பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கைவிடுக
கிழக்கு முஸ்லிம் சிவில் சமூகம் கோரிக்கை; இன்றேல் உயர் நீதிமன்றத்தை நாடவும் தீர்மானம்
(எம்.எஸ்.எம். நூர்தீன்)
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் முற்றாக இல்லாமலாக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி அல்மனார் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்விலேயே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், உலமாக்கள், பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், மஜ்லிஸ் அஷ் ஷூரா பிரதிநிதிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந் நிகழ்வில் முதல் அமர்வில் பயங்கரவாத தடைச் சட்ட விவகாரங்களில் மிக நீண்டகாலமாக செயற்பட்டு வரும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், சுவஸ்திகா அருலிங்கம் மற்றும் ரணிதா ஞானராஜா ஆகியோர் கலந்து கொண்டு இச் சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் பாதிப்புகள் தொடர்பில் விளக்கமளித்தனர். இரண்டாவது அமர்வில், கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச் சட்டம் தொடர்பான தமது நிலைப்பாடுகளை முன்வைத்ததுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல சிவில் சமூக அமைப்புகளும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்தில் உள்ளதாகவும் கடந்த காலங்களில் இந்த சட்டம் சிறுபான்மை சமூகத்தை கடுமையாக பாதித்துள்ளது என்றும் இதனால் எமது நாட்டுக்கு பொருத்தமற்ற இந்த சட்டமூலம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என அரசாங்கத்தை கோருவதாகவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு எப்போதும் விசுவாசமானவர்கள். இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியவர்கள். அந்த அடிப்படையில் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக வெறுத்து எதிர்ப்பவர்கள். இந்த சட்டமூலம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் பாதிப்பை உண்டுபண்ணும் என்ற அடிப்படையிலும் ஜனநாயகத்தை சிதறடிக்கும் சட்டமென்ற வகையில் இந்த சட்டமூலத்தை கைவிட வேண்டும் என்றும் இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் கூட்டாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் முழுமையாக வாபஸ் பெறுவதுடன் தற்போது கொண்டு வர உத்தேசித்துள்ள ஏ.ரி.ஏ. எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் எனும் கோரிக்கை பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது.
மேற்படி தீர்மானங்களை அவ்வப் பிரதேச பள்ளிவாசல் சம்மேளனங்கள், மஜ்லிஸ் அஷ் ஷூரா அமைப்புகள், உலமா சபைகள் ஊடாக தனித்தனியாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விடயங்கள் தொடர்பில் அரசின் பிரதிபலிப்பை அவதானித்து தேவைப்படும்பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.- Vidivelli