ஏ.ஆர்.ஏ.பரீல்
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மதங்களுக்கு எதிராக அண்மையில் வெளியிட்ட கருத்துகள் நாட்டில் எதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன. தசாப்தகாலமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மத நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முயற்சிகளுக்கும் ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்துகள் பேரிடியாய் மாறியுள்ளன. இக்கருத்துகள் நாட்டில் மத நல்லிணக்கத்தைக் குழப்பி இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டவை என சந்தேகிக்கப்படுகிறது.
மத போதகரின் கருத்துகள் காரணமாக மதங்களுக்கிடையில் வன்செயல்கள் உருவாகி நல்லிணக்கத்துக்கும், நல்லுறவுக்கும் பாரிய சவால்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென குற்றவியல் விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி.) தெரிவித்துள்ளது.
பெளத்தம், இஸ்லாம் மற்றும் இந்து ஆகிய மதங்களை நிந்தனை செய்யும் வகையில் தெரிவித்துள்ள பொறுப்பற்றதும், அவமரியாதைக்குரியதுமான கருத்துகள் தொடர்பில் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்தார். ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்த சில மணித்தியாலங்களின் பின்பு அவர் நாட்டை விட்டும் வெளியேறிச் சென்றுள்ளார்.
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் SQ 469 எனும் விமானம் மூலம் நாட்டிலிருந்தும் வெளியேறிச் சென்றார். அவர் வெளியேறிச் செல்லும் வரை பயணத்தடை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் அவரது பயணத்தை நிறுத்த முடியாமற் போனது. மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அவர் நாட்டிலிருந்தும் வெளியேறியிருந்தார்.
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ பெளத்தம் மற்றும் இந்து மதங்களுக்கு மாத்திரமல்ல இஸ்லாம் மதத்துக்கும் எதிராகவும் பொறுப்பற்றதும் அவமரியாதையுமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒரு திருநாமத்திலேனும் ‘அன்பு’ பற்றி தெரிவிக்கப்பட்டில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறான இவரது கருத்து ‘இஸ்லாம்’ அன்பு அற்ற மதம் எனக் கூறுவதாகவுள்ளது. அதாவது, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மதம் என்ற கருத்துப்படவே அவரது கூற்று அமைந்துள்ளது.
இவரது இஸ்லாத்தைப் பற்றிய கூற்று முற்றிலும் தவறானது. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
‘இயேசுவின் சீடர்’ என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஜெரோம் பெர்னாண்டோவின் பிரசங்கம் ஆத்திரமூட்டும் வகையில் மத நல்லிணத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இஸ்லாம் மதம் பற்றி அறியாமல் ஜெரோம் பெர்னாண்டோ இவ்வாறான தவறான கருத்துகளைக் கூறியுள்ளார்’ என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளலர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பெளத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இவரது மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அவர் தன்னை இயேசுவின் சீடர் என்று கூறிக் கொண்டாலும் அவரது பிரசங்கம் ஆத்திரமூட்டும் வகையிலும் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் அவரது செயற்பாடுகள் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் அமைந்தில்லாததால் அவருக்கு எதிராக உடனடியாக விசாரணையினை ஆரம்பித்ததற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் நம்புகிறோம்.
இஸ்லாத்தைப் பற்றி அவர் குறிப்பிட்ட குறிப்பு முற்றிலும் தவறானது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அத்தோடு அவர் இவ்விடயத்தை அறியாமல் கூறியதாகத் தெரிகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க சபை கண்டனம்
நாட்டில் மதங்களுக்கிடையிலான ஐக்கியம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பனவற்றை சவாலுக்குட்படுத்தும் வகையில் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்துள்ள கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தோலிக்க சபை அவரது கருத்துக்களை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மதங்களை அவமதிக்கும் வகையில் குறிப்பிட்ட மத போதகர் ஜெரோமின் வெளிநாட்டுப் பயணம் கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட்டினால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கத்தோலிக்க சபை கண்டன அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளமை மிகவும் முக்கிய நகர்வு எனக் குறிப்பிடலாம்.
மத போதகர் ஜெரோம் கடந்த காலங்களில் பல தடவைகள் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தவராவார். அவரது மத நம்பிக்கையை பின்பற்றும் மக்கள் நாட்டில் இருப்பது உண்மையாக இருக்கலாம். என்றாலும் அவரைப் பின்பற்றும் ஒரு தரப்பினர் இருக்கிறார்கள் என்பதற்காக ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதற்கு அவருக்கு எவரும் அனுமதி வழங்கவில்லை.
