கல் – எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரியில் என்ன நடக்கிறது?
- அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையும் பின்னணியும் -
எம்.எப். அய்னா
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி நாடளாவிய ரீதியில் பிரபல்யமான மகளிர் அரபுக் கல்லூரியாகும். குறித்த அரபுக்கல்லூரியானது இலங்கையின் முதலாவது மகளிர் அரபுக்கல்லூரி (1959) என வரலாறு கூறுகின்றது. ஆனால் இன்று அக்கல்லூரியில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகள், நோக்கத்துக்கு அப்பாற்பட்ட நடைமுறைகள் பொது வெளியிலே பேச்சுக்களை உருவாக்கியுள்ளன.
அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றில் கல்லூரியின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் இணைந்து தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கு, கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் தற்போதைய நிலைமையினை விளக்குவதாக அமைந்துள்ளது.
சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கடந்த 19 ஆம் திகதி ஆஜராகி வாதங்களை முன் வைத்திருந்தார்.
இந்த வாதங்களை மிகக் கவனமாக செவிமடுத்த அத்தனகல்ல மாவட்ட நீதிபதி கேசர சமரதிவாஹர, பாதிப்பொன்றினை தடுப்பதற்காக வழங்க முடியுமான இடைக்கால ‘இன் ஜன்ஷன்’ தடை உத்தரவொன்றினை 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் பிறப்பித்துள்ளார்.
உண்மையில், இந்த இடைக்கால தடை உத்தரவு, ஏற்படவுள்ள பாதிப்பினை தடுப்பதற்காக வழங்கப்பட்ட உத்தரவுதான். தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றிடம் கோரப்பட்டுள்ள கோரிக்கைகளின்’ ஈ’ பிரிவின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அனுமதியளித்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி கேசர சமரதிவாகரவின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கின் கோரிக்கைகள் பட்டியலில் ‘ஈ’ பிரிவானது பிரதானமாக சில விடயங்களை முன் வைத்து இடைக்கால தடை உத்தரவினை கோரியுள்ளது.
அதாவது, கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் யாப்புக்கு முரணாக நியமனம் பெற்றுள்ள, நியமனம் பெற எதிர்ப்பார்த்துள்ள மற்றும் வேறு நபர்கள் கல்லூரிக்குள் நுழைவதை, கல்லூரியின் நிதி, வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவதை , கல்லூரி நடவடிக்கைகளில் தலையீடு செய்வதை, கல்லூரியின் ஆவணங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என அந்த பிரிவூடாக கோரப்பட்டுள்ளது.
இதனைவிட அநீதியான முறையில் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள கல்லூரியின் அதிபரை மற்றும் ராலியா என்பவரை மீள பணியில் இணைக்க வேண்டும் என அப்பிரிவூடாக கோரப்பட்டுள்ளது. அத்துடன் சட்ட ரீதியான செயலாளர் என மனுவூடாக கூறப்பட்டுள்ள முதலாவது முறைப்பாட்டாளர் அக்கடமைகளை முன்னெடுக்க ஆவன செய்யப்படல் வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் விட, கல்லூரி யாப்புக்கு முரணாக நியமனம் பெற்றுள்ளதாக கூறப்படும் தற்போதைய முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் ( பிரதிவாதிகள்) உறுப்பினர்கள் மற்றும் வேறு நபர்கள் சட்ட ரீதியாக நடாத்த உள்ள பொதுச் சபை கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர்களால் கோரப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை உள்வாங்கியே அத்தனகல்ல நீதிமன்றினால் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி இது குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
1959 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி தொடர்பில் அண்மைய நாட்களில் கேள்விப்படும் தகவல்கள் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. கல்லூரி அதிபரை திடீரென இடை நிறுத்தியது முதல், கல்லூரியின் மாணவிகளின் நலன்கள் தொடர்பிலான குறைபாடுகள், நிர்வாகம் சார் விடயங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் சமூக மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்விச் சொத்துக்களுக்கு இன்று பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடியுமான பின்னணியில், இந்த கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் விடயமும் மேலெழுந்துள்ளமை கவலையளிக்கும் விடயமாகும்.
கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு அறக்கட்டளை நிறுவனமாக பார்க்கப்பட வேண்டிய நிறுவனமாகும். அதாவது இக்கல்லூரி முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியாக இயங்கிய போது, 1960 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க உதவி பள்ளி மற்றும் பயிற்சி கல்லூரிகள் சட்டத்தின் கீழும் அதற்கு கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் பிரகாரமும், கட்டணம் அறவிடும் சமய அடிப்படையிலான பாடசாலைகளை அரசுக்கு சுவீகரிக்கும் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பிரதிபலனாக 1964.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 13998 ஆம் இலக்க அரசின் விஷேட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு அறக்கட்டளை நிறுவனமாக அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரமே, அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பட்டப் பின் டிப்ளோமா பாட நெறியை தேசிய கல்வி நிறுவகம் கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்கியதாகவும், அரச பாடசாலை பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்குவதாகவும் கூறப்படுகின்றது.
இதனைவிட கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் நோக்கம், அதன் நிர்வாக செயற்பாடுகளை மேலும் ஒழுங்கமைக்கும் விதமாக 1991 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க முஸ்லிம் பெண்கள் (அரபு) கல்லூரி முகாமைத்துவ சங்கத்தின் முகாமைத்துவ சபை கூட்டிணைப்பு சட்டம் பாராளுமன்றால் இயற்றப்பட்டது.
இவற்றை மையப்படுத்தி பார்க்கும் போது, கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் நோக்கம், ஒரு அறக்கட்டளை நிறுவனத்தின் நோக்கத்தையே கொண்டுள்ளதுடன், இலாப நோக்கம் கொண்டதாக கொள்ள முடியாது.
குறித்த அரபுக் கல்லூரி பிரதானமாக ஆதரவற்ற மாணவிகளுக்கான தாருல் ஐதாம் பிரிவு, 6 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கான தாருல் அத்பால் குழந்தைகள் நல பிரிவு மற்றும் பைதுஸ் சகாத் பிரிவு என பிரிவுகளை உள்ளடக்கியது. தாருல் ஐதாம் எனும் பிரிவில் நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் ஆதரவற்ற சிறுமிகள் குறித்த கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வருவதுடன் தந்தையை இழந்த பெண் பிள்ளைகளும் உள்ளீர்க்கப்படுகின்றனர். கட்டணம் செலுத்தி கற்கும் மாணவியரும் அங்கு கல்வி பயில்கின்றனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, கல் எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரியின் தற்போதைய முகாமைத்துவ சபையின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தி, அக்கல்லூரியின் தற்போதைய நிலைமையினை படம்பிடித்துக்காட்டும் சிவில் வழக்கு அத்தனகல்ல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கின் பிரகாரம், சட்ட ரீதியான செயலர் என கூறும் நூர் மொஹம்மட் மொஹம்மட் மிப்லி, சட்ட ரீதியான பொருளாலர் எனக் கூறப்படும் அப்துல் ஹமீட் மொஹம்மட் கலீல், அக்கல்லூரியில் கல்வி பயிலும் இரு மாணவியரின் பெற்றோர்களான பிர்தெளவுஸ் மொஹம்மட் புஹாரி , மொஹம்மட் அப்னாஸ் மொஹம்மட் பர்ஹான், குறித்த கல்லூரியின் பழைய மாணவியர் சங்க தலைவி சுல்பிகார் ஜுனைட் மற்றும் செயலாளர் ஜமீலா உம்மா மொஹம்மட் அஷ்ரப் ஆகியோரே மனுதாரர்களாவர்.
வழக்கில் பிரதிவாதிகளாக மொஹம்மட் டில்ஷாத் பாசில், அர்ஷாட் மொஹம்மட் இக்பால், மொஹம்மட் பயாஸ் சலீம், மொஹம்மட் ஜமீல் அஹமட், மொஹம்மட் ரிஷாட் சுபைர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
முதலாவது பிரதிவாதி கல்லூரி யாப்புக்கு முரணாக தெரிவு செய்யப்பட்ட சட்ட ரீதியற்ற செயலாளர் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனைவிட பிரதிவாதிகளில் 1,2,3 ஆவது நபர்கள் ஒரே குடும்பத்தவர்கள் எனவும், 5 ஆவது பிரதிவாதி முன்னாள் தலைவரின் மகன் எனவும் 4 ஆவது பிரதிவாதி சட்ட ரீதியற்ற உறுப்பினர் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரகாரம் பிரதானமாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதாவது மனுதாரர்கள் சட்ட ரீதியற்ற முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் எனக் கூறும் பிரதிவாதிகளால், கல் எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளாக அவை சித்திரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கல்லூரியின் யாப்பின் பிரகாரம் முகாமைத்துவ சபையின் அனுமதி இன்றி நிதி கையாள்கையை முன்னெடுக்க முடியாது. அதாவது முதலீடுகள், நன்கொடைகள்,பங்களிப்பாளர்களின் நிதி நன்கொடைகள், கட்டணங்கள் என எந்தவகையிலான வருமானமாக இருப்பினும் அவை கல்லூரி நிதியத்தில் வைப்புச் செய்யப்பட்டு, முகாமைத்துவ சபையின் அனுமதியின் பிரகாரமே செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும். அவ்வாறு அனுமதி இன்றி செலவுக்காக அந் நிதி பயன்படுத்தப்படக் கூடாது என அக்கல்லூரியின் யாப்பில் 18 ஆவது அத்தியாயம் கூறுகின்றது.
