எம்.ஒஸன் ஸலாம்
அட்டுளுகமை
அண்மைக் காலமாக நமது நாட்டில் இன மொழி மத வேறுபாடுகளின்றி இளவயதுப் பெண் பிள்ளைகளில் பலர் சில காம வெறியர்களுக்கும் போதைப் பொருள் அடிமைகளுக்கும் தொடர்ந்தும் இரையாகி வருகின்றனர்.
இந்த வரிசையில் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 18 வயது கல்லூரி மாணவி வித்யா, அதே ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி கொடகதெனியவில் 4 வயது பாலர் பாடசாலை மாணவி ஸேயா ஸந்தெவ்மினி ஆகியோர் காம வெறியர்களின் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி கொலையும் செய்யப்பட்டனர்.
அத்துடன் 2022ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி அட்டுளுகமையைச் சேர்ந்த 9 வயது மாணவி ஆயிஷாவும் கடந்த 07.-05-.2023 அன்று கம்பொளை வலிகல்லையைச் சேர்ந்த மருந்தக பணியாளரான பாத்திமா முனவ்வராவும் போதைப் பொருட்களுக்கு அடிமையான காடையர்களாலேயே சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு மரணத்தைத் தழுவியவர்கள் ஆவர்.
இவர்கள் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளாகாவிட்டாலும் அதற்கான முயற்சிகளில் தோல்வி கண்டு கொலை செய்யப்பட்டனர் என்பது போலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்ற கவலை தரும் தகவல்களாகும்.
இருப்பினும் இந்த இள வயது பெண்பிள்ளைகள் அனைவரதும் கொலைகள் ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டதுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு சமூகங்களை உலுக்கிவிடச் செய்த கொலைச் சம்பவங்களாகும்.
ஆயினும் ஊடகங்களில் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படாத கற்பழிப்புகள், கொலைகள் பல கால வெள்ளத்தின் ஓட்டத்தில் மண்ணுள் புதையுண்டு போயின என்பதும் கசப்பான உண்மையாகும்.
ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மாத்திரம் தான் இது போன்ற கொலைகள் இடம்பெறுவதில்லையென்றும் அதற்கு அவர்களது சமூக அமைப்பும் மத போதனைகளும் தான் அடிப்படைக் காரணமென்றும் அந்நிய மதத்தை சார்ந்தவர்கள் கருத்து வெளியிட்டு வந்தனர். ஆனாலும் நடந்தது என்ன? முழு நாடும் இன்று போதைப் பொருள் எனும் அரக்கனிடம் அடகு வைக்கப்பட்டு வரும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அனைத்து சமூகங்களும் அதன் கோரப் பிடியிலிருந்து விடுபட முடியாத ஒரு பயங்கர சூழலில் நமது சமூகமும் அதில் சிக்குண்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பலர் பல்வேறு களவு, கொலை, கற்பழிப்பு முதலிய இஸ்லாம் வெறுக்கும் மா பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதைப்பொருள் பாவனையாளர்களை தமது வாடிக்கையாளர்களாக்கி அதன் மூலம் லட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் ஈட்டும் கயவர்கள் நமது சமூகத்திலும் மலிந்து காணப்படுகின்றனர். அவர்களுக்கு சமூகம் சன்மார்க்கம் போன்றவற்றின் மீது எந்தக் கண்ணியமும் கருணையும் கிடையாது. மாறாக பணம் ஒன்றையே தமது இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். இளைஞர்களுக்கு போதை மருந்து புகட்டி நாட்டில் நிலவும் பிரச்சினைகளை மறக்கடிக்க இளைஞர்களின் கவனத்தைத் திசை திருப்பும் அரசியல் புல்லுருவிகளின் தந்திரோபாயங்களும் இல்லாமல் இல்லை என்பதையும் நாம் மறக்க முடியாது.
ஆகவே அந்தக் கயவர்களும் போதைப்பொருள் தருவிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்பதும் கசப்பான உண்மையாகும்.
இதனாலேயே நாட்டில் போதைப் பொருள் பாவனைகளை ஒழிக்க முடியாதுள்ளது. இதற்கு பாதுகாப்புத் துறையினர் சிலரும் துணை போகின்றனர் என்பது வெள்ளிடை மலை. இது தவிர இவர்களுக்குத் துணை போகின்றவர்கள் நமது சமூகத்தின் மேல்மட்டத்திலும் இல்லாமலுமில்லை. அவர்களை சமூகத்தின் இலுமினாட்டிகளாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
இது போன்ற எத்தனை கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் எவ்வளவு அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் அதன் மூலம் எந்தப் பாடங்களையும் நமது சமூகம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் நேரத்தில் மாத்திரம் அது குறித்துக் கொக்கரிப்பதும் அடிப்போம் உதைப்போம் என கூப்பாடு போடுவதும் போதை வஸ்துக்களை இல்லாது ஒழிக்க வேண்டும் என சபதமிடுவதும் அதன் பாவனையாளர்களை அந்தப் பாவச் செயல்களிலிருந்து விடபடச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டுவதும் வழக்கமாகிவிட்டது. அது மாத்திரமன்றி இதற்கு எதிராக பல பள்ளிவாசல் நிர்வாகங்களும் நாரே தக்பீர் கூறி முழக்கமிடுவதும் சோடா போத்தலின் பொங்கு நுரை அளவுடன் பொங்கி வழிந்து கப்சிப் ஆகி பின்னர் ஓய்ந்துவிடும் அவல நிலையையே நமது சமூகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இந்தப் போராட்ட கோஷங்களை மீண்டும் மற்றுமொரு இளவயதுப் பெண் அல்லது சிறுமி கொலை செய்யப்படும் வரை தற்காலிகமாக பண்டகசாலை ராக்கைகளில் அடுக்கி வைத்து விடுவர். இதுவே காலம் காலமாக இன ரீதியாகவும் மத ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இடம்பெறும் அவல நிலைகளின் போது நாம் நடந்து கொள்கின்ற வரைமுறையாகும்.
