ஏ.ஆர்.ஏ.பரீல்
நாட்டில் இயங்கிவரும் வரலாற்று புகழ்மிக்க அரபுக் கல்லூரிகளில் மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி 92 வருடகால பழமை வாய்ந்த கலாபீடமாகும். கபூர் ஹாஜியாரினால் வக்பு செய்யப்பட்டு பல தசாப்த காலமாக சீராக இயங்கி வந்த கபூரிய்யா அரபுக்கல்லூரி இன்று சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. கபூரிய்யா வக்பு சொத்தல்ல அது குடும்பச் சொத்து என்று ஒரு குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் கபூரிய்யா அரபுக்கல்லூரியும் அதன் வக்பு சொத்துகளையும் பாதுகாத்துக்கொள்வதற்காக சமூகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கபூரிய்யா அரபுக் கல்லூரி தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. வக்பு ட்ரிபியுனில் மூன்று வழக்குகளும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஐந்து வழக்குகளும், மாவட்ட நீதிமன்றில் ஒரு வழக்கும் விசாரணையின் கீழ் உள்ளன.
மாவட்ட நீதிமன்றில் கபூரிய்யா அரபுக்கல்லூரியில் தீவிரவாதம் போதிக்கப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட புத்தகங்கள் போதனை செய்யப்படுவதாகவும் அதிபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் உதவிச் செயலாளரும், முன்னாள் முகாமைத்துவ சபை உறுப்பினரும் வழக்குகளை நெறிப்படுத்துபவருமான ஜி.ஏ.சி. ஹிப்பதுல்லா விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். இந்த வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
விழிப்புணர்வுக் கூட்டம்
கபூரிய்யா அரபுக் கல்லூரியும் அதன் வக்பு சொத்துகளும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் கபூரிய்யா அரபுக்கல்லூரி எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் என்பனவற்றை சமூகமயப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் அண்மையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், காதர் மஸ்தான் மேலும் முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி உட்பட மேலும் பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
ரவூப் ஹக்கீம் எம்.பி.
மர்ஹூம் அப்துல் கபூரினால் வக்பு செய்யப்பட்ட வக்பு சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மர்ஹூம் அப்துல் கபூர் கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு மஹரகமயில் 17.5 ஏக்கர் காணியை வக்பு செய்துள்ளார். கொழும்பில் கிரேண்ட்பாஸில் இந்துக்கல்லூரியின் பரிபாலனத்திற்காக 2 ½ ஏக்கர் காணியை வக்பு செய்துள்ளார்.
இந்த வக்பு சொத்துக்கள் இன்று அப்துல் கபூருடைய குடும்பத்தினருக்கும், கல்லூரிக்கும் இடையில் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இவ்விவகாரம் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வக்பு செய்யப்பட்ட நோக்கத்திற்கு மாறான நிலைப்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். இவ்விவகாரம் சுமுகமாக தீர்க்கப்படவேண்டும். அதற்கேற்றவாறு வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகிறோம். முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவொன்றினை நியமித்து, இது தொடர்பில் பிரேரணையொன்று நிறைவேற்றிக்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
ரிசாத் பதியுதீன் எம்.பி.
கபூரிய்யா அரபுக்கல்லூரி உட்பட நாட்டின் பல பகுதிகளில் வக்பு சொத்துக்கள் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கவலை வெளியிட்டார். கபூரிய்யா ஒரு தனியார் நிதியம் அல்ல, குடும்ப சொத்தல்ல, அது முஸ்லிம் சமூகத்துக்குரித்தான வக்பு சொத்தாகும். இதனை பாதுகாப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்றார்.
முஸ்லிம் பாராளுன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றில் விசேட மனுவொன்றினைத் தாக்கல் செய்து கபூரிய்யாவையும் அதன் வக்பு சொத்துகளையும் பாதுகாப்பதற்கு அவசரமாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள், தீர்வுகள் தொடர்பில் ஊடக மாநாடுகளிலும், விழிப்புணர்வுக்கூட்டங்களிலும் பேசிப்பேசியே இருக்கிறார்களே தவிர ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இவ்வாறான விடயங்கள் காலம் தாழ்த்தாமல் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதாகும்.