மதங்களுக்கிடையிலான கலவரங்கள் பாரியளவில் அதிகரிப்பதற்கு நீண்ட நாட்கள் செல்லாது. குறுகிய காலத்திலே இது நிகழ்ந்து விட முடியும். இது பற்றி மதபோதகர் நன்கு அறிந்திருந்தும் இவ்வாறு மக்களை ஆத்திரமூட்டி ஏதோவொரு இலக்கினை அடைவதற்காக இவ்வாறாக கருத்துகளை அவர் வெளியிட்டாரா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்ச்சிகரமான முன்னெடுப்புகளுக்கு பாரியளவில் நிதியினை வழங்கும் பல்வேறு அடிப்படைவாத அமைப்புகள் உலகெங்கும் வியாபித்துள்ளன. ஜெரோம் பெர்னாண்டோ இவ்வாறான அமைப்புகளின் கையாளாக செயற்படுகின்றாரா? என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பு
இலங்கையின் அரசியலமைப்பில் பெளத்த மதத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அனைவருக்கும் தாம் விரும்பும் சமயத்தைப் பின்பற்றுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவோர் மதத்தின் நம்பிக்கைகளுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக செயற்படுவதற்கு எவருக்கும் இயலாது என்பதும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக சில வெளிநாட்டு ஊடகங்கள் ஊடாகவும் குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்தோடு இதற்கு முன்பு இவர் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய அறிக்கைகள், கருத்துகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவர் அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டவரா? அல்லது அவர்களின் கையாளா? என்பது பற்றியும் ஆராய வேண்டும்.
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ
‘போர்ன் எகேன்’ Born Again மத குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட மதபோதனை நடவடிக்கைகள் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளன. இதற்கு ஜெரோம் பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு காலத்தில் வர்த்தக விளம்பரங்களில் ஈடுபட்ட ஒரு மொடல் ஆவார். அத்தோடு கிரிக்கெட் விளையாட்டு வீரருமாவார். இலகுவில் அடுத்தவர்களைக் கவர்ந்திழுக்கும் தோற்றம் அவரிடமிருந்தது. இதை அவதானித்த போர்ன் எகேன் மத குழு ஒரு குறுகிய கால எல்லைக்குள் அவரை ஒரு மத குருவாக உருவாக்கியது. ஆசிய வலயத்தின் பிரார்த்தனைகளை நடாத்தும் இயேசுவின் சீடராக அவரை நியமித்தது. இலட்சக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து ஒன்று சேர்ந்தனர். மில்லியன், பில்லியன் என்று பணம் தேடி வந்தது.
இதனையடுத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகாமையில் இந்த மத குழுவின் ‘மிரக்கல் டூம்’ என்ற பெயரில் பிரார்த்தனை நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டது. இங்கு பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பெரும் தனவந்தர்கள் வருகை தந்தார்கள். நவீன உபகரணங்கள் மற்றும் மின் அலங்காரங்கள் மூலம் இங்கு பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதிகளான அண்ணன், தம்பி இருவரும் மற்றும் அவர்களின் புதல்வர்களும் ஜெரோம் பெர்னாண்டோவை தங்களது வீட்டுக்கு அழைத்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டவர்களாவர். இவர்கள் மாத்திரமல்ல இந்நாட்டின் பெயர்போன அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பெரும்பாலானோர் போர்ன் எகேய்ன் குழுவினரின் ஆதரவாளர்கள். மற்றும் இக்குழு மீது நம்பிக்கை கொண்டவர்கள் அற்புதங்கள் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்பு இதற்கு ஏமாந்து கோடிக்கணக்கில் நிதி அன்பளிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். இதனால் எவரும் ஜெரோம் பெர்னாண்டோவை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான விசாரணையில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மத போதனை நிலையம் அமைப்பதற்கு ஒரு செங்கல் 5 இலட்சம் ரூபாய் வீதம் பல செங்கல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவரது சொத்துகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை ஆரம்பிக்க சட்டவிரோத சொத்துகள் விசாரணை பிரிவு தீர்மானித்துள்ளது. இவருக்கு நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்க முன்பு சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் விரைவில் நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இவர் தனது மதபோதனைகளை முன்னெடுக்கும் கட்டுநாயக்கா வெயங்கொட வீதியிலுள்ள மிரகல் டோம் எனும் சமய நிலையத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இம்மத போதனை நிலையத்தை நிறுவுவதற்கு குறிப்பிட்ட சமய குழுவில் அங்கம் வகிக்கும் தொழிலதிபர் ஒருவர் மற்றும் அவரது மனைவியின் யெரால் 4 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.
லண்டன், ஐரோப்பா, அமெரிக்கா, துபாய், அவுஸ்திரேலியா, ஹொங்கொங், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து போதகர்கள் பிரார்த்தனை சேவைகளுக்கு இங்கு வருகை தந்துள்ளனர். இவர்களிடமிருந்தும் உதவித் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகைக்கு ரசீதுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்த பட்ச உதவித்தொகையாக 5 இலட்சம் ரூபா பெறப்பட்டுள்ளது.
போர்ன் எகேய்ன் குழு
போர்ன் எகேய்ன் என்பது சர்வதேச குழுவாகும். இதன் பின்னால் மறைந்துள்ள அரசியலை நாம் இனங்காண வேண்டும். இவர்களை நெறிப்படுத்துவது அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவுப் பிரிவாக இருக்கலாம். இதற்கு ஒரு பின்புலமுண்டு. இன்றும் உலகில் பலமுள்ள நாடாக முன்னிலையில் இருப்பது அமெரிக்காவே. பொருளாதார பலமும் அமெரிக்காவிடமே உள்ளது. ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுத பலமும் அவர்களிடமே உள்ளது. ஆனால் சமய பலம் அமெரிக்காவிடம் இல்லை. கத்தோலிக்க சமயத்தின் தலைமை நிலையம் வத்திக்கானில் உள்ளது. இஸ்லாத்தின் தலைமையகம் என்று கூறப்படும் ஸ்தாபனம் மக்காவிலே அமைந்துள்ளது.
போர்ன் எகேய்ன் சமய குழுவினர் ஊடாக அமெரிக்கா புதிய சமய தலைமை மத்திய நிலையமொன்றினை நிர்மாணித்து வருகிறது. அங்கு ஜெரோம் போன்ற மத போதகர்களை பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகமொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
போர்ன் எகேய்ன் சமய குழுவின் தலைவராக செயற்படும் வூபர்ட் ஏன்ஜர் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து சமய பிரார்த்தனைகளை நடாத்தியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு இலங்கைக்கு வந்தார். அவர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரார்த்தனைகள் நடாத்தியுள்ளார்.
போதகர் ஜெரோமுடன் தொடர்பில்லை என்கிறார் மஹிந்த
மதங்களுக்கு எதிராக போதகர் ஜெரோம் சமீபத்தில் வெளியிட்ட கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கும் ஜெரோம் பெர்னாண்டோவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார். இந்நாட்டில் மத நல்லிணக்கத்தை குழப்புவதற்கோ, வெறுப்புணர்வுகளுக்கோ இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கு எதிரான முயற்சிக்கு எந்தவொரு நபர் கூறும் கருத்துக்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். சிம்பாப்வே ஆயர் ஏஞ்சல் அல்லது போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் நான் பிரதமராக இருந்த போது என்னைச் சந்திக்க ஜெரோமின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அப்போது நான் மத விவகார அமைச்சராகவும் இருந்ததால் சந்திப்பு இடம்பெற்றது. இது அதிகாரபூர்வ சந்திப்பு என்பதால் ஊடகங்களில் படங்கள் வெளியிடப்பட்டன. இதற்குப் பின்பு அவர்களுடன் வேறு எந்த சந்திப்பும் இடம்பெறவில்லை. அவர்களுடன் எனக்குத் தனிப்பட்ட தொடர்பு இல்லை. மதங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட இழிவான கருத்துகளுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றார்.
மன்னிப்பு கோரத் தயார்
மத போதனையின் போது தான் குறிப்பிட்ட கருத்துகள் பெளத்தம், இஸ்லாம் மற்றும் இந்து ஆகிய மதத்தவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்காக மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாகவும் மீண்டும் விரைவில் இலங்கை திரும்புவதாகவும் மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ டுவிட்டர் பதிவின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.
இவரது சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் தேசிய வளங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான நிலையிலே அவர் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்றாலும் எனது வார்த்தைகள் உங்களை எந்த வகையிலும் மன ரீதியாக புண்படுத்தியிருந்தால் எனது பெளத்த சகோதரர்கள், இந்து சகோதரர்கள், முஸ்லிம் சகோதர சகோதரிகளிடம் மன்னிப்புக் கோர விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு சென்றுள்ள அவர் கடந்த 21ஆம் திகதி இலங்கை திரும்புவதாக அறிவித்திருந்தார். என்றாலும் அவர் நாடு திரும்பவில்லை. கட்டுநாயக்க மிரகல் டோமில் 21ஆம் திகதிய ஞாயிறு ஆராதனை இடம்பெறாது என தனது சமூகவலைத்தளத்தில் அவர் பதிவொன்றினை இட்டிருந்தார்.
கட்டுநாயக்கவில் உள்ள அவரது மிரகல் டோம் மண்டபத்தின் முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு இடமளிக்கக் கூடாது
சில மேலைத்தேய நாடுகளிலுள்ள அமைப்புகள் எமது நாட்டின் சமய மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சவாலுக்குட்படுத்தி தங்கள் இலக்குகளை எய்துவதற்கு முயற்சிக்கின்றன. அதற்காக இவ்வாறானவர்களுக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் கைமாறுகின்றன. சமய நல்லிணக்கத்தை இல்லாமற் செய்து அவ்வாறான அமைப்புகள் தங்கள் இலக்கினை வெற்றி கொள்கின்றன. அரசு இதற்கு இடமளிக்கக் கூடாது. சமய வேடங்களில் இங்கு வந்தாலும் அவர்களது முகத்திரையை கிழித்தெறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்டத்தைக் கடுமையாக அமுல்நடத்த வேண்டும்.-Vidivelli