கும். மறுநாள் வெளியாகும் ‘விடி­வெள்ளி’ வார இதழின் செய்­தி­யொன்றை உறுதி செய்­து­கொள்­வ­தற்­காக அவ­ருக்கு எடுத்த அழைப்­புக்கு பதில் கிடைக்­க­வில்லை. பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ரிடம் “அவ­ருக்கு அழைப்­பெ­டுத்தேன். இப்­போது தொழு­கைக்கு சென்­றி­ருப்பார். மீண்டும் அவரே எனக்கு அழைப்­பெ­டுப்பார்” என்று கூறி­விட்டு அடுத்­த­டுத்த வேலை­களை கவ­னித்­துக்­கொண்­டி­ருந்தேன். இருப்­பினும் வை.எல்.எஸ்.இன் அழைப்பு கிடைக்­கா­மையால், அடுத்த வாரம் (இந்த வாரம்) குறித்த செய்­தியை விரி­வாக பிர­சு­ரிக்­கலாம் என்று ஆசி­ரி­ய­ரிடம் கூறிச் சென்றேன். மறுநாள் காலை அலு­வ­ல­கத்­துக்குள் நுழையும் போது, சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் வை.எல்.எஸ்.இன் மரணச் செய்­தியை கூறினார். ஒரு நிமிடம் ஆடிப்­போனேன்.
என்­னைப்போல் பல­ருக்கு வை.எல்.எஸ்.ஹமீடின் மரணச் செய்தி பேரி­டி­யா­கவே அமைந்­தி­ருந்­தது. அந்த அள­வுக்கு சினே­கத்­து­டனும் கனி­வா­கவும் எம்முடன் பழகியவர் அவர்.

யார் இந்த வை.எல்.எஸ்.ஹமீட்?
மர்­ஹூம்­க­ளான யூனுஸ் லெப்பே, ஆசியா உம்மா தம்­ப­தி­க்கு சிரேஷ்ட புதல்­வ­ராக 1962 நவம்பர் மாதம் 2 ஆம் திகதி கல்­மு­னையில் பிறந்தார் வை.எல்.எஸ்.ஹமீட். அவ­ருடன் பிறந்த உடன்­பி­றப்­புகள் ஒன்­பது பேர். 1988 ஆம் ஆண்டு தந்­தையின் மர­ணத்­திற்கு பிறகு மூத்த சகோ­த­ர­னாக நீண்ட காலம் குடும்­பத்தை வழி­ந­டத்த தாயா­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யவர்.

கல்­முனை அல் பஹ்­ரியா வித்­தி­யா­ல­யத்தில் ஆரம்ப பிரிவில் கல்­வி­கற்ற இவர், இடை­நிலை, உயர்­தர கல்­வியை கல்­முனை உவெஸ்வி கல்­லூ­ரியில் பயின்றார். அத்­தோடு, சட்டக் கல்­வியை பயின்று சட்­டத்­த­ர­ணி­யா­ன­துடன், கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர், கொழும்பு திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டத்­துறை முது­மானி பட்­டத்தை பெற்றார். பின்னர், கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் PhD கற்­கையை தொடர்ந்­துக்­கொண்­டி­ருந்தார். அவர் தொடர்ச்­சி­யாக மரணம் வரை கற்றல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுக்­கொண்டே இருந்தார்.

இன்ஷா ஹமீ­துடன் திரு­மண பந்­தத்தில் இணைந்த அவ­ருக்கு மூன்று பெண் ­பிள்­ளைகள் இருக்­கின்­றனர். கணக்­கியல் துறையில் ஒரு­வரும், சட்­டத்­து­றையில் ஒரு­வரும் பொறி­யியல் துறையில் ஒரு­வரும் கற்றுத் தேர்ந்­துள்­ளனர்.

அர­சியல் பிர­வேசம்
88, 89 காலப்­ப­கு­தியில் அர­சி­யலில் ஆர்வம் காட்­டிய வை.எல்.எஸ்.ஹமீட் முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக உறுப்­பி­னர்­களில் பிர­தா­ன­மான ஒரு­வ­ராக இருந்தார். அத்­தோடு, மு.கா. ஸ்தாப­கத்­த­லைவர் எம்.எச்.எம்.அஷ்­ரபின் அம்­பாரை மாவட்ட அலு­வ­ல­கத்தின் பிர­தான நிரு­வா­கி­யாக இருந்து அவரின் அர­சியல் மற்றும் நட­வ­டிக்­கை­களை செயற்­ப­டுத்­தினார். அத்­தோடு, கல்­மு­னையில் இருந்த அஷ்­ரபின் அலு­வ­ல­கத்தின் பிர­தான கட்­டுப்­பாட்­டா­ள­ராக இருந்து பல்­வேறு திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­ததை மு.கா.வின் முன்­னாளர் செய­லாளர் எம்.ரி. ஹச­னலி உறு­திப்­ப­டுத்­தினார்.

மேலும், முஸ்லிம் காங்­கி­ரஸின் உதவிச் செய­லா­ள­ராக பதவி வகித்த வை.எல்.எஸ். 2005 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து பிரிந்து அகில இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ் (தற்­போது அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்) எனும் கட்­சியை ஸ்தாபிப்­பதில் பிர­தா­னி­யாக செயற்­பட்டார். அன்­று­முதல், மர­ணிக்கும் வரை அவரே அக்­கட்­சியின் செய­லா­ள­ரா­கவும் பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்­டிற்கு பின்னர் கட்சித் தலை­மை­யுடன் ஏற்­பட்ட கருத்து முரண்­பா­டுகள் கார­ண­மாக அவரை கட்சி செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட போதிலும் சட்ட ரீதியாக கட்சிமீதான அதி­கா­ரங்­களை வை.எல்.எஸ். ஹமீதே பெற்­றி­ருந்தார்.

