சாய்ந்தமருது வீட்டிலிருந்த யாரேனும் தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பம் இருந்தது
ஹாதியாவை மீட்ட மேஜர் சுதுசிங்க குறுக்கு விசாரணைகளில் சாட்சியம்
(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் வீட்டை இராணுவம் சுற்றிவளைத்திருந்த போது, அவ்வீட்டில் இருந்த எவரேனும் தப்பிச் செல்ல சந்தர்ப்பம் இருந்ததாக மேஜர் சபித்த ஹேமகுமார சுபசிங்க தெரிவித்தார்.
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் நேற்று (17) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் இதனை வெளிப்படுத்தினார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து அறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக ), அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸாநாயக்க, சி.ஐ.டி. அதிகாரிகள், ஒரு இராணுவ வீரர் உள்ளடங்களாக 30 சாட்சியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், சான்றாவணமாக ஒரே ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் மட்டும் நிரலிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், இவ்வழக்கில் சாட்சி விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று, முதலாவதாக சாட்சியம் அளித்த பிரிகேடியர் சுதுசிங்கவிடம் குறுக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது பிரதிவாதி ஹாதியாவுக்காக மன்றில், சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் சிரேஷ்ட சட்டத்தணி ருஷ்தி ஹபீப் ஆஜராகி குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.
வழக்குத் தொடுநருக்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலைமையில், அரச சட்டவாதிகளான சத்துரி விஜேசூரிய மற்றும் லாபிர் ஆகியோர் ஆஜராகினர்.
இந் நிலையில் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்து சாட்சியமளித்த பிரிகேடியர் சுதுசிங்க, சாய்ந்தமருது -வெலிவேரியன் கிராமத்தில் வெடிப்பு இடம்பெற்ற வீட்டில் மொத்தமாக 3 வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதாக கூறினார்.
அதனால், சாய்ந்தமருது நோக்கி சென்ற தனது குழுவினருக்கு, குறித்த வீட்டுக்குள் செல்ல சுமார் 12 மணி நேர போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி இருந்ததாக குறிப்பிட்டார்.
இதன்போது அந்த 12 மணி நேரம், புலனாய்வு நடவடிக்கை ஒன்றுக்கான கால நேரமாக பயன்படுத்தப்பட்டதா என சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசாரணை செய்த நிலையில், அது தொடர்பில் தனக்கு தெரியாது என மேஜர் சுதுசிங்க குறிப்பிட்டார்.
தொடர்ந்து குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்த மேஜர் சுதுசிங்க, வெடிப்பு நடந்த வீட்டின் முன் பக்கமாக தானும் தனது குழுவினரும் சுமார் 75 முதல் 100 மீட்டர் தூரத்தில் இருந்ததாகவும், அவ்வீடு மதிலால் சூழப்பட்டது எனவும் தெரிவித்தார். குறித்த மதிலானது 4 அடிவரை உயரமானது என அவர் குறிப்பிட்டார்.
இதன்போது இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்த அந்த சூழலில் வெடிப்பு இடம்பெறும் போது அவ்வீட்டில் இருந்த எவருக்கேனும் தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் இருந்ததா என சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மேஜர் சுதுசிங்க, அவ்வாறு தப்பிச் செல்ல சந்தர்ப்பம் இருந்ததாக குறிப்பிட்டார்.
அது மட்டுமன்றி பின்னால் இருந்த மதில் 4 அடி மட்டுமே உயரம் என்பதால் அதனூடாக பாய்ந்து செல்ல முடியும் எனவும், தான் உள்ளிட்ட குழுவினர் வீட்டின் முன் பக்கமாக இருந்தமையால் பின் பக்கம் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக கண்காணிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
வெடிப்பின் பின்னர், பாதுகாப்பினை உறுதி செய்து சுமார் 12 மணி நேரத்தின் பின்னர் குறித்த வீட்டுக்குள் முதலில் நுழைந்தவர் தானே என இதன்போது குறிப்பிட்ட மேஜர் சுதுசிங்க, வீட்டின் பின் பக்கமாக தான் நுழைந்ததாகவும் கூறினார்.
இதன்போது சாரா ஜெஸ்மினின் பெயரை குறிப்பிட்டு நேரடியாக குறுக்கு கேள்விகளை சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், சாரா ஜெஸ்மின் தப்பிச் செல்ல உதவியமைக்காக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தான் அறிவதாகவும், எவ்வாறாயினும் சாரா தொடர்பிலான விசாரணைகளில் தன்னிடம் எந்த விசாரணைகளையும் சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கவில்லை எனவும் மேஜர் சுதுசிங்க குறிப்பிட்டார்.
இதனையடுத்து மேஜர் சுதுசிங்கவிடம் மீள கேள்விகளை எழுப்பி அரச தரப்பின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் விளக்கங்களை பதிவு செய்தார். சாரா ஜெஸ்மின் தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் தககல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை தொடர்பில் ஊடகங்கள் ஊடாகவே தான் அறிந்ததாக அவர் அதன்போது கூறினார்.
இதனையடுத்து 2 ஆவது சாட்சியாளராக, அப்போதைய அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தற்போதைய எம்பிலிபிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சருமான லசந்த தடல்லகேயின் சாட்சி நெறிப்படுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந் நடவடிக்கைகள் இன்றும் தொடரவுள்ளன.- Vidivelli