இலங்கையின் வெளிவிவகார அலுவல்கள் அல்லது கொள்கை மீதான ஒரு பார்வை

0 1,606
  • ஏ.ஜி.நளீர் அஹமட்

ஒரு தேசத்தின் வெளிவிவகாரக் கொள்கை என்பதை மிக எளிமையாக விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கலாம். நிலையான காரணிகள் அல்லது மாறா காரணிகள் மற்றது நிலையற்ற காரணிகள் அல்லது மாறும் காரணிகள். நிலையான காரணிகள் எனப்படுபவை நாட்டின் புவியியல் அமைவிடம் தரைதோற்ற பருமன், நாடு கொண்டிருக்கும் உள்ளக இயற்கை வளங்கள் போன்றனவாகும்.

நிலையற்ற காரணிகள் எனப்படுபவை, நாட்டின் சனத்தொகை இதில் புதிதாக அந்நாட்டின் புலம்பெயர் சமூக குழுக்களையும் ஆய்வாளர்கள் உள்ளடக்குகின்றனர். நாட்டினுடைய பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மொத்த சனத்தொகையை கணிப்பிடும் அதேவேளை, சமகாலத்தில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, இரட்டை பிரஜாவுரிமை மற்றும் உண்டான பிற காரணங்களின் பிரகாரம் வெளிநாடுகளில் இருப்போரையும் இதில் உள்ளடக்குகின்றனர். இலங்கையின் மத்திய வங்கியின் அண்மைக்கால பருவகால ஆய்வறிக்கைகளில் இத்தகைய பார்வைகளை ஓரளவு உள்வாங்கிய தரவுகளை அவதானிக்கலாம். நிலையற்ற காரணிகளில் மற்றையது நாட்டின் படைப்பலம். இதில் உள்ளக முப்படை, நாட்டினுடைய தரவுகளை சுயாதீனமாக பாதுகாக்கும் தொழிநுட்ப பலம் என்பன அடங்கும். மற்றையது நாட்டின் தேச நலனை வலுப்படுத்துவதான உள்ளக வெளியக சமூக, பொருளாதார, அரசியல், இராஜதந்திர, தொழிநுட்ப மற்றும் நாட்டின் தேசிய அடையாளத்தை பிரதிபலிக்கும் பண்பாட்டு, கலாசார சூழல்கள் ஆகும்.

ஒரு நாட்டின் புவியியல் அமைவிடமும், தரைத்தோற்ற பருமனும் நிலையானதுதான். இலங்கையை பொறுத்தவரை அதன் தரைத்தோற்ற அமைவிடம் மாறிலியாகவே இருக்கப்போகிறது. அசாதாரண புவியியல் மாற்றங்களுக்கு அல்லது எதிர்காலங்களில் பேரரசு உருவாக்கலிலே இலங்கையின் அமைவிடத்தினை தரைத்தோற்ற ரீதியாக பிறிதொரு நாட்டின் எல்லைகளோடு இணைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. காரணம், உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தின் பிரதான பண்டமாற்று மற்றும் சேவைகள் பரிவர்த்தனையின் கேந்திரமாக இருப்பதுதான். இந்த அமைவிடத்தின் உலகளாவிய பறுமானத்தை நெடுங்காலமாக அமெரிக்காவினதும், சீனாவினதும், இந்தியாவினதும் இராஜதந்திரிகளும், பொருளாதார நிபுணர்களும் பல்தேசிய நிறுவன அதிகாரிகளும் விளங்கிக் கொண்டதைப் போல இலங்கையின் அரச தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் மிக அண்மைக்காலத்தில்  விளங்கிக்கொண்டமை திருப்புமுனையாகவே பார்க்கப்பட வேண்டும். இலங்கை அரசின் கடந்த இரண்டு வருட வெளிவிவகார பொருளாதார, வர்த்தகக் கொள்கைக்கான முன்மொழிவுகள் இதனை அடிப்படையாகவும், பிராந்திய சேவைகளுக்கான கேந்திர மூலோபாய நகரமாக கொழும்பு துறைமுக நகரத்தை மாற்றுவதற்கான தூரநோக்கிலான இரு நாட்டு ஒப்பந்தங்களையும் செய்ததை அவதானிக்கும்போது புரிந்துகொள்ளலாம். அதுதான் இலங்கையின் அண்மைய இரு நாட்டு ஒப்பந்தங்களின் உள்ளக நோக்கங்களும் கூட.

