காலித் ரிஸ்வான்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21-05-2023) முதன் முறையாக சவூதி அரேபிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணமானர்.
இந்த பயணத்தை ஏற்பாடு செய்த நிறுவனத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரரின் வழிகாட்டல்களின் கீழ் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இக் குழுவினர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஸ்டெம் செல் (Stem Cell) ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி என்ற சவூதி பெண்மனியும் இவ்வாராய்ச்சிக் குழுவின் ஒரு விண்வெளி வீராங்கனையாக விண்வெளிக்கு பயணமாகியுள்ளார். இப்பயணத்தின் மூலம் முதல் முதலாக விண்வெளி நோக்கி பயணமான சவூதி அரேபிய பெண்மணி என்ற வரலாற்றுப் பெருமை வாயந்த ஒரு சாதனையையும் இவர் நிகழ்த்தியுள்ளார். ரய்யானாவுடன் இந்த பயணத்தில் ரோயல் சவூதி விமானப் படையின் போர் விமானி அலி அல்-கர்னியும் இணைந்து கொண்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, பர்னாவியும் அல் கர்னியும் மேலும் இரண்டு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) முன்னரே இருக்கக்கூடிய ஏழு விண்வெளி வீரர்களுடன் சென்று இணைந்தனர். இந்த விண்வெளிப் பயணமானது அறிவியல் துறைக்கு பங்காற்றக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு விடயமாக அமைகிறது, இந்த பயணத்தில் மைக்ரோ கிராவிட்டி அமைப்பில் 14 ஆராய்ச்சி சோதனைகள் செயல்படுத்தப்படவுள்ளது. அத்தோடு அவர்கள் செல் உயிரியல், மனிதன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் மைக்ரோ கிராவிட்டி சூழலில் க்லவுட் சீடிங் (Cloud Seeding) பற்றிய ஆய்வுகளையும் நடாத்தவுள்ளனர்.
பர்னாவி மற்றும் அல்-கர்னி ஆகிய இருவரும் சவூதி அரேபிய அரசாங்கத்தின் பூரண அனுசரனையுடன் இப்பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக்ஸியம் ஸ்பேஸ் ஏற்பாடு செய்த இந்த தனிப்பட்ட பயணத்தின் முதல் கட்டமாக, நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற SpaceX விண்கலம் ஏவப்பட்ட 16 மணி நேரத்திற்குப் பின் ISS உடன் சென்று இணைந்துள்ளது. சவுதி அரேபியா இந்த வரலாற்று சிறப்புமிக்க பணியில் பங்கேற்பது நாட்டில் விண்வெளி அறிவியல் கல்வியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
இவ்வீரர்கள் ஒரு வார கால ஆராய்ச்சியின் முடிவின் பின்னர் தாயகம் திருப்புவர் என எதிர்பார்க்கப் படுகின்றது. 1985 இன் பின்னர் அக்கால சவூதி இளவரசரால் ஏவப்பட்ட விண்கலத்தை தொடர்ந்து இது தான் சவூதி அரேபியா ஒரு விண்வெளிப் பயணம் தொடர்பான விவகாரத்தில் சம்மந்தப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா விண்வெளி ஆணையத்தை நிறுவியது மற்றும் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களையும் கடந்த ஆண்டிலருந்து நடைமுறைப்படுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.- Vidivelli