இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
கடந்த (21.05.2023)ஞாயிறு திவயின வாராந்த பத்திரிகையில்
பிரசுரமான ஆக்கத்தின் தமிழ் வடிவம்.
உலகக் கோப்பைக் கிண்ணத்தை பாகிஸ்தான் வெல்வதற்கு வழிவகுத்த பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான், இன்று உலக அரசியலில் அதிக அவதானம் பெறும் நபராக மாறியுள்ளார்.பாகிஸ்தான் படிப்படியாக உலக வரைபடத்தில் தனித்துவ நாடாக மாறி வரும் பின்னணியில், பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிரானதும் மக்கள் அபிப்பிராயத்தைப் பிரதிபலிக்காததுமான நாடாளுமன்ற முடிவின் பிரகாரம் அவர் அதிகாரத்தை இழக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவிய திரிபுபடுத்தப்பட்ட தீர்மானத்தை முன்னிறுத்தியதன் பின்னணியில், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய காய் நகர்த்தலும் அது தொடர்பான இராணுவ சதிப்புரட்சி குறித்தும் பாகிஸ்தானிய சமூகத்தில் வலுவான கருத்து எழுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
கட்சி தாவல் ஊடாக உருவாக்கப்பட்ட மக்கள் அபிப்பிராயத்தைப் பிரதிபலிக்காத அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டத் தொடர் ஆரம்பமாகிறது. கட்சி தாவிய எம்பிக்கள் மக்களைச் சந்திப்பது கடினமாக மாறுகிறது.
அதிகாரம் பறிபோனதால் தயங்காத இம்ரான் கான், மீண்டும் ஒழுங்கமைந்து சக்தி பெறுகிறார். மூன்று இராணுவ சதிப்புரட்சிகள் மூலம் ஜெனரல்களால் நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தாலும், இராணுவத்திற்கு எதிராக இவ்வளவு வலுவான மக்கள் போராட்டம் இதுவரை ஏற்பட்டதில்லை. இராணுவத்தின் தலையீட்டை எதிர்த்து இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் பின்னணியில்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
வன்முறைகள் தலைதூக்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு,மே 11 ஆந் திகதி கைதுகள் சட்டவிரோதமானது என்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது பாகிஸ்தான் முழுவதும் மக்கள் அவர் மீது காட்டும் அன்பை தெளிவாக பார்க்க முடிகிறது. பாகிஸ்தானின் எதிர்காலம் மற்றும் தொலைநோக்குப் பார்வையில் அவரது நேர்மையில் பாகிஸ்தானிய மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
வல்லரசுகளின் பிடியிலிருந்து விடுபட்டு, அந்தக் கொள்கைகளுக்கு விடைகொடுத்து, பாகிஸ்தானின் எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையுடன் துணிச்சலான தூய்மையான தலைமைத்துவத்தை இம்ரான் கான் வழங்கியது உலக நாடுகளுக்கு முன்மாதிரியை பிரதிபலித்த வண்ணமாகும்.
மக்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு நல்லெண்ணத்துடன் மக்களுக்காக முன்நிற்கும் ஜனரஞ்சகத் தலைவர்களை மக்கள் அரவணைக்கும் போக்கையல்லவா முழு உலகமும் வேகமாக நிரூபித்துக்கொண்டிருக்கிறது. உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்பதையல்லவா இது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
ஜனநாயக விரோதம், சதிகள், ஊழல், சுரண்டல், சமூக அநீதிகள், அடக்குமுறைகள் போன்றவற்றை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு நன்குணர்த்துகின்றன.
இம்ரான் கான் பற்றி நான் இந்த பதிவை எழுதும் தருணத்தில், துருக்கியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. உலகம் முழுவதும் செய்திகளை விநியோகிக்கும் மேற்கத்திய செய்தி நிறுவனங்களாலும் முகவராண்மைகளாலும் வெளியிடப்பட்ட கணிப்புகள் பொய்யானவை என்பது இந்த தேர்தல் முடிவுகளால் நிரூபணமாகிவிட்டது. அவ்வாறே அந்த ஆதாரங்கள் வழங்கிய கணக்கெடுப்பு முடிவுகளும் தவறானவையாக மாறிப்போயின.
இந்தத் தேர்தல் முடிவுகளால் ஜனாதிபதி எர்டோகான் தோற்கடிக்கப்படுவார் என்று மேற்குலகில் உள்ள அனைத்து சக்திவாய்ந்த செய்தி ஏகபோகங்களும் தெரிவித்தன.