நிலையற்ற காரணிகளை பார்க்கும் போது, நாட்டின் சனத்தொகை, உள்ளக வெளியக சமூக, பொருளாதார, அரசியல், தொழிநுட்ப பண்பாட்டு மற்றும் கலாசார சூழல்கள் என்பனவாகும். ஒரு நாட்டின் அரசாங்கங்கள் மாறும்போது அதன் பொருளாதார மற்றும் சர்வதேச அரசியலும் மாறக்கூடும். இதுவும் வெளிவிவகாரக் கொள்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும். அதேபோல் சமூக சூழல், இனங்கள், மதங்கள், பெரும்பான்மை, சிறுபான்மை, அரசாங்க மாற்றங்களோடு ஏற்படும் ஆர்வ மேம்பாடுகள், தனிக் கட்சியை அடிப்படையாகக் கொண்ட எண்ணிக்கை, பரும்பான்மை அரசியல்வாதிகளின் ஆதிக்கங்கள், இவைகளினால் ஏற்படும் மாற்றங்கள் வெளிவிவகாரக் கொள்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

மேற்கண்ட எளிய விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுமாயின், அது நிலையற்ற காரணிகளாலேயே  ஏற்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மாறாக நிலையான, மாறாத காரணிகளால் ஏற்பட முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கைகளில் மாறும் காரணிகளால் ஏற்படும் விடயங்களையும், அது எவ்வாறு இலங்கையின் தேசிய நலனுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமைகிறது என்பதையும் சுருக்கமாக பார்க்கலாம்.

ஒரு தனி நபராக இருக்கலாம், ஒரு குடும்பமாக இருக்கலாம், ஒரு கிராமமாக இருக்கலாம் அல்லது உட்கட்டமைப்புகள் நிறைவான, சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியுமான ஒரு நகர்ப்புறமாக இருக்கலாம். ஒருபோதும் தங்களுடைய சகல தேவைகளையும் இவர்களால் சுயமாகப் பூர்த்திசெய்ய முடியாது என்பதை சாமானிய மனிதர்களால் புரிந்துகொள்ள முடியுமான விடயங்களே. அது ஒரு சிங்கள சமூகத்தவராக,  தமிழ் சமூகத்தவராக,  முஸ்லிம் சமூகத்தவராக இருந்தாலும் சரியே. அதுபோலவே அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, ஆசியாவோ, இலத்தீன் அமெரிக்காவோ, ஆபிரிக்காவோ தனது சகல தேவைகளையும் சுயமாகப் பூர்த்திசெய்ய முடியாது. அது அரசியலாக இருக்கலாம், பொருளாதாரமாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம், சேவைதுறை சார்ந்ததாக இருக்கலாம், உணவுத் தேவையாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு கட்டத்தில் பிற நாடுகளின் தேவையை வேண்டியதாகத்தான் அமைந்திருக்கிறது. ஒரு துறைசார்ந்த தன்னிறைவு, ஒரு சேவை தொடர்பான தன்னிறைவு, ஒரு இயற்கை வளம் சார்ந்த தன்னிறைவு, ஒட்டு மொத்த தன்னிறைவை ஒரு நாட்டிற்கு வழங்காது. அந்த வகையில்தான் நாம் இலங்கை நாட்டையும் பார்க்க வேண்டும்.

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் ரீதியானதும், இராஜதந்திர ரீதியானதும், சார்பளவு கடனை அடிப்படையாகக் கொண்டதும் நன்கொடை ரீதியானதுமான பொருளாதார, வர்த்தக அம்சங்களில் தான் மாற்றங்களுக்குட்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாற்றங்கள் அரசியல் ரீதியான மாறுதல்களுக்கே உட்பட்டிருக்கிறது என்பதுவே பொதுவான அவதானிப்பு. ஆனால் ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும்போது இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை செயற்படுத்தும் பிரயோக உத்திகள் மாறுபட்டவை என்ற விடயப்பரப்பை சுட்டிக்காட்டுவது முக்கியமான அம்சமாகும். அது இராஜதந்திர, அரசியல, பொருளாதார, வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளை பெறும் முறைமை, புலமை பரிவர்த்தனை என்பனவாகும். இலங்கையின் இறைமையை, தேசியத்தை பேணிப்பாதுகாப்பது என்ற விடயத்தில் மாற்றமில்லை. ஆனால் அதனை எவ்வாறு பேணுவது என்ற செயன்முறை மூலோபாயங்களில், பிரயோக உத்திகளில்தான் மாற்றங்கள் உண்டு. இதை  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த கூட்டமைப்பு அரசியல் பிரமுகர்கள் தெரிந்த விடயமாக இருந்தாலும் உள்ளூர் அரசியல் நோக்கங்களுக்காக திரிபுபடுத்தி அது சார்ந்த எதிர்மறையான அபிப்பிராயங்களை மக்கள் மயப்படுத்துகின்றனர்.