எனினும் அவ்வாறு முகாமைத்துவ சபையின் அனுமதியின்றி 50 மில்லியன் ரூபா பணம் கையாளப்பட்டுள்ளதாகவும், கொழும்பு 13 இல் உள்ள கல்லூரியின் சொத்தான கட்டிடம் ஒன்று 68 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டு 40 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் மனுவூடாக குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் முகாமைத்துவ சபையின் உறவினர் ஒருவரின் நிறுவனம் கல்லூரியில் முதலீடுகளை செய்துள்ளதாகவும், கொழும்பு 13 கட்டிடத்தை கொள்வனவு செய்த முகாமைத்துவ சபை உறுப்பினர் ஒருவரின் உறவினர் 29 இலட்சம் ரூபாவுக்கு முதலீட்டினை செய்துள்ளதாகவும் இவை எவற்றுக்கும் முகாமைத்துவ சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என மனுதாரர்கள் கூறுகின்றனர். இது கல்லூரி யாப்பின் 11 ஆவது அத்தியாயத்துக்கு முரண் என்பது அவர்களின் நிலைப்பாடாகும்.
இந் நிலையில், கல் – எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரியில் இடம்பெறுவதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த மே 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
புண்ணிய நிறுவனமாக அல்லது அறக்கட்டளையாக செயற்பட வேண்டிய கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி தற்போது அதன் நோக்கத்துக்கு மாற்றமாக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட முயற்சிக்கப்படுவதாக மனுதாரர்கள் பரவலாக குற்றம் சுமத்துகின்றனர்.
அதன் பிரதிபலன், அக்கல்லூரியின் குழந்தைகள் நல பராமரிப்பு பிரிவு முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும், ஆதரவற்ற மாணவியரை அரவணைக்க ஏற்படுத்தப்பட்ட பிரிவுக்கும் மாணவியரை உள்வாங்குவதையும் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனைவிட கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் கற்கைகளை முன்னெடுக்கும் மாணவியரை அவர்களின் செயற்பாடுகளை மையப்படுத்தி எந்த நியாயமான காரணிகளும் இன்றி அங்கிருந்து விலக்குவதாக கூறும் மனுதாரர்கள், சமய விழுமியங்களுக்கு அமைய மாணவியரை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்புள்ள நிறுவனம் இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவது அதன் நோக்கங்களை மீறும் செயல் என குறிப்பிடுகின்றனர்.
முஸ்லிம்களின் வக்பு சொத்தாக கருதப்படும் இந்த கல்லூரியில், மாணவியரின் விடுதிகள் வரை நிர்வாக சபை உறுப்பினர்கள் சிலர் செல்வதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், பெண் பிள்ளைகளின் விடுதி வரை அத்துமீறும் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.
க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுத இருந்த 17 வயது ஆதரவற்ற மாணவி ஒருவர், இவ்வாறு விடுதிக்குள் அத்துமீறியதாக கூறப்படும் முகாமைத்துவ சபை உறுப்பினர் ஒருவர் எனக் கூறப்படும் நபரின் இடையூறுகளுக்கு உள்ளானதால், கல்லூரியில் இருந்து சென்று, ரண்முத்துகல சிறைச்சாலையில் வைக்கப்பட்ட பின்னர் தற்போது எதிர்காலமே சூனியமாகி தொழில் ஒன்றில் ஈடுபடுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாக படம்பிடித்துக்காட்டும் விதமாக இந்த மனு 98 விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றது.
நீதிமன்றம் முன் உள்ள வழக்கில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் கவலையளிக்கும் நடக்கக் கூடாத ஆரோக்கியமற்ற விடயங்களாகும்.
எனவே வழக்கு விசாரணைகள் எவ்வாறிருப்பினும், முஸ்லிம் பெண்களின் கல்விச் சொத்தான கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் மீட்சி மற்றும் அதன் இருப்பு தொடர்ச்சியான சேவையை உறுதி செய்யும் விதமாக அதன் எதிர்காலம் அமைய அனைத்து தரப்புகளும் முன்வர வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.- Vidivelli