(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹரகம, கபூரியா அரபுக்கல்லூரியில் பல தசாப்தகாலமாக இயங்கி வந்த பள்ளிவாசலை கபூரியா நம்பிக்கையாளர் சபை கடந்த 12 ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இவ் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்.டீ.எச். அப்துல் கபூர் நம்பிக்கையாளர் சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
கபூரியா அரபுக்கல்லூரி பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்காக இப்பள்ளிவாசலை பயன்படுத்தும் சுமார் ஆயிரம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜும்ஆ தொழுகைக்காக 2 ½ கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள அஸ்ஹர் பிளேஸ் பள்ளிவாசலுக்குச் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் இடமாக அரபுக்கல்லூரி வளாகம் மாற்றப்படும்வரை பள்ளிவாசலை பயன்படுத்த முடியாது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக மாற்றுவழிகளை ஒழுங்கு செய்து கொள்ளுமாறு இப்பள்ளிவாசலை பயன்படுத்தும் பொது மக்கள் நம்பிக்கையாளர் சபையினால் வேண்டப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை கபூரியா நம்பிக்கையாளர் சபை வெளியிட்டுள்ள அறிவித்தலுக்கு கபூரியா பழைய மாணவர் சங்கம் தெளிவொன்றினையும் வழங்கியுள்ளது.
‘பாரம்பரிய வக்பு” உடைமையொன்றினை தனியார் உடைமையாக்கிக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிவாசல் பொதுமக்களின் ஐவேளைத் தொழுகை, ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழுகைகள், ஜனாஸா தொழுகை மற்றும் ஜனாஸா நல்லடக்க செயற்பாடுகளுக்கு எவ்வித தடையுமின்றி வழங்கப்பட வேண்டும் என பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கபூரிய்யா கல்லூரி பள்ளிவாசல் மூடப்பட்டமை தொடர்பான விவகாரத்தை பழைய மாணவர் சங்கம் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.- Vidivelli