மகிந்த ராஜபக் ஷ ஆட்சி காலத்தில் அவரைப்போல மூடிய வெளிவிவகாரக் கொள்கையை பின்பற்றிய நாட்டுத் தலைவர்கள் நண்பர்களாக வந்து போனார்கள். லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி, பர்மாவின் சர்வாதிகாரி தான்சே, வெனிசுவெலா பிரதமர் சார்வேஷ், ஈரானின் ஜனாதிபதி அஹமட் நிஜாட் போன்றவர்கள். இவர்களின் தற்போதைய நிலை யாவரும் அறிந்ததே, தன்னிச்சையான போக்கு, அதிகார மிடுக்கு, பிராந்திய, சர்வதேச அரசியல் போக்குகளை கருத்திற்கொள்ளாத மனோநிலை, காலா காலமாக பின்பற்றப்பட்டு  வரும் சர்வதேச சட்டங்களை கருத்திற் கொள்ளாமையும் அவை தொடர்பான சர்வதேச கொள்கை வகுப்பு மாநாடுகளை புறக்கணித்தமை, சர்வதேச நிறுவன அதிகாரிகளை தங்கள் நாட்டிற்குள் வருவதனை மானசீக ரீதியாக தடுக்கின்றமை போன்ற பல்வோறு காரணிகள் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் புள்ளிகளாகும்.

மகிந்த ராஜபக் ஷவின் இவ்வாறான போக்கிற்கு முக்கிய காரணம் யுத்த வெற்றியும் அவர் சார்ந்த அரசியல் பிரமுகர்களின் மிகைத்த போக்குமாகும். சீனாவுடன் நெருக்கமாகத் தொடர்புகளை வலுப்படுத்திய அதே நேரம், இந்தியாவுடன் பொறுப்புடன் நடந்து கொள்ள தவறியமை பிறிதொரு விடயம்.

மகிந்த ராஜபக் ஷவின மூடிய போக்கு காரணமாக ஐரேப்பியா, ஏன் அண்டை நாடான இந்தியாவின் ஆதரவைக்கூட அரசியல், இராஜதந்திர ரீதியாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனமை மிக துரதிஷ்டவசமான அரசாட்சியைத் தான் வெளிப்படுத்தியது. இதன் காரணமாக ஐ. நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வெற்றிகொள்ளவும் ஆதரவுத் தளத்தை உருவாக்கும் பொருட்டும் திடீரென இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மீளாய்வுக்குட்படுத்தி அவசர அமைச்சரவை அனுமதி மூலம் இலங்கையின் தேசிய நலனுக்கும் குறுகிய அடிப்படையிலே, நீண்டகால அடிப்படையிலே எத்தகைய வர்த்தக ரீதியிலான அபிவிருத்திக்கும் பங்களிக்காதெனத் திட்டவட்டமாக விளங்கிய நிலையில் வெறும் அரசியல் காரணங்களுக்காக 2012 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் புர்கினா பாசோ, கமருன், கேப்வேடே, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், ஐவரிகோஸ்ட், டிஜிபோடி, ஈக்வடோரியல் கினியா, காபோன், காம்பியா, மலாவி, நைகர் உட்பட 15 ஆபிரிக்க வலய  நாடுகளோடும், கௌதமாலா, ஹெய்டி, சென் லூசியா, கிரனெடா, பெலிஸ் உட்பட 13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.

