கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஒவ்வொரு சமூகத்திலும் சில மனிதர்கள் தமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ்வதுண்டு. அவ்வாறு பிறர்நலம் கருதி வாழ்பவர்கள்தான் வரலாறு படைக்கிறார்கள். அவர்களாலேதான் சமூகம் மேம்படுகிறது. அவர்களைத்தான் சமூகம் நினைவுகூரும். அவர்களது வாழ்க்கைச் சுவடுகளின் தொகுப்பைத்தான் வரலாற்றாசிரியர்களும் தேடித்திரட்டி, அவற்றிற்கு விளக்கங்கள் அளித்து, வியாக்கினங்கள் செய்து அவற்றைக்கொண்டு பின்வரும் சந்ததிகளுக்குச் சுைவயான பாடங்களையும் கற்பிக்கின்றார்கள். அவ்வாறில்லாமல் ஒவ்வொருவரும் தமக்கெனவே மட்டும் வாழ்ந்து வெறும் சந்ததிகளைமட்டும் உருவாக்கிவிட்டுச் சென்றால் அதிலே புதுமைப்பட என்ன இருக்கிறது? ஒருவரது வரலாற்றை மட்டும் படித்துவிட்டால் அதுவே எல்லா மனிதர்களின் வரலாற்றையும் படித்ததற்குச் சமமாகாதா? இந்த அறிமுகத்தின் பின்னணியிலே இலங்கை முஸ்லிம் சமூகத்துள் இன்று உருவாகியுள்ள ஒரு கேவலமான பிரச்சினையைப்பற்றி இக்கட்டுரை சில கருத்துக்களை முன்வைக்கிறது.
இலங்கை முஸ்லிம்களிடையே வரலாற்றுத் தடம்பதித்துச் சென்றவர்கள் பலர். அறிஞர் சித்தி லெப்பை, தொடக்கம் பதியுத்தீன் மஹ்மூத்வரை எத்தனையோ தன்னலம் போணாத் தலைவர்கனையும் பணியாளர்களையும் கண்ட ஒரு சமூகம் இது. இவர்களெல்லாரும் ஏதோ ஒரு வகையில் பிறருக்காக அதுவும் அவர்கள் பிறந்த சமூகத்துக்காக வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளார்கன். அதனாலேதான் அவர்களின் நாமங்கள் இன்னும் பிரகாசிக்கின்றன. அந்த வரிசையிலே மறக்க முடியாத ஒருவர்தான் என். டி. எச். அப்துல்கபூர். அவரின் சுயசரிதையை இக்கட்டுரை விபரிக்க விரும்பவில்லை. ஆனால் அந்தப் பிரபல வர்த்தகர் ஒரு கண்ணியமான முஸ்லிம். அவரின் தொழிற்துறைப் பெருமை கொழும்பிலே கொடிகட்டிப் பறந்ததை அன்னிய ஆட்சியினரே விதந்து புகழ்ந்துள்ளனர். ஆனால் அந்த வர்த்தகர் தனது நாட்டினதும் சமூகத்தினதும் மேம்பாட்டிற்காகச் செய்த கொடைகளை இங்கே பட்டியலிடாமல் அவற்றைப்பற்றிய ஓர் உண்மையை மட்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. தனது பெயர் புகழப்பட வேண்டுமென்றோ ஆட்சியாளர்களால் மதிக்கப்பட்டு பட்டமும் பதவியும் கிடைக்க வேண்டுமென்றோ அந்தப் பெருமகன் அக்கொடைகளை வழங்கவில்லை. வலக்கரம் கொடுத்ததை இடக்கரமே அறியாமல் இறைவனுக்காகவும் அவனின் படைப்புகளுக்காகவும் அர்ப்பணம் செய்த ஒரு பரோபகாரி. உதாரணமாக, இன்றைய கொழும்பு ஸாகிரா கல்லூரி இருக்கும் வரை அவரின் ஞாபகமும் நிலைத்திருக்கும்.
இஸ்லாத்தில் வக்புச் சட்டம் என்ற ஒன்றுண்டு. அந்தச் சட்டத்தின்கீழ் தனவந்தர்களும் தயாநிதிகளும் தமது சமூகத்துக்கென அவர்களின் உழைப்பால் திரட்டப்பட்ட சொத்துக்களில் சிலவற்றை நன்கொடைகளாக அவர்களது வாழ்நாளிலேயே எழுதிவைப்பது வழக்கம். இந்த வழக்கு ஏனைய சமூகங்களிலும் உண்டு. உலக முஸ்லிம்களின் வரலாற்றிலே வக்பு மூலம் உருவாகிய எத்தனையோ கல்லூரிகளையும், பள்ளிவாசல்களையும், தர்மசத்திரங்களையும், வைத்தியசாலைகளையும் மற்றும் பல பொது ஸ்தாபனங்களையும் முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் காணலாம். அவ்வாறு அர்ப்பணம் செய்வதில் முஸ்லிம் பெண்களும் முக்கிய இடம் வகித்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். அந்த வரிசையிலே வள்ளல் அப்துல் கபூர் அவர்களும் மஹரகமயில் 1931ஆம் வருடம் வக்பு செய்த ஒரு கல்லூரியும் கொழும்பில் அவர் நன்கொடை வழங்கிய காணியில் இயங்கிவந்த ஒரு வைத்தியசாலையும் அவரின் குடும்பத்தினராலேயே சமூகத்திடமிருந்து அபகரிக்கப்படுவதை அறியும்போது இந்த அவல நிலை ஏன் இந்தச் சமூகத்திற்கு ஏற்பட்டதென உள்ளம் அங்கலாய்க்கிறது. முன்னோர் சமூகத்துக்காகச் செய்த அர்ப்பணங்களை பின்னோர் நிராகரிப்பதையும் அபகரிப்பதையும் எக்காரணம்கொண்டும் ஒரு சமூகம் மன்னிக்க முடியாது. ஒரு சில நபர்களின் சுயநலத்துக்காக பொதுச் சொத்துகள் சூறையாடப்படுவதைத் தடுத்து நிறுத்தும் சக்தி இந்தச் சமூகத்துக்கு இல்லாமல் போனதேன்? ஒரு பக்கத்தில் பேரினவாதிகள் முஸ்லிம்களின் நிலங்களையும் பள்ளிவாசல்களையும் (மஹரயிலும் மெத மகாநுவரயிலும் நடந்ததுபோல்) அரசின் அனுசரணையுடன் அபகரிக்க மறுபக்கத்தில் முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே உருவாகியுள்ள சில புல்லுருவிகள் சமூகத்தின் பொதுச் சொத்துகளைச் சுயலாபம் கருதிச் சூறையாடினால் இந்தச் சமூகத்தின் எதிர்காலம் என்னவாகுமோ? எங்கே போனார்களோ முஸ்லிம் தலைவர்கள்?
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்குள்ள இரண்டு ஸ்தாபனங்களைப்பற்றியும் சில குறிப்புகளைப் பதிய வேண்டியுள்ளது. ஒன்று வக்பு சபை, மற்றது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா. வக்பு சபை நிறுவப்பட்டதன் முக்கிய நோக்கமே வக்புச் சொத்துக்களைப் பாதுகாத்து அவை நீதியுடன் நிர்வகிக்கப்படுகின்றனவா என்பதையும் கண்காணிப்பதாகும். அச்சொத்துகளுக்குப் பங்கம் ஏற்படும்போது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது வக்பு சபையின் பொறுப்பு. ஆனால் கபூரியா கல்லூரியைப்பற்றி வக்பு சபை கரிசனையற்றிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. ஊழல்களால் நாடே வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் வக்பு சபைக்குள்ளும் ஊழல் உறவாடி வேலியே பயிரை மேய்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே மெதமஹாநுவரை பள்ளிவாசல் விடயமாக வக்பு சபை நடந்துகொண்ட விதமும் இவ்வாறான சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. அதைப்பற்றிய விபரங்களை இன்னொரு கட்டுரை வெளிப்படுத்தும். இல்லையென்றால் ஏன் இப்பிரச்சினைக்கு ஆட்சியாளரின் உதவியை வக்பு சபை நாடத் தயங்குவதேன்?
இது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் பற்றிய ஒரு பிரச்சினை. சட்டத்தின் ஓட்டைகளை ஆயுதமாகக் கொண்டு கபூரியாவைக் கவர நினைப்பவர்கள் முஸ்லிம்கள்தானே என்றும் அதனால் அச்சொத்து முஸ்லிம்களிடம்தானே இருக்கப்போகிறது என்றும் நினைத்து வாழாவிருந்தால் அதைப்போன்ற முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை. அபகரிக்கப்பட்ட சொத்தை யாருக்காவது விற்றுவிட்டுப் பணமாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம். அது வேறொரு இனத்தவரின் உடமையாகிவிட்டால் போனது போனதுதான். இனிமேல் அது முஸ்லிம்களின் கைகளுக்கு வரப்போவதில்லை. முஸ்லிம் சமூகத்தை ஒன்று திரட்டி கபூரியாவைக் காப்பாற்றுவது வக்பு சபையின் மகத்தான பொறுப்பு. அது முடியவில்லையென்றால் ஏன் வக்பு சபை?
அதே குறையைத்தான் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிலும் காணக்கூடியதாக இருக்கிறது. இச்சபை உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்தின் காவல் அரண் என்றால் அது ஏன் கபூரியா விடயத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறதோ? இச்சபையின் தலைமையில் இயங்கும் எல்லாப் பள்ளிவாசல்களின் நிர்வாக சபை அங்கத்தவர்களையும் ஒரு மகாநாட்டுக்கு அழைத்து அதில் கபூரியாப் பிரச்சினையைமட்டும் ஆராய்ந்து அதை முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்து அவர்கள்மூலம் நிறைவேற்று அதிகாரம்பெற்ற ஜனாதிபதியின் கட்டளையுடன் அக்கல்லூரியை மீட்டெடுத்தாலென்ன? ஜனாதிபதித் தேர்தலுக்காய்க் காய் நகர்த்தும் இச்சந்தர்ப்பத்தை சமூகத்துக்காகப் பயன்படுத்தினாலென்ன?
இப்பிரச்சினை ஒட்டுமொத்தத்தில் முஸ்லிம்களின் தலைமைத்துவத்தின் பலஹீனத்தையே உணர்த்துகிறது. தேர்தல் வாக்குகளுக்காக அலையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு புறம், பதவியைக் காப்பாற்றிக்கொண்டு காலத்தைக் கடத்தும் வக்பு சபை அங்கத்தவர்கள் மறுபுறம், வாய்ப்பேச்சு வீரர்களைக் கொண்ட ஓர் உலமா சபை இன்னொரு புறம் என்ற தோரணையில் முஸ்லிம்களின் தலைமைத்துவம் சக்தியற்று இருக்கும்போது கபூரியா மட்டுமல்ல இன்னும் பல பொதுச் சொத்துகள் சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் கைகளைவிட்டு நீங்கலாம். இந்தத் தலைமைத்துவங்களையும் வக்பு நன்கொடைகளைக் களவாட நினைக்கும் சுய நலவாதிகளையும் அவர்களது வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடும் முஸ்லிம் வழக்குரைஞர்களையும் சமூகத்தின் சாக்கடைகள் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பதோ தெரியவில்லை.
பணத்தையே கும்பிடும் மக்கள்முன்னே
பரநயம் சமூகநயம் சேவையென்று
குணம்பேசித் திரிபவர்கள் கசடராவர்;
குனித்தமுகம் களித்தகன்ன மூடராவர்;
பிணந்தின்னும் காக்கையென ஞானம்பேசும்
பெற்றியுளார் சுயநலத்தால் உறிஞ்சிவாழ
பணங்கொடுப்பர்; சமூகமெனப் பாடுபட்ட
பாவிகளோ குப்பையென வீழ்ந்துமாய்வர்.
(கவிஞர் அப்துல் காதர் லெப்பை)
அப்துல் கபூர் போன்ற வக்பு செய்த வள்ளல்களின் நிலைமையும் இச்சமூகத்தில் இதுவாகத்தான் இருக்குமோ?
முஸ்லிம்களிடையே ஏன் இந்தத் தூக்கமோ? ஒரு காலத்தில் இச்சமூகத்தில் படித்தவர்கள் இல்லை, ஆதலால் விழிப்பூட்டுவார் யாரும் இல்லை என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால் அது இன்று இல்லையே. படித்துப்பட்டம் பெற்ற எத்தனையோ ஆண்களும் பெண்களும் முஸ்லிம் சமூகத்தில் மலிந்துள்ளனரே. அப்படியானால் ஏன் இந்தத் தூக்கம்? கபூரியா பிரச்சினை தனிப்பட்ட ஓரிருவரின் பிரச்சினை அல்ல அது சமூகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு பிரச்சினை. அண்டை நாடான இந்தியாவில் வக்பு சொத்துக்களுக்கு நடக்கும் தீங்குகளைப் பற்றி இவர்கள் அறிந்திருக்க வேண்டாமா? அங்கேயும் இனவாதமே இப்பிரச்சினைக்குக் காலாய் அமைந்துள்ளது. அந்த ஆபத்து இங்கேயும் உருவாகின்றது. ஒவ்வொரு நன்கொடைப் பத்திரத்திலுமுள்ள ஓட்டைகளை இப்போதே சிலர் ஆராயத் தொடங்கிவிட்டனர்.-Vidivelli