(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருட ஹஜ் யாத்திரையின் முதலாவது குழு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இலங்கையிலிருந்து சவூதி நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளது.
எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் எதிர்வரும் 4 ஆம் திகதி 62 ஹஜ் யாத்திரிகர்கள் மக்கா நோக்கி பயணமாகவுள்ளனர்.
சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இவ்வருடம் இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டாவை வழங்கியுள்ளது. மேலதிகமாக இலங்கைக்கு 500 ஹஜ் கோட்டா வழங்குமாறு அரச ஹஜ்குழு சவூதி அரேபிய ஹஜ் அமைச்சிடம் கோரிக்கைவிடுத்தும் இதுவரை மேலதிக கோட்டா வழங்கப்படவில்லை.
இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ்ஜாஜிகளுக்கு ஹஜ் முகவர் நிறுவனங்கள் உறுதியளித்தபடி, பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில் சிறந்த சேவையினை வழங்க வேண்டுமென அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஹஜ் முகவர்களைக்கோரியுள்ளனர்.
எதிர்வரும் 4 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்கு புறப்பட்டுச் செல்லும் முதலாவது தொகுதி ஹஜ் யாத்திரிகர்களை வழியனுப்பி வைக்கும் வைபவமொன்று விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் புத்தசாசன, மதவிவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க, அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் இஸட் ஏ.எம்.பைசல் உட்பட திணைக்கள அதிகாரிகள், அரச ஹஜ் குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள், ஹஜ் முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கு கொள்ளவுள்ளன.- Vidivelli