மஹிந்த ராஜபக் ஷவின் மூடிய போக்கினாலும், பன்மைத்துவத்தை அங்கீகரிக்காத, பொறுப்புக்கூறாத, சட்டத்தின் ஆட்சியை பேண முடியாமல் போனதின் விளைவுகளை அவருடைய நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியிலும் வெறுப்புணர்வையும், ஒதுங்கிக் கொள்ளும் போக்கினையும் உருவாக்கியது மட்டுமல்ல, பிற்பட்ட காலங்களில் தான் நெருங்கிப் போனாலும் பிறர் ஒதுங்கிப் போகும் நிலையை உருவாக்கியது. சிறந்த உதாரணமாக இந்தியாவுடனான தொடர்புகளை குறிப்பிடலாம்.

மஹிந்த ராஜபக் ஷவின் மூடிய போக்கு நாட்டிற்குள் ஒரு வகையான தேசிய உணர்வு ரீதியான தனி சிங்கள இனவாதப்போக்கு வளர்ந்தது போல் சர்வதேச நாடுகள் இலங்கையைவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் போக்கு வளர்ந்ததை மறுப்பதற்கில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை மஹிந்த ராஜபக் ஷவின் மூடிய வெளிவிவகாரக் கொள்கையை சரி செய்வதாகவும் அதனை வலுப்படுத்துவதன் மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்புவதையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தன. 100 நாள் வேலைத்திட்டத்தில் வெளிவிவகாரக் கொள்கை சர்வதேசத்தை வெற்றிகொண்டது மாத்திரமல்லாமல், இலங்கை அரசு எதிர்நோக்கியிருந்த சர்வதேச அரசியல், இராஜதந்திர நெருக்கடியையும் தணித்தது. குறுகிய காலத்தில் பல்பக்க பங்காளர்களுடன் ஒன்றித்துப்போகும் போக்கில் தன்னை வலுப்படுத்திக் கொண்டது. இதன் விளைவாகவே பல உயர்மட்ட இராஜதந்திரிகள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், நிதி நிறுவன அதிகாரிகள், இலங்கைக்கு விஜயங்களை மேற்கொண்டனர். அதேபோல் இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சர்வதேச நாடுகள் அரச தலைவர் விஜயங்கள் மூலம் அழைப்பும் விடுத்தன. உடனடியான இந்த சர்வதேச அரசியல் இராஜதந்திரத்தை சரிசெய்த அதேநேரம், நிதியியல் ரீதியான பரந்துபட்ட வாய்ப்புக்களையும் கொள்கை ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் நல்லாட்சி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தேடியது. நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கான சலுகை ரீதியான வாய்ப்புகளை இராஜதந்திர ரீதியாகத் தேடியது. சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட மூன்று மாதகால சலுகையையும் இதனூடாக வழங்கியது. 2015 ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட இலங்கையின் கடலுணவு இறக்குமதி மீதான தடையை ஐரேப்பிய ஒன்றியம் முற்றாக நீக்கியது. பின்னர் இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியாக விண்ணப்பித்து முறையாகப் பெற்றுக்கொண்டது.

அதேநேரம், இலங்கையின் வறுமையை குறைப்பதற்கான முயற்சிகளில் சர்வதேச நாடுகளுடனும் அமைப்புக்களுடனும் பரந்துபட்ட பார்வையில் வாய்ப்புகளை தேடியதும் இங்கு குறிப்பிட வேண்டும். குறுகிய காலம் என்றாலும் குறிப்பிடத்தக்க புலமை பரிவர்த்தனையையும் குறிப்பிட்ட பிரிவினர் துறை சார்ந்து பெற்றுக்கொண்டனர். மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு அரசாங்கம் மூலம் இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதனைக் குறிப்பிடலாம்.

உண்மையில் மஹிந்த ராஜபக் ஷவின் வெளிவிவகாரக் கொள்கையின் இறுகிய நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு இலங்கை அர்ப்பணித்த அதேவேளை சில விடயங்களில் கட்டுப்படவும் தானாக முன்நின்றது.

அதே போல் இலங்கைக்கு இருந்த இராஜதந்திர மரபுரிமைகளை மீட்டெடுக்க தன்னை அர்ப்பணித்தது. இது அரசாங்கத்தைவிட அரசுக்கு வலு சேர்ப்பதான விடயமாகப் பார்க்கப்பட வேண்டும்.