கொலை செய்யப்பட்ட அப்பாவிப் பெண் பிள்ளைகள் மண்ணறைகளில் அடக்கஞ் செய்யப்படுவது போன்றே இந்த வெற்றுக் கோஷங்களும் அந்தக் கப்றுகளிலேயே அடக்கஞ் செய்யப்பட்டு விடுகின்ற புளித்துப் போன விநோத காட்சிகளையே தொடர்ந்தும் நாம் கண்டு வருகின்றோம்.
சிறுமிகள் தொடக்கம் பருவமடைந்த யுவதிகள் வரை அவர்கள் பெற்றோரின் தீவிர கண்காணிப்பின் கீழ் நிச்சயமாக இருந்தேயாக வேண்டும். இஸ்லாத்தின் வரையறைகள் பேணப்படாததாலேயே இன்று நமது சமூகத்தில் பல தொல்லைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் பின்வரும் விடயங்களைப் பெற்றோர்கள் பின்பற்றினால் நமது பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கலாம் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
- பருவமடையாத சிறுமிகளை அக்கம் பக்கத்திலுள்ள எந்தக் கடைகளுக்கும் வீட்டுக்குத் தேவையான எப்பொருட்களையும் வாங்க அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.
- பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தாய், தந்தை, சகோதரன், பெற்றோரின் தந்தைகள் (அப்பா) அல்லது தாய்கள் (பாட்டி) ஆகியோரைத் தவிர வேறு யாருடனும் அவர்களைத் தனியாகச் செல்லவோ மீண்டும் அந்த வகுப்புகளிலிருந்து தனியாக அழைத்து வரவோ அனுமதிக்கக் கூடாது.
- பாடசாலைகளில் 6ஆம் ஆண்டிலிருந்து உயர் தரம் வரை ஆண் பெண் கலவன் வகுப்புகளாக இணைந்து இருக்காமல் இரு பாலாருக்கும் தனித்தனி வகுப்புகளாக தரம் பிரித்தல்; இந்த நடைமுறை பல பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ளது. இல்லாத இடங்களில் அதனை உருவாக்குதல் அவசியமாகும்.
- வீடுகளிலும் ஏனைய உறவினர் வீடுகளிலும் சில வைபவங்களின் போது மேற்குறிப்பிடப்பட்ட நெருங்கிய குடும்ப உறவினரைத் தவிர வேறு ஆண் உறவினர்கள் மடிகளில் போய் உட்காரவோ, தொடவோ, முத்தங்கள் கொடுக்கவோ அனுமதிக்காமல் அவர்களைத் தவிர்த்துக் கொள்ளல்.
- ஆண் பெண் கலப்புகள் நிகழும் இடங்களுக்கு (திருமணம், விளையாட்டு மற்றும் பாடசாலை கலைவிழாக்கள் போன்றவற்றிற்கும்) மேற்கூறியவர்களது உரிய பாதுகாப்பின்றி செல்ல அனுமதிக்காதிருத்தல்; பெற்றோரின் கண்காணிப்பிலேயே பிள்ளைகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளல்
- அத்துடன் அறிமுகமற்ற சிலர் சிறுவர் சிறுமியர்களைக் கவருவதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் இனிப்புப் பண்டங்களை வாங்கக் கூடாது என அவர்களைத் தினசரி அறிவுறுத்திக் கொண்டிருத்தல்
- தொழிலுக்காக அல்லது படிப்பு முதலிய விடயங்களுக்காக வெளியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் பருவமடைந்த இளம் பெண்கள் எவ்வகையிலும் தனிமையில் செல்வதை அனுமதிக்கக் கூடாது.
- இஸ்லாம் கூறும் வகையில் மஹ்ரமான தனது குடும்ப ஆண்களின் துணையுடன் தான் அவர்கள் வெளியே செல்ல வேண்டும்.
- அவர்கள் தொழில் புரியும் நிறுவனம் அல்லது கல்வி நிலையம் வரை இந்த மஹ்ரமிகள் தொடர்ந்து செல்ல வேண்டும். திரும்பி வரும்போதும் அதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
- இவர்கள் திருமணமானால் கணவன்மார்கள் இந்த நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும்.
ஆகவே, நமது சிறுமியர் யுவதிகளைத் தொடர்ந்தும் நாம் பலிக்கடாக்களாக ஆக்கிவிடுவதா? என்பதை சிந்தித்து வருமுன் காப்போராக மொத்தத்தில் இஸ்லாம் வகுத்த விதிமுறைகளைக் கவனத்திற் கொண்டு ஆண் பெண் கலப்புகளையும் சந்திப்புகளையும் தவிர்த்து மேற்குறிப்பிட்டவாறு தொடர்ந்து உறுதியுடன் பின்பற்றினால் காடையர்களிடமிருந்தும் கயவர்களிடமிருந்தும் நமது அப்பாவிச் சிறுமிகளையும் இளம் பெண்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அது தவிர அன்றாட சோடா போத்தல் போராட்டங்களால் சாதிக்க முடிந்தது எதுவுமில்லை.-Vidivelli