தீர்மானம் நிறைவேற்றம்
கபூரிய்யா அரபுக்கல்லூரி தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து உயர் நீதிமன்றத்திலோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றிலோ வழக்கொன்றினை தொடர்வதற்கான சட்ட விடயங்களை ஆராய்வதற்கான ஒரு குழுவை அவசரமாக தெரிவு செய்தல்.
சிவில் சமூக அமைப்புகள் தங்களால் மேற்கொள்ள முடியுமான விடயங்கள் குறித்து ஆராய்தல். அத்தோடு ஒருமித்த தரப்பாக நின்று நம்பிக்கைப் பொறுப்பாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தையினை ஆரம்பித்தல்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தெரிவுக் குழுவொன்றினை நியமித்து வக்பு சொத்துகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் எனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகஜர் கையளிப்பு
இதே வேளை விழிப்புணர்வு கூட்டத்தின்போது கபூரிய்யா அரபுக்கல்லூரி தொடர்பான மகஜர் ஒன்று பழைய மாணவர் சங்கத்தினால் வெளியிடப்பட்டது.
மகஜரின் பிரதிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கையளிக்கப்பட்டன.
மகஜரில் உள்ளடங்கியுள்ளவை.
மர்ஹூம் அப்துல் கபூரினால் இலங்கையின் முஸ்லிம்களின் சன்மார்க்க கல்விக்காக வழங்கப்பட்டதே கபூரிய்யா அரபுக்கல்லூரியாகும்.
கிரேண்ட்பாஸ் காணி (முன்னாள் சுலைமான் வைத்தியசாலை) மூலம் கிடைக்கபெறும் வருமானம் கபூரிய்யா கல்லூரிக்கு வழங்கப்பட வேண்டியதாகும்.
பொருளாதார மற்றும் பெளதீக வளங்களைக் கொண்டுள்ள கபூரிய்யா அரபுக்கல்லூரி நவீனமயப்படுத்தப்பட்டு இலங்கை முஸ்லிம்களின் சன்மார்க்க கல்விக்கான ஒரு பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும்.
நம்பிக்கை பொறுப்பாளர்கள் கல்லூரியினதும் அதன் மாணவர்கள் பழைய மாணவர்கள் குறித்து கூறிவரும் உண்மைக்கு புறம்பான அப்பட்டமான பொய்களையும் அவதூறுகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மர்ஹூம் அப்துல் கபூரின் நான்காவது பரம்பரையில் வந்த ஒரு சிலரால் கல்லூரிக்கும் அதன் உடைமைக்கும் அதன் இருப்பிற்கும் ஆபத்தேற்பட்டிருப்பதை கருத்திற்கொண்டு முஸ்லிம் அரசியல் மற்றும் மார்க்க சிவில் அமைப்புகளின் தலைமைகள் கபூரிய்யா கல்லூரியையும் அதன் உடைமைகளையும் பாதுகாப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கபூரிய்யா அரபுக் கல்லூரியும் அதன் கிராண்ட்பாஸ் காணியும் இன்று சவாலுக்குட்படுத்தப்பட்டு பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருப்பதை பாதுகாத்து மீட்டுத்தரவேண்டிய பொறுப்பும் கடமையும் எம் அனைவரினதும் ஆகும். எனவே இவ்விவகாரத்தை உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவது எமது அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் கடமையாகும் என மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபூரிய்யாவில் பயங்கரவாதம்,
அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதா?
