(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் இயங்கி வந்த புத்தளம் அல் சுஹைரியா மதரஸா பாடசாலை மாணவர்களுக்கு வன்முறைகளை தூண்டும் வகையில் விரிவுரைகளை நடத்தி வந்ததாக கூறி இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலி சிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர அளித்த ஆலோசனைக்கு அமைய அவர்களைக் கைது செய்ததாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கில், அல் சுஹைரியா மத்ரசா பாடசாலை மாணவர்களின் சாட்சியங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரு மாணவர்கள் அவ்வழக்கு தொடர்பில் சாட்சியம் அளித்துள்ள நிலையில், அச்சாட்சியங்கள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தம்மை ஹிஜாஸுக்கு எதிராக சாட்சியமளிக்க வற்புறுத்தியதாகக் கூறி அல் சுஹைரியா மத்ரசாவின் மாணவர்கள் சிலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையிலேயே, அதே சாட்சியங்களை மையப்படுத்தி மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரும் கடந்தவாரம் கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
அனஸ் அன்வர் முகம்மது ஜுபைல், அப்துல் ஹமீத் ஜாபர் எனும் இரு விரிவுரையாளர்கள் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திலிருந்த முகமது அசிபத் அபுபக்கர் சித்திக், ராவுத்தர் நைனா அஸநாத் மரிகார் எனும் நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்ட மா அதிபரின் ஆலோசனை என கூறிக் கொன்டு, வெற்றுக் கடதாசிகளை முன் வைத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கக்கோருவது பொருத்த மற்றது என இதன்போது சி.ஐ.டி.யினரை நோக்கி அதிருப்தி தெரிவித்த நீதிவான் குறித்த நான்கு சந்தேக நபர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் சுருக்கத்தை அடுத்த தவணையில் நீதிமன்றில் முன்வைக்குமாறும் இதன்போது நீதவான் சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிட்டார்.
நீதித்துறை தொடர்பில் நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்படாத வகையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கக் கோரும் போது குற்றப் புலனாய்வு திணைக்களம் நடந்து கொள்ள வேண்டும் என நீதவான் இதன்போது குறிப்பிட்டார். எதிர்வரும் நாட்களில் சாட்சியங்களின் தொகுப்பை பரிசீலித்து சந்தேக நபர்கள் தொடர்பில் உரிய உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக நீதவான் இதன்போது தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இதன்போது வாதங்களை முன் வைத்தது.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டும். பொலிஸார் விசாரணை நடத்தி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்கின்றனர். பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. இந்த வழக்கில் சந்தேக நபர்கள் செய்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. சந்தேக நபர்கள் எவ்வித ஆதரங்களுமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டால் ஆதாரங்களைத் தொகுக்க வேண்டும். சட்டமா அதிபருக்கோ அல்லது உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கோ எந்த முடிவும் எடுக்க முடியாது. வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் விருப்புரிமையை தவறாக பயன்படுத்த முடியாது. சட்டமா அதிபர் திணைக்களமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் எவ்வித அடிப்படையுமின்றி செயற்படுகின்றன. சந்தேக நபர்கள் நால்வருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்களை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது நீதிவான் திலின கமகே, சந்தேக நபர்கள் தொடர்பில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
தமக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியதாக சி.ஐ.டி.யினர் கூறிய போதிலும் அறிக்கைகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை.
விசாரணை அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் இரண்டு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சாட்சி சுருக்க அறிக்கைகளை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். – Vidivelli