கஷ்டத்திலும் கல்வியைக் கைவிடாத மக்களின் கதை!

0 1,340

சபீர் மொஹமட்

இலவசக் கல்வியை கருப்பொருளாக கொண்டுள்ள இலங்கையின் கல்வி முறையானது தற்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நவீன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழு உலகமும் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இலங்கையின் கல்வி நிலையானது இன்னமும் அவற்றை சரியான முறையில் அணுகுவதற்கு முடியாமல் தடுமாறிய வண்ணமே உள்ளது.

Public Finance.lk இணையத்தளத்தின் படி இலங்கையில் கல்விக்காக அரசு ஒதுக்குகின்ற நிதி அயல் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது.

image.png

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இலங்கை அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் கல்விக்காக செலவு செய்துள்ள தொகை 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் முறையே 1.08, 1.05 மற்றும் 1.09 ஆகும்.

image.png

இலவசக் கல்வி இருப்பதாக நாம் கூறும் இலங்கையில் இன்றைய நிலை இதுதான். கல்வி அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 10,146 ஆகும். மேலும் அங்கு கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை 4,048,937 ஆகவும், அங்கு கற்பிக்கும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 241,054 ஆகவும் உள்ளது. இந்த அத்தனை பாடசாலைகளிலும் கற்கின்ற  அனைத்து மாணவர்களும் எவ்வித இன, மதம், சாதி வேறுபாடுகளும் இன்றி சமமான கல்வியையே பெறுகின்றார்கள். ஆனால் தலைநகரில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற பாடசாலையை சேர்ந்த ஒரு மாணவனும், தொலைதூர கிராமப்புறப் பாடசாலை ஒன்றை சேர்ந்த மாணவனும் ஒரே அளவான கல்வித்தகுதியை கொண்டிருந்த போதிலும், வேலை சந்தையில் அவர்களுக்கு ஒருபோதும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இன்றும் கிராமப்புறங்களில் சகலவிதமான கல்வித்தகுதிகள் இருந்தும் ஏற்றத்தாழ்வு காரணமாக தொழில் அற்றவர்கள் ஏராளம்.

https://moe.gov.lk/wp-content/uploads/2023/02/School_Census-2021_Summary-Tables-Final-Report1.pdf

இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான காரணம் வளங்களை விநியோகிப்பதில் உள்ள சமத்துவமின்மையும் அதிகாரிகள் காட்டுகின்ற பாகுபாடும் ஆகும். உதாரணமாக, கொழும்பு றோயல் கல்லூரியில் படிக்கின்ற ஒரு மாணவனிடம், அவனது எதிர்கால திட்டம் என்ன என்று கேட்டால், அடுத்த 05 அல்லது 10 ஆண்டுகளுக்கான அவனது திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நான் முன்பு குறிப்பிட்ட கிராமப்புற ஒரு பாடசாலை மாணவனிடம் இதே கேள்வியை நீங்கள் கேட்கும்போது, அவனுடைய எதிர்காலம் குறித்து அவனால் உறுதியாக எதையும் கூற முடியாது. இதற்குக் காரணம் அந்தக் மாணவர்கள் அல்ல. மாறாக நாம் வாழ்கின்ற பாகுபாட்டுடன் கூடிய சமூகமும் நாம் பெருகின்ற கல்வி அறிவுமே ஆகும். இதற்கு வேறு எந்த ஜாதி, மதம், வேறுபாடுகளும் காரணமல்ல.

இதனை இன்னும் எளிய உதாரணம் ஒன்றுடன் விளக்கினால், கொழும்பு 07 றோயல் கல்லூரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் கூட இல்லாத கொழும்பு 15, புளூமெண்டல் பிரதமர் கல்லூரியின் பிள்ளைகளுக்கு தமது எதிர்காலமல்ல, தனது நாளைய தினம் பற்றிக்கூட நிச்சயமற்ற ஒரு நிலையே காணப்படுகின்றது. கொழும்பு 15 பிரதமர் கல்லூரியின் மின்சார நிலுவையை கூட கட்ட முடியாமல் மின்சாரம் துண்டிக்கப்படுகின்ற நாள் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இது போன்ற ஒரு சூழ்நிலை ஒரு பாடசாலைக்கு ஏற்படுவதற்கு  அதிகாரிகள் மட்டும் காரணமல்ல.  அந்த குழந்தைகள் வாழ்கின்ற சமூகம் சூழல் அவர்களுடைய கலாசாரம் போன்ற பல காரணங்களும் அவர்களுக்கு கல்வியை பெறுமதியற்ற ஒன்றாக மாற்றியுள்ளது. ஏனென்றால் கல்வியை விட அவர்களுக்கு தத்தமது வாழ்க்கை பற்றியும் எவ்வாறு இன்றைய நாளை கழிப்பது பற்றியும் சிந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் சுட்டெரிக்கும் வெயிலிலே, யாரிடம் கேட்டாலும் எனக்குத் தெரியாது என்கின்ற பிரதமர் கல்லூரியை எப்படியோ கண்டுபிடித்தேன். பள்ளிக்குள் நுழைந்து அதிபரின் அறையில் அமர்ந்தவுடன் மனதினுள் இருக்கும் பதற்றத்தாலும் வெளியில் இருக்கும் வெப்பத்தாலும் வியர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்தே, அதிபர் மின்விசிறியை இயக்கினார்.

