நாட்டில் மீண்டும் மத அவமதிப்பு தொடர்பான விவகாரம் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. மத பிரசாரகர்கள் மற்றும் கலைஞர்களை மையப்படுத்தி இது தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப் பின்னணியில் அண்மைய நாட்களில் பெளத்த மத அவமதிப்பு தொடர்பில், பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடாஷா எதிரிசூரிய என்ற பெண் நகைச்சுவை கலைஞர் கைது செய்யப்பட்டிருந்தார். இவருடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யூ டியூப் சனல் ஒன்றின் உரிமையாளரான மற்றொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ராஜாங்கனை சந்தாரத்ன தேரர் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் போதகரான ஜெரோம் பெர்ணான்டோ தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவரைக் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாட்டில் தங்கியுள்ள அவர் தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு முன்பிணை கோரியுள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்ணான்டோ பெளத்த, இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெளத்த மத குருவான ராஜாங்கனை சந்தாரத்ன தேரர் மற்றும் கலைஞர் நடாஷா ஆகியோர் மீது பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஜூன் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களிடையே முரண்பாட்டைத் தோற்றுவிக்க இவர்கள் முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் அரசாங்கம் வேண்டுமென்றே கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைப் பழிவாங்கும் நோக்கிலும் இவ்வாறு மத அவமதிப்பு என்ற போர்வையில் கைதுகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக நடாஷா எதிரிசூரியவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், மத நல்லிணக்கத்திற்கு தடை ஏற்படுத்தும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையிலான விசேட பொலிஸ் பிரிவொன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உட்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றதே தவிர, தற்செயலாக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை என ஜனாதிபதிக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையிலேயே விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபருடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி, உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் இவ்வாறான நாசகார செயற்பாடுகளை அவதானித்து, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கப்படுவதற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பு, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பொலிஸ் பிரிவிற்கு வழங்கப்படவுள்ளதாகவம் அறிய முடிகின்றது.
மத முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் இவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயற்படுவது வரவேற்கத்தக்கதாகும். கடந்த காலங்களில் இவ்வாறு விரைந்து செயற்பட்டிருந்தால் அளுத்கம, அம்பாறை, திகன, கிந்தோட்டை போன்ற இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தடுத்திருக்கலாம்.
துரதிஷ்டவசமாக, இவற்றுக்கெல்லாம் காரணமாக அமைந்த தீவிரப் போக்கு கொண்ட பெளத்த மத குருக்கள் இன்றும் சுதந்திரமாகவுள்ளனர். இஸ்லாமிய சமயத்தை மிகக் கேவலமாக இவர்கள் விமர்சித்த போது இவர்களுக்கு எதிராக எந்தவொரு அரசாங்கமும் மத அவமதிப்பு சட்டத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு மேலும் மேலு்ம பதவிகளையும் சலுகைகளையுமே வழங்கினர். இன்று இதே நபர்கள் மீண்டும் ஊடகங்கள் முன் தோன்றி மத அவமதிப்பு தொடர்பில் பேசவும் பெளத்த மக்களைத் தூண்டவும் முனைவது வேடிக்கையானதாகும்.
மதங்களை அவமதிக்கும் வகையில் யார் கருத்து வெளியிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும் அதனை தேர்ந்தெடுத்தவர்கள் மீதும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீதும் மாத்திரம் பயன்படுத்த முனைவது ஆபத்தானதாகும். புதிய பொலிஸ் பிரிவு நீதியான முறையில் செயற்பட வேண்டும். அது கருத்துச் சுதந்திரத்தைக் கருவறுக்காது, அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு துணை போகாது சட்டத்தை நீதியாக அமுல்படுத்த முற்பட வேண்டும்.
Prev Post