மேலும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் ஆச­னத்தை வெல்­ல­மு­டியும் என்ற நம்­பிக்­கையில் வை.எல்.எஸ்.ஹமீட் கடந்த பொதுத் தேர்­த­லின்­போது தனித்து கள­மி­றங்கி போட்­டி­யிட வேண்டும் என்று பிடி­வா­த­மாக இருந்தார். அத்­தோடு, குறித்த தேர்­தலில் அவர் மயில் சின்­னத்தில் அம்­பாறை மாவட்­டத்தில் போட்­டி­யிட்­டி­ருந்தார்.

சட்ட மேதை­யாக
சட்­டத்­த­ர­ணி­யான வை.எல்.எஸ். சட்­டத்­துறை சாந்த விட­யங்­களில் மிகத் தெளி­வான விளக்­க­மு­டை­ய­வ­ராக இருந்தார். அர­சி­ய­ல­மைப்பு முதல் முஸ்லிம் தனியார் சட்டம் வரை அனைத்து விட­யங்­க­ளிலும் பூரண அறி­வைக்­கொண்­டி­ருந்தார். கடந்த காலங்­களில் அர­சியல் யாப்பு கேள்­விக்­கு­றியாக்­கப்­பட்­ட­போது அவற்­றிற்கு மிகக் காத்­தி­ர­மான முறையில் பதி­லடி கொடுக்கக் கூடி­ய­வ­ரா­கவும் இருந்தார். விடி­வெள்ளி தின­சரி பத்­தி­ரி­கை­யாக வெளி­யா­ன­போது சட்டம் தொடர்­பான விளக்­கத்தை தொடராக வழங்­கி­வந்தார். அத்­தோடு, ஏனைய பத்­தி­ரிகைகள் மூல­மா­கவும் சட்ட ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் தெளி­வூட்­டல்­க­ளையும் தொடர்ச்­சி­யாக வழங்­கினார்.

இதற்கப்பால், முகநூல் ஊடாக தொடர்ச்­சி­யாக சட்டம் தொடர்­பான விளக்­கங்­க­ளையும் அர­சியல் கொள்கை மற்றும் நெருக்­க­டி­க­ளின்­போது சரி­யான வழி­காட்­டல்­களையும் வழங்கி வந்தார். இதன்­மூலம் அடுத்த சந்­த­தி­யி­ன­ருக்கு மிகவும் பிர­யோ­ச­ன­மான காத்­தி­ர­மான கருத்­து­களை கடத்­து­வ­தற்கு வழி­வ­குத்தார் என்று சொன்­னாலும் மிகையா­காது.
சட்ட நுணுக்­கங்­களை மிகவும் கற்­ற­றிந்த அவர் அர­சியல் ரீதி­யிலான நெருக்­க­டி­களை சந்­தித்­த­போது முறை­யான கருத்­துப் ­ப­ரி­மாற்­றங்கள் ஊடாக முஸ்­லிம்­களின் நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

நீதியின் பக்கம்
அத்­தோடு, தான் அங்­கத்­துவம் வகித்த அர­சியல் கட்­சி­யோடு மட்டும் நின்று பிடி­வா­த­மாக இருக்­காது அர­சியல் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளின்­போது முஸ்லிம் சமூகம் எடுக்க வேண்­டிய தீர்­மா­னங்கள் மற்றும் அர­சியல் போக்­குகள் குறித்து வெளிப்­ப­டைத்­தன்­மையுடன் பேசி­யி­ருந்தார்.

கட்­சி­யி­லி­ருந்து திட்­ட­மிட்டு ஓரங்­கட்­டிய சந்­தர்ப்­பங்­களில் நீதிக்­கா­கவும் நியா­யத்­துக்­கா­கவும் தனித்­து­நின்று போராடி வெற்­றி­பெற்­றி­ருந்தார்.
தற்­போ­தைய அர­சியல் ரீதி­யி­லான நெருக்­க­டி­யான நிலையில் வை.எல்.எஸ்.ஹமீட் என்­ற­தொரு ஆளு­மையின் இழப்­பா­னது பேரி­ழப்பு என்­றுதான் சொல் வேண்டும்.
ஊழலற்ற, ஊழலுக்கு துணைபோகாத, நேர்மையான ஓர் அரசியல்வாதியாக, சிறந்த நிர்வாகியாக, சட்ட மேதையாக நம் மத்தியில் வாழ்ந்து வை எல்.எஸ்.ஹமீட் எம்மை விட்டும் பிரிந்துள்ளார்.

கடந்த புதன்­கி­ழமை திடீர் சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட வை.எல்.எஸ்.ஹமீட், வியா­ழக்­கி­ழமை (மே.25) அதி­காலை உயி­ரி­ழந்தார். இன்­னா­லில்­லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்­னாரின் ஜனாசா தெஹி­வளை ஜும்ஆப் பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் பெருந்­தொ­கை­யான மக்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தமை அவர் சம்­பா­தித்த உற­வு­க­ளுக்கு சான்­றாக அமைந்­தி­ருந்­தது.
அன்­னாரின் நற்­க­ரு­மங்­களை இறைவன் பொருந்­திக்­கொள்­வ­துடன் ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவனத்தை அருள்வானாக.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.