கபூரிய்யா அரபுக்கல்லூரியின் நம்பிக்கையாளர் சபை அங்கு பயங்கரவாதம், அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாகவும், பாடவிதானத்தில் அடிப்படைவாத கருத்துகள் கொண்ட புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கிருலப்பனை சி.ஐ.டி. பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது. தடை செய்யப்பட்ட புத்தகங்கள் போதிக்கப்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக கபூரிய்யா பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஐ.எல்.டில்சாட் மொஹமட் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சி.ஐ.டி.யினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பழைய மாணவர் சங்கம் கபூரிய்யா அரபுக்கல்லூரியும் அதன் சொத்துக்களும் தனியார் நம்பிக்கை நிதியத்துக்கு சொந்தமானதல்ல. அது வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள் என வக்பு சபையில் நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு எதிராக வழக்கொன்றினைத் தாக்கல் செய்ததனையடுத்தே கபூரிய்யா நம்பிக்கை பொறுப்பாளர்களால் பழைய மாணவர் சங்கத்துக்கு எதிராக சி.ஐ.டி.யில் முறைபாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். பழைய மாணவர்சங்கம் சட்டவிரோத குழுவெனவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் டில்சாட் மொஹமட் சி.ஐ.டி. விசாரணையின் போது ‘பழைய மாணவர் சங்கம் சட்டவிரோதமான குழுவல்ல. பயங்கரவாதிகளுடன் இச்சங்கத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை. கல்லூரியில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் இல்லை. பயங்கரவாதம், அடிப்படைவாதம் போதிக்கப்படவுமில்லை. பயங்கரவாதத்துடன் எம்மை தொடர்புபடுத்துவதை நாம் முழுமையாக மறுக்கின்றோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சி.ஐ.டியினர் மூன்று புத்தகங்களின் போட்டோ பிரதிகளை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரிடம் காண்பித்தனர். அப்பிரதிகள் கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர்களால் சி.ஐ.டி.க்கு வழங்கப்பட்டவையாகும் என டில்சாட் மொஹமட் கூறினார்.
இவை இமாம் இப்னு தைமியாவின் பத்வாக்கள், கிதாபுத் தெளஹீத், உலூமுல் குர்ஆன் என்பனவாகும். இப்புத்தகங்கள் அடிப்படைவாதத்தைப் போதிப்பன என சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர். இதற்கு மறுப்புத் தெரிவித்த டில்சாட் மொஹமட் இது தொடர்பில் விளக்கமளித்தார்.
இமாம் இப்னு தைமியாவின் பத்வாக்கள் என்ற நூல் அறிஞர் வழங்கிய பத்வாக்களையே குறிக்கிறது. இதைப் பின்பற்ற வேண்டும் என்பதல்ல. அதேபோன்று கிதாபுத் தெளஹீத் எ-னும் நூலின் பொருள் அரபு மொழியில் கிதாப் என்பது புத்தகம், தெளஹீத் என்பது ஏகத்துவம் என்பதாகவும், உலூமுல் குர்ஆன் என்றால் கற்பதற்குத் தேவையான அறிவு என்றும் விளக்கமளித்தார்.
‘காபிர்களைக் கண்டால் .ெகால்லுங்கள்’ என குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் முறையிட்டுள்ளார். ஆனால் உலூமுல் குர்ஆன் பற்றிய அறிவு இருந்தால் இவ்வாறு ஞானசாரதேரர் முறையிட்டிருக்கமாட்டார். இந்நூல் கட்டாயம் படித்துக்கொடுக்கப்படவேண்டும்.இக்கலை கட்டாயம் அல்குர்ஆனை படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். இதுபற்றிய தெளிவின்றியே முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
கிதாபுத் தெளஹீத் என்ற நூல் இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை விலாவாரியாக விளக்கும் நூலாகும் என டில்சாட் மொஹமட் விளக்கமளித்தார். அத்தோடு இந்நூல்கள் நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் கருத்துக்களைக் கொண்டிருந்தால் அது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் கூறினார்.
இச்சந்தர்ப்பத்தில் சி.ஐ.டி.பிரிவின் அதிகாரிகள், இமாம் இப்னு தைமியாவின் பத்வாக்கள் என்ற நூல் ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளதே என டில்சாட் முஹம்மதிடம் வினவினார்கள். அது ஈரான் ஆட்சியாளர்களின் தனிப்பிட்ட தீர்மானம் எனத் தெரிவித்த டில்சாட் அது தொடர்பில் ஈரான் அரசிடம் தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனப் பதிலளித்தார்.
