(எம்.வை.எம்.சியாம்)
குருநாகல் வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் கடமையில் இணைந்துகொண்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் உருக்கமான குரல்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
4 வருடங்கள், 6 நாட்களின் பின்னர் மீண்டும் தான் குருநாகல் வைத்தியசாலையில் கடமைகளை ஆரம்பித்ததன் மூலம் துன்பத்துக்கு பிறகு அல்லாஹ் மாபெரும் வெற்றியை தந்திருப்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்கிருந்து என்னை பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அழைத்துச் சென்றார்களோ இன்று அதே இடத்துக்கு திரும்பவும் சுமார் 4 வருடங்களும் 6 நாட்களுக்கும் பிறகு உங்களுடைய பிரார்த்தனைகள் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளேன்.
பணிக்கு திரும்பிய பின்னர் என்னுடைய நண்பருக்கு பதவியை பொறுப்பேற்றதன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி புகைப் படமொன்றை அனுப்பினேன். பின்னர் அந்த புகைப்படத்தை நாட்டிலுள்ளவர்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் என்னை விரும்புகின்ற அனைவரும் வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்கள். அதிகளவானோர் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உரையாடினார்கள். வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். அதனை பார்க்கும் போது துன்பத்துக்கு பிறகு அல்லாஹ் மாபெரும் வெற்றியை வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் நான் பாக்கியசாலி.
நான் காணாத தொலைதூரத்தில் இருந்து பல உறவுகள் எனக்காக துஆ செய்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்னர் நான் அனுபவித்த துன்பத்தின் போதுகூட கண்ணீர் சிந்தவில்லை. அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனைகளை மாத்திரமே செய்தேன். இருப்பினும் இன்று என்னை நேசிக்கும் உறவுகளை நினைத்து அவர்கள் என் மீது கொண்டுள்ள அன்பை கண்டு கண்ணீர் சிந்துகிறேன். எனக்காக பிரார்த்தித்த உறவுகளுக்காக எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
என்னுடைய சந்தோஷம், துன்பங்களை தங்களுடைய சந்தோசமாகவும் துக்கங்களாகவும் ஏற்றுக்கொண்டுள்ளதை கண்டு பூரிப்படைகிறேன். அல்லாஹ் ஒருவரை கண்ணியப்படுத்த வேண்டும் என்றால் அதனை எவ்வாறாவது நிறைவேற்றுவான் என்பதை உணர்கிறேன். எனக்காக பிரார்த்தனைகளை செய்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.-Vidivelli