துருக்கிய தேர்தலுக்கு முன் வெளியான மேற்குலகில் வெளிவரும் Economist ஆசிரியர் தலையங்கத்தில் “இவ்வாண்டின் உலகின் மிக முக்கிய நிகழ்வு துருக்கிய ஜனாதிபதி தேர்தலாகும்” என்றும், “ஜனாதிபதித் தேர்தல் துருக்கியின் எதிர்காலத்திற்கு மட்டுமல்லாது, உலகின் ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கும் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றவாறும் தலைப்பிட்டிருந்தது. என்றாலும் ஜனநாயகத்தின் காவலர்களாகத் தோன்றும் இந்த சக்திவாய்ந்த ஊடகங்கள், எகிப்தில் மக்கள் ஆணையினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நீக்கப்பட்டு இராணுவ ஆட்சி உருவாக்கப்பட்ட போதும், பலஸ்தீனத்தில் புதிய பிரதமர் உட்பட அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட போதும், ஜனநாயகத்தின் இருப்புக்காக குரல் எழுப்பாதது புதிராகவே உள்ளது.
எர்டோகான் தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் எதிர்கொள்ள வேண்டி இருந்த சவால்கள் பாரியதாகும். இந்த பின்னணியில், 2019 இஸ்தான்புல் மேயர் தேர்தலில் எர்டோகானின் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்து, எதிர்க்கட்சி வேட்பாளர் இமாமோக்லு ஜனநாயக ரீதியிலான தேர்தலில் மேயரானார்.
துருக்கி மிகவும் இக்கட்டான பொருளாதார சூழலை எதிர்கொண்டிருந்த சூழ்நிலையிலையே எர்டோகான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, துருக்கியின் நாணய மதிப்பு, பணவீக்கம், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், நில நடுக்கங்களால் 50,000 இக்கும் மேற்பட்ட இறப்புகள்,150,000 இக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாதல், சிரியா யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான அகதிகளை துருக்கி ஏற்றுக்கொண்டமை போன்ற சூழ்நிலைகளில் துருக்கிய மக்கள் மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளனர். இந்தப் பின்னணியில், இரண்டு தசாப்தங்களாக நாட்டை வழிநடத்தி வரும் பழைய முகமான எர்டோகானின் கட்சி, நாடாளுமன்றத்தில் அதிக ஆதரவைக் கொண்ட கட்சியாக மாறியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் 49.5% வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
ஐரோப்பாவின் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் அதிகாரத்தில் உள்ள நாடுகளின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கான கதவுகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. எர்டோகானின் தோல்வியை மேற்கு நாடுகள் விரும்புவதும், அவ்வாறு கணிப்பீடுகளை தொடர்ந்து வெளியிடுவதும், துருக்கியின் சுயாதிபத்தியம் மற்றும் அடையாளத்தைப் பற்றி துருக்கிய மக்களை சிந்திக்கத் தூண்டும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்காமல் துருக்கிக்கு பிரகாசமான எதிர்காலத்தை கட்டமைக்க பச்சைக்கொடி காட்டும் சூழ்நிலைக்கு துருக்கிய மக்களின் இந்த முடிவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இம்ரான் மற்றும் எர்டோகான் இந்த சகாப்தத்தில் தங்கள் நாட்டின் சுதந்திரம், சுயாதீனம் மற்றும் அபிமானத்திற்காக தைரியமாக முன் நிற்கும் ஜனரஞ்சக மக்கள் தலைவர்களாவர். உள்நாட்டு வெளிநாட்டுச் சவால்கள், சதிகள், இடையூறுகளுக்கு மத்தியில் மக்களின் ஆணையை அவர்கள் பெறுவது அந்நாடுகளின் ஊடக பிரசாரங்களின் மேலோட்ட பார்வைகளை தகர்த்து ஆழமான உண்மைகளை அந்நாட்டு மக்களால் புரிந்து கொள்ள முடிவதால் தான்.
மக்கள் அபிலாஷைகளின் பிரகாரமமைந்த மக்கள் ஆட்சியும், சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக இருப்பும், மக்கள் பங்கேற்புகளுக்கான பிரவேசங்களும், சுயாதிபத்தியத்திற்கான இயல்பான ஆளுகையும், நடுநிலையான ஊடக வகிபாகமும், அதிகாரத்தை திசைமுகப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகளும், சவால் விட முடியாத இறையாண்மையும், ஏனைய சிவில் தரப்புகளின் உள்நோக்கற்ற ஊடாட்டமான பங்கேற்பும், கொள்கை ரீதியிலான வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாடுகளுமே நாட்டின் தேசநலனுக்கு வலுச் சேர்க்கும்.
இதற்கு இனத்துவ, மதத்துவ அரசியல் என்று இல்லை. தமது சொந்த இறையாண்மைகளை வெளிநாட்டு நலன்சார் ஏகபோகங்களுக்கு தாரைவார்க்க பாகிஸ்தானிய மக்களும் துருக்கிய மக்களும் தயார் இல்லை என்பதையே நடந்து வரும் நிகழ்வுகள் காண்பிக்கின்றன.- Vidivelli