இரு நாட்டு ஒப்பந்தங்களை எதிர்கட்சியில் இருக்கும்போது எவ்ளவுதான் விமர்சித்தாலும் ஆட்சிக்கு வந்த பின் மஹிந்த தரப்பால் அதனை ஒருபோதும் கைவிட  முடியாது ஒரு புறம், மறுபுறம் இலங்கை போன்ற நாடுகளுக்கு இருநாட்டு ஒப்பந்தங்களை தவிர பொருளாதார ரீதியாக வேறு வழியில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தையும் கைவிட மாட்டார்கள்.தற்போதுள்ள பிரகாரமே முன் கொண்டு செல்வர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்க அனுசரணை மூலம் கொண்டுவரப்பட்ட கடப்பாடுகளில் மஹிந்த எவ்வாறான போக்கை கடைப்பிடிப்பார் என்பது கோள்விக்குறியே. ஏனெனில் மனித உரிமை பேரவை கடப்பாட்டின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொறிமுறைகளை சட்டரீதியாக கொண்டு வரப்பட்டபோது பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கடுமையாக விமர்சித்தது மஹிந்த தரப்பு. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் என்பன பாரதூரமாக விமர்சிக்கப்பட்டன மாத்திரமல்லாமல் பிரதான அரசியல் கோஷங்களாகக்கூட இருந்தது. இதனை எவ்வாறு கையாளும் என்பது புரியாத விடயமாகவே இருக்கப் போகிறது. இந்தப் பொறிமுறைகளில் நம்பிக்கை வைத்துத்தான் இந்நாட்டின் தமிழ் சமூகம் அரசியல் துணிவை பெற்றது. எவ்வளவு உள்ளக முரண்பாடுகள் இருந்தாலும். நாட்டின் அரசியலமைப்பைகூட கருத்திற் கொள்ளாது, தனக்கு சாதகமாக வியாக்கியானம் செய்து கொண்டு, தெரிந்துகொண்டே இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கும் ஜனாதிபதியும், 18 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர முனையும் மஹிந்த தரப்பும் தமிழ் மக்களின் இருப்புக்குண்டான, சிறுபான்மை சமூகங்களின் சர்வதேச கடப்பாடுகளை எந்தளவு தூரம் பாதுகாக்கும் என்ற விடயம் கோள்விக்குறியே.! அரசியலமைப்பில் கைவைப்பார்கள் வெளிவிவகாரக் கொள்கைகளில் கைவைக்காமலா விடுவார்கள். சில போது தற்போதுள்ள பொறிமுறை கட்டமைப்பு மஹிந்த தரப்பால் கைவிடப்படும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்திற்கு எவ்வாறு முகம் கொடுப்பார் என்பது கேள்விக்குறியே.  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக் ஷ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் தற்போதும் கூட சர்வதேச சட்டங்கள், சர்வதேச கடப்பாடுகள், பொறுப்புக்கூறல்களை பொரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று வெளிப்படையாகக் கூறுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் வாக்களிக்கப்பட்ட சர்வதேச கடப்பாடுகளை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் பிரஜாவுரிமை பெற்றவர் அங்கு சகல சேவைகளையும் வாய்ப்புக்களையும் தன் குடும்பத்தோடு அனுபவிக்கும் அதேவேளை, இங்கு வந்து தற்காலிக அதிகாரங்களை பயன்படுத்தி கொள்கைகளை மேற்கொள்ளும் போக்கு எந்தளவு தூரம் நாட்டின் தேசநலனைப் பாதிக்குமென்ற விடயம் அவதானிக்கப்பட வேண்டியதாகும். தனிப்பட்ட ஆர்வங்கள், தனிப்பட்ட கொள்கை வகுப்புகள் நாட்டின் கொள்கை வகுப்பாக அமைய முடியாது. பொருளாதார நலனுக்காக மீண்டும் சீனாவையும் ரஷ்யாவையும் மாத்திரம் மஹிந்த தரப்பு சார்ந்து நிற்குமாக இருந்தால் அடுத்த நூற்றாண்டிலும் இலங்கை அபிவிருத்தியை எட்டாது. பாகிஸ்தான்  மஹிந்தவின் நண்பனாக இருந்ததுபோல் தற்போது அதனை புதிய பிரதமர்  இம்ரான் கானிடமிருந்து எதிர்பார்ப்பது பகல் கனவு.  கோதாபய ராஜபக் ஷ கூறுவது போல் ஐக்கிய இராஜ்யம் ஐரேப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதும் அது தன்னுடைய அரசியல், பொருளாதார, வர்த்தக விடயங்களை கையாள்வதும் அதேபோன்ற ஒரு நிலையை இலங்கை எடுப்பதற்குமுள்ள கொள்கை மாத்திரமல்ல, நடைமுறையையும் விளங்கிக் கொள்ளாதவர் போல் கருத்துக்களை கூறுவது எந்தளவு தூரம் பொருந்தும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இலங்கை எதிராக வாக்களித்திருக்கிறது. இது முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை முடிவு. இது தொடர்பாக இலங்கை ஊடகங்கள் கள்வி எழுப்பியதன் பின்னர்தான் தற்போதைய நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இது தொடர்பாக எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் ஹமாஸ் இயக்கத்தையும் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்ற போக்கும் அதற்கு சார்பாக வாக்களித்திருக்க வேண்டும் என்ற போக்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பதாகவும் அறிய முடிகிறது. (இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கம்)