மாணவர் அனுமதி?
கபூரிய்யா நம்பிக்கை பொ-றுப்பாளர் சபை 2023 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கு விண்ணப்பம் கோரியிருந்தது. நேர்முகப்பரீட்சையும் நடத்தப்பட்டது. ஆனால் புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டார்களா? என்பதை உத்தியோகபூர்வமாக அறிந்து கொள்ள முடியவில்லை.
இதேவேளை கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு நோன்பு கால விடுமுறையின் பின்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 57 மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாது வீடுகளில் தங்கியிருக்கின்றனர். இவர்களின் நிலைமை என்ன? இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு மாணவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கபூரிய்யாவின் பொது மக்களுக்கான
அறிவித்தல்
மர்ஹூம் நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர் அவர்களால் இலக்கம் 2125 உடைய 1935.11.22 ஆம் திகதியிடப்பட்ட நம்பிக்கைப் பத்திரத்தின் கீழ் உருவாக்கப்பட்டதே என்.டி.எச். அப்துல் கபூர் நம்பிக்கை நிதியம் என கபூரிய்யாவின் நம்பிக்கை பொறுப்பாளர் சபை வெளியிட்டுள்ள பொதுமக்களுக்கான அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அப்துல் கபூர் நம்பிக்கை நிதியம் என்பது இஸ்லாமிய கருணைக் கொடை நம்பிக்கை நிதியமோ அல்லது சட்டத்தின் கீழான ஒரு கருணைக்கொடை நிதியமோ அல்ல. எனவே கூறப்பட்ட நம்பிக்கை நிதியம் முஸ்லிம் பள்ளிவாசல்கள் கருணைக் கொடை நம்பிக்கை நிதியாக அல்லது 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க வக்பு சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டதல்ல. அத்தோடு இது ஒரு தனியார் வெளிபாட்டு நம்பிக்கை நிறுவனமாகவே தொடர்ந்து இயங்கி வருகிறது.
அப்துல் கபூர் நம்பிக்கை வெளிப்பாட்டு அமைப்பின் நிறுவுனர் 2125 ஆம் இலக்க நம்பிக்கை நிதியப் பத்திரத்தின் 6 ஆவது சரத்தில் நம்பிக்கை நிதியம் ஆங்கில சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படவேண்டும். இதன் மூலம் வக்பு சட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை.ஒரு போதும் அவ்வாறு முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கவுமில்லை. அதன் கூறப்பட்ட நோக்கங்கள் நம்பிக்கைப் பத்திரத்தின் விடயங்களுக்கு ஏற்ப அமைந்தவை என்பதுடன் அதில் முஸ்லிம் கருணை நம்பிக்கை நிதியம் அல்லது வக்பு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதம் வேண்டாம்
அண்மையில் நடாத்தப்பட்ட ‘கபூரிய்யாவைப் பாதுகாப்போம்’ எனும் விழிப்புணர்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தாமதியாது செயலுறுப்பெற வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் அதிக கரிசனை கொண்டு கபூரிய்யாவையும் அதன் வக்பு சொத்துக்களையும் அழிவிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும் இதுவே சமூகத்தின் அபிலாஷையுமாகும்.
அத்தோடு கல்லூரியில் மாணவர்கள் வருடக்கணக்கில் படித்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களது கல்வி தற்போது கல்லூரி நிர்வாகத்தினால் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும். மேலும் வாராந்தம் சுமார் 1000 பேர் அளவில் ஜும்ஆ தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த கபூரிய்யா பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளர்களால் இழுத்து மூடப்பட்டுள்ளது. சமயக் கடமைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும் தூங்கிக்கொண்டிருக்காது விழித்தெழ வேண்டும் என்பதும் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli