பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடத்துவது தொடர்பில் பிரச்சினை தலைதூக்கியுள்ளது
வக்பு சபை, திணைக்களம் தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்கிறார் ஹலீம்
(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஜும்ஆத் தொழுகை தொடர்பிலான சிக்கல்கள் தலைதூக்கியுள்ளதுடன் இதனால் பல்வேறு சமூக பிரச்சினைகள் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாகவே இதற்கு உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு சுமுகமான முறையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துறைசார் மேற்பார்வை குழுக்கூட்டம் இடம்பெற்றது. முஸ்லிம் சமய விவகாரங்கள் தொடர்பான குழுக்கூட்டம் பௌத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
கொரோனா தொற்று காலத்தில் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும்ஆத் தொழுகைக்கான அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நிலைமை சுமுகமடைந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து சில பகுதிகளில் ஜும்ஆ தொழுகைக்கான அனுமதி பெறப்படாத பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்படுகின்றது. இதனால், பள்ளிவாசல் நிர்வாக சபைகளுக்கிடையேயான பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. மேலும், சமூக ரீதியிலான பிளவுகள் அதிகரித்துச் செல்கின்றன.
இதுமாத்திரமன்றி ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு ஏதுவான காரணங்கள் உள்ள பள்ளிவாசல்களும் இருக்கின்றன. குறித்த பள்ளிவாசல்கள், மற்றும் பிரதேச மக்களில் நியாயமான காரணிகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இந்த விடயம் தெடர்பில் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து முறையான விசாரணைகளை முன்னெடுத்து நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அத்தோடு, சமூக மட்டத்தில் இதனுடன் தொடர்பு பட்ட பல்வேறு அபிப்பிராயம் இருக்கிறது. இது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுவதுடன், பிராந்திய முஸ்லிம் சமய, சமூக செயற்பாடுகளை முன்னெடுக்கு சிவில் அமைப்புகள் இருக்கின்றன. அவற்றுடனும் ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கெள்வதன் ஊடாக சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க மத விவகார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.- Vidivelli