மஹிந்த ராஜபக் ஷவின் கொள்கைகள் தனது அதிகாரத்தை மாத்திரம், தனி நபரை மாத்திரம், தனி சமூகத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டால் அதிலும் குறிப்பாக சர்வதேச அரசியல், இராஜதந்திரம், வர்த்தகம் போன்ற விடயங்களில் கொள்கை வகுப்புகளை செய்யும்போது விரிந்த தன்மையில், நடுநிலை போக்கில் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அமைவதாக இருக்க வேண்டும். இல்லாதபோது 2012 ஆம் ஆண்டு காலம் போல் ஆபிரிக்க –  இலத்தீன் அமெரிக்க நாடுகளோடு ஏற்படுத்தப்பட்ட எத்தகைய நலன்களையும் அரசியல் நலன்களைக்கூட பற்றுத்தராத வெறும் உறவுகளாகவே அமையும்.

அதேபோல் மேலே குறிப்பிட்ட வெளிவிவகாரக் கொள்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் சமூக சூழலை மஹிந்த தரப்பு உள்ளக ரீதியாகவும்,வெளியக ரீதியாகவும் வெற்றிகொள்ள வேண்டும். இனங்கள், மதங்கள், பொரும்பான்மை, சிறுபான்மை அங்கீகரித்து பொது உடன்பாடுகளில் பங்கேற்பு செய்யும் வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். புலம்பெயர் சமூகங்களை மீண்டும் மீண்டும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதை நிறுத்தி, நன்நோக்கில் இலங்கையின் தேசிய வலுவை, தேசிய நலனை மேம்படுத்தும் பொது முயற்சியில் பங்கொடுக்கும் வகையில் தனது போக்குகளை அமைத்துக்கொள்ளத் தவறினால் உள்ளக சமூக சூழலும் ஸ்திரமற்றதாகவே தொடர்ந்தும் இருக்கும். அந்த சமூக சூழல்  வெளிவிவகாரக் கொள்கைகளில் நிச்சயம் தாக்கத்தை உருவாக்கும்.

இறுதியாக, ஒரு நாடு என்ற வகையில் எப்போதும் வெளிவிவகாரக் கொள்கைகளில் கவனம் செலுத்தி தேச நலனை முன்னெடுக்க பொதுவான பண்புகளான காலா காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் முறைகள், நியதிகள் என்பவற்றை கருத்திற்கொள்ளல், நாடுகளிடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்கள், ஏற்பாடுகளை கருத்திற்கொள்ளல், சர்வதேச சம்மேளனங்களில் பங்குகொள்ளலும் கொள்கை வகுப்புச் செயற்பாடுகளில் பங்கு கொள்ளலும், பன்னாட்டு நிறுவனங்களின் சட்டங்களையும் ஒப்பந்தங்களையும் பேணுதல், பிராந்திய, சர்வதேச நிதியியல் அமைப்புக்களின் பொருளாதார வாய்ப்புக்களை இனம் காணல், நன்கொடைகள், சலுகை அடிப்படையிலான நிதியியல் மூலங்களை இனங்காணல், புலமை பரிவர்த்தனை மூலம் உள்நாட்டு அறிவுப் பாரம்பரியத்தை மேம்படுத்துதல், கால நிலைமைகளுக்கு ஏற்ப சமூக சுழலை உள்வாங்கிக் கொள்ளலும் இயைந்து போதலும் என்வபற்றை கருத்திலெடுத்து கொள்கை வகுப்புகளை மேற்கொண்டு செல்வதில் எப்போதும் கவனம் செலுத்தல் சிறந்ததாக அமையும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.