“எங்கள் பாடசாலையில் மின்சார நிலுவை எழுவதாயிரம் ரூபாய். அதைக் கூட செலுத்த முடியாமல் நாங்கள் இங்கே தவித்துக் கொண்டிருக்கின்றோம். இதோ பாருங்கள், நான் இது பற்றி இந்த பாடசாலையில் பழைய மாணவர்களுடைய வட்ஸஅப் குழுவில் கூறியிருக்கின்றேன். ஆனால் இன்னும் எவருமே இதற்கு பதில் அளிக்கவில்லை”

அத்துடன் இந்த பாடசாலையில் அதிபர் திரு. சிசிரசிரியுடைய கருத்துப்படி இந்த பாடசாலை இந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு பிரதானமான ஒரு காரணம் மாணவர்களுடைய பெற்றோர் இவர்களின் கல்வியில் காட்டுகின்ற அலட்சியப் போக்கே ஆகும்.

“இந்தப் பெற்றோருக்கு பல லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கழுத்திலும் காதிலும் அணிந்துகொள்ள பணம் உள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து புதுப்புது ஆடைகளை வாங்க பணம் இருக்கிறது. தினமும் இரவு கொத்து பாராட்டா பிரியாணி சாப்பிட பணம் இருக்கின்றது. ஆனால், தங்கள் குழந்தைகள் படிக்கும் பாடசாலைக்கு வசதி சேவைக் கட்டணத்தைச் செலுத்த அவர்களிடம் பணம் இல்லை. இவர்களில் அனேகமான பெற்றோர்கள் அன்றாட கூலி வேலை செய்கின்ற தொழிலாளர்கள். அதிகமானோர் கொழும்பு நகரத்திலேயே சுத்தம் செய்கின்ற தொழிலை செய்பவர்கள். ஆனால் இந்தப் பாடசாலையை கொஞ்சம் சுத்தம் செய்ய அழைப்பு விடுத்தால் அதற்கு மட்டும் யாரும் இல்லை”

அதிபர் இவ்வாறு கூறும்போது, உண்மையிலேயே இலங்கையில் இலவசக்கல்வி இருக்கின்றதா என்று தோன்றுகிறது. பாடசாலையை மூடுகின்ற நாட்கள் நெருங்கும் போது,  அரசும் அதிகாரிகளும் எவ்வித கரிசனையும் காட்டாதபோது அதிபர் பெற்றோரிடம் பணம் கேட்பதில் வியப்பில்லை. அதேபோல் உண்மையிலேயே இலங்கையில் கல்வி என்பது இலவசமா அல்ல அது சமூகத்தில் ஒரு வகுப்பினருக்கு மாத்திரமே சகல வசதிகளையும் கொண்டதாக இலவசமாக கிடைக்கின்றதா என்ற யதார்த்த கேள்வி இதுபோன்ற பாடசாலைகளுக்கு சென்றால் எழுகின்றது.

அத்துடன் இந்த பெற்றோரின் வாக்குகளைப் பெற்று கொழும்பு மாநகர சபைக்கு தெளிவாகின்ற மக்கள் பிரதிநிதிகள் கூட தங்களுக்கு வேண்டியவர்களை பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கு செல்வதற்கு உதவி செய்கின்றார்கள். ஆனால் தனது வாக்காளர்களின் பிள்ளைகள் படிக்கின்ற இது போன்ற பாடசாலைகளை மேம்படுத்த எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதில்லை, என பிரதமர் வித்தியாலயாத்தின் அதிபர் எமக்கு தெரிவித்தார்.

நாம் அனைவரும் அடிக்கடி சொல்வது போல், அரசியல்வாதிகள் எப்போதுமே தமது சொந்த நலனுக்காக மட்டுமே செயல்பட முயற்சிப்பார்கள். மேலும், மக்கள் அறிவால் முன்னேறுவதை அரசியல்வாதிகள் தடுக்கின்றார்கள் என்ற உண்மையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும் .

இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை நாங்கள் மன்னாரிலே கண்டோம். 1990களில் துப்பாக்கி சத்தத்திற்கு மத்தியில் தமது உயிரை காத்துக்கொள்ள உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு அகதிகளாக தாய் மண்ணில் மன்னார் மக்கள் விரட்டப்பட்டார்கள். ஆனால் இன்று அம்மக்கள் தமக்கு நேர்ந்த கதி தமது எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாதிருக்க கல்வியே ஒரே வழி என்பதை உணர்ந்தவர்களாக இருப்பதை நாங்கள் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அவதானித்தோம்.

இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தில் மன்னார் ஒரு மத்திய நிலையம் என்பது நாம் அனைவரும் அறிந்த பிரபலமான ரகசியம். ஆனாலும் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவர்களைத்தான் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களில் போது மன்னார் பொலிஸார் எப்போதும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வது. இந்த பாடசாலை மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அதிகாரிகளின் கவனம் குறைவாக இருந்தாலும் பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் விடாமுயற்சி காரணமாக இந்தப் பாடசாலை ஒரு தலை சிறந்த பாடசாலையாக மன்னார் மாவட்டத்திலே  திகழ்கின்றது.

“இலங்கையில் உள்ள ஏனைய பாடசாலைகளைப் போலவே, இந்த பாடசாலையும் உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா போன்ற பிரச்சினைகளால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டது. மிகவும் ஏழ்மையான பெற்றோரின் பிள்ளைகளும் வசதி படைத்த பெற்றோரின் பிள்ளைகளும் கலந்தே இந்த பாடசாலையில் கற்கின்றார்கள். எத்தனை பிரச்சனைகள், இடையூறுகள் வந்தாலும் எங்கள் ஆசிரியர்கள் இந்தக் குழந்தைகளை விட்டுக் கொடுப்பதில்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள். அண்மைய நாட்களில், ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் காலை உணவு வழங்கினார்கள். எங்கள் பாடசாலை மாணவர்கள் தனித்தனி வகுப்புக்களாக ஒரு உண்டியலில் ஒவ்வொரு வாரமும் பணம் சேகரிப்பார்கள்.  எந்த மாணவனுக்கும் இதிலே பணம் போடலாம். இரண்டு ரூபாயில் இருந்து நூறு, இருநூறு ரூபாய் வரை மாணவர்கள் இதில் பணம் இடுவார்கள்.

பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வசூல் செய்யப்பட்ட பணம் எண்ணப்படுகிறது. சில நேரங்களில் சில வகுப்புகளில் உண்டியல்கள் காலியாக இருக்கும். சில சமயம் நல்ல பணம் வசூலாகும். அதன்பின் திங்கள்கிழமை காலைக்கூட்டத்தில் எவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் பகிரங்கமாக அறிவிப்போம். அதன்பிறகு, அதே வாரம் பாடசாலைக்கு வருகின்ற ஒரு ஏழை மாணவனுக்கு தேவையான உதவிகள் அந்த பணத்திலிருந்து செய்து கொடுக்கப்படும். யாருக்கு உதவி கிடைக்கின்றது என்பது பற்றி யாருக்குமே தெரியாது ஆனால் நிச்சயமாக நம்மை சுற்றியுள்ள ஒருவருக்கு இதிலிருந்து ஒரு நன்மை கிடைக்கின்றது என்பதை அவர்கள் அனைவரும் அறிவார்கள். இதற்குப் பொறுப்பாக ஒரு ஆசிரியர் இருக்கின்றார் அதேபோல் இந்த வேலைத்திட்டத்திற்கு நாங்கள் “பைத்துல் ஸதகா” என பெயரிட்டு இருக்கின்றோம்” அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் யூனுஸ் மஹிரி இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு – 15 மற்றும் மன்னரின் இவ்விரு கதைகளையும் கேட்கும் போது, கல்விக்கும் கல்வியுடன் கூடிய சமூக மாற்றங்களுக்கும் அதிகாரிகளின் பங்களிப்பு மாத்திரம் போதாது. மாறாக பெற்றோருக்கும் அதிலே மிகப்பெரிய ஒரு பொறுப்பு காணப்படுகின்றது.

