ஹிஜாஸுக்கு எதிராக அச்சுறுத்தி சாட்சியம் பெற முயன்ற விவகாரம்: 4 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மீறல் மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு
(எம்.எப்.அய்னா)
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு அழுத்தம் கொடுத்து, பெற்றோரின் பொறுப்பில் இருந்த சிறுவர்களை தாம் சி.ஐ.டி.யினர் எனக் கூறி அழைத்துச் சென்று அச்சுறுத்தி ஆவணங்களில் பலாத்காரமாக கையெழுத்து வாங்கியதாக கூறி நான்கு சிறுவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்ணான்டோ தலைமையிலான ஏ.எம்.டி. நவாஸ் மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இதற்கான உத்தரவை அளித்தது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த 4 சிறுவர்களையும் மனுதாரர்களாக கொண்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், அவர்களது பெற்றோர் கையெழுத்திட்டுள்ள நிலையில், சட்டத்தரணி பிரபுத்திகா திசேரா உள்ளிட்ட குழுவினரால் கடந்த 2020 மே மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில் பிரதிவாதிகளாக, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி.யின் அப்போதைய பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
புத்தளம் கரை தீவு அல் சுஹைரியா அரபுக் கலூரியில் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதா, அங்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டதா என சி.ஐ.டி. எனக் கூறிக் கொண்ட குழுவினர் தம்மிடம் விசாரணை நடாத்தியதாகவும், தாம் கல்வி கற்ற காலப்பகுதியில் அப்படி ஒன்றும் இடம்பெறவில்லை என பதிலளித்த போது, தம்மை அச்சுறுத்தி பலாத்காரமாக அவர்கள் சில தாள்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் மனுதாரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கொழும்பு 15 ஐ சேர்ந்த சிறுவர்கள் நால்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மனுதாரர்களான தாம் 2013 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து சில வருடங்களில் பொருளாதார சிக்கல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் கைவிட்டதாகவும், இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு மட்டக்குளி ஜும்ஆ பள்ளிவாசல் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் சுஹைரியா அரபுக் கல்லூரியில் சேர்ந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அங்கு அரபு கற்கைகளுக்கு மேலதிகமாக கணிதம், ஆங்கிலம், கணினி ஆகியவற்றையும் தாம் