நாட்டின் அரசியலில் தற்போது அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆளும் தரப்பில் அமர்ந்தது.
இதேவேளை இணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தார்கள்.
சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவை எதிர்க்கட்சி பிரதம கொரடாவாகவும் நியமித்துள்ளதாக அறிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்சா ஆகிய மூவரும் ஆளும் தரப்புக்கு தாவியுள்ளமை நேற்றைய முக்கிய நிகழ்வாகும்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி தேசிய அரசாங்கம் ஒன்றினை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் துணைபோகக்கூடாது என ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவும் பிறப்பித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கமொன்றினை கருத்திற்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசாங்கமொன்றினை நிறுவுவதற்கு ஒத்துழைத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இது சமூகத்துக்கும் பயன்தரும்.
19 ஆவது திருத்தச்சட்டத்தின் படி தனித்து ஒரு கட்சி ஆட்சியமைத்தால் 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளையும் 40 பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர்களையும் பெறமுடியும். தேசிய அரசாங்கம் ஒன்று அமையுமாயின் 45 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 30 பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்நிலையில் தேசிய ஐக்கிய முன்னணி தேசிய அரசாங்கமொன்றினை நிறுவ முஸ்லிம் காங்கிரஸின் உதவியை நாடியுள்ளமை அரசியலமைப்பிற்கு முரணானது என பொது ஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘தேசிய அரசாங்கம் ஒன்று எவ்வாறு அமைய வேண்டும் என அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு வேறுபட்ட கட்சிகள் மாத்திரமே ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியும். எனவே ஐக்கிய தேசிய முன்னணி முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்த முடியாது. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டே வெற்றிபெற்றது’ என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா அரசியலமைப்பின் 46(4) மற்றும் 46(5) ஆகிய உறுப்புரைகளுக்கமைய முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசாங்கம் நிறுவுவதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தவிசாளர் எம்.நயீமுல்லாஹ் என்போர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்களின் நியமனத்துக்கு முன்பு இன்று தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றி தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
திடீர் அரசியல் மாற்றங்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
-Vidivelli