“எங்கள் பாடசாலையில் மூன்றே மூன்று கணினிகள் மட்டுமே இருந்தன. கோவிட் காலத்தில் இந்த பள்ளி மூடப்பட்டபோது அந்த மூன்று கணினிகளும் திருடப்பட்டது. தற்போது மீண்டும் இந்த மாணவர்களுக்கு ஆளுநர் கம்ப்யூட்டர் ஒன்றை வழங்கியுள்ளார். சுமார் நான்கு மாதங்களாக இந்த பிள்ளைகளுக்கு கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. இங்கே படிக்கின்ற எந்த மாணவனும் பகுதிநேர வகுப்புகளுக்கு எதுவும் செல்வதில்லை” என மூதூர் சிங்கள மகா வித்தியாலய அதிபர் திரு.கே.ஹரிசன் தெரிவித்தார்.

2021 இன் புள்ளிவிபரங்களின்படி, 100 மாணவர்களை விட குறைவான மாணவர்கள் கற்கின்ற 2971 பாடசாலைகள் இலங்கையில் உள்ளன. அந்த எல்லா பாடசாலைகளும் கஷ்டமானவை அல்ல. ஆனால் அநேகமான பாடசாலைகள் வசதிகள் அற்ற கவனிப்பார் அற்று காணப்படுகின்ற பாடசாலைகள். தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்கள் கலந்து கற்கின்ற மூதூர் சிங்கள மகா வித்தியாலயம் வெறுமனே 89 மாணவர்கள் மாத்திரம் கற்கின்ற ஒரு கஷ்டமான பாடசாலையாகும்.

சுட்டெரிக்கின்ற பூமியில் வெப்பத்திற்கு மத்தியில் வாழ்கின்ற மக்கள் மிகவும் கடுமையானவர்கள் என நாங்கள் நினைத்தாலும் அவர்களுக்குள்ளும் மறைந்து கிடக்கின்ற மனிதாபிமானத்தை மூதூரில் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் எனக்கு உணர்த்துகின்றது. முஸ்லிம்கள் செரிந்து வாழ்கின்ற ஒரு பிரதேசத்திற்கு மத்தியில் இந்த சிங்கள பாடசாலை காணப்படுகின்றது. கல்வி சமூகம் மதம் எதுவாக இருந்தாலும் இந்த முஸ்லிம் ஊருக்கும் சிங்கள பாடசாலைக்கும் இடையே இருக்கின்ற இணைப்பை எவராலும் உடைக்க முடியாமல் போய் உள்ளது.

இந்த சிங்களப் பாடசாலையில் தமிழ் சிங்கள முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். அவர்கள் சகோதரர்களைப் போலவே வாழ்கின்றார்கள். ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல் எந்தவொரு பொறுப்புமிக்க அதிகாரியும் இந்தப்பாடசாலை பற்றியோ அல்லது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பற்றியோ சரியாக கவனிப்பதில்லை.

கடுமையான யுத்த சூழ்நிலை நிலவி பின்னர் மீண்டும் தலை தூக்கியுள்ள இந்த பாடசாலைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஒற்றுமையையும் சகவாழ்வையும் சுமந்து கற்பிக்க வருகின்ற ஆசிரியர்களுக்கு தங்கக்கூடிய சரியான விடுதி வசதிகள் கூட இந்தப் பாடசாலையில் இல்லை. ஆனால் எமது கல்வி திணைக்களம் அண்மைய நாட்களில் சகவாழ்வுக்காக என பல கோடி ரூபாய்களை தாரைவார்த்த பல சம்பவங்களையும் நாங்கள் கண்டிருக்கின்றோம். எனினும் உண்மையான தேவைகள் இங்கே இவ்வாறு குவிந்து கிடக்க எதற்காக அத்தனை கோடி ரூபாய்களை செலவு செய்தார்கள் கல்வி அமைச்சும் அதிகாரிகளும் ?

கொழும்போ மன்னாரோ அல்லது மூதூராக இருக்கலாம். இந்த அனைத்து இடங்களின் கதைகளும் எமக்கு சொல்லித் தருவது பிரிந்து வாழ்வது பற்றி அல்ல. மாறாக சேர்ந்து வாழ்வது பற்றியாகும். இனம் மதம் பிரதேசம் எதுவாக இருந்தாலும், பாகுபாடு காட்டுதல் போன்ற தீவிர அரசியல் சார்ந்த விடயங்களாக இருந்தாலும் சரி விட்டு செல்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் எவ்வளவுதான் கஷ்டமான நேரத்திலும் கைவிடாத மக்களைப் பற்றிய கதையே இது. எமது இலங்கையர்களின் அடையாளமும் இந்த பன்முகத்தன்மையே ஆகும். –Vidivelli

Leave A Reply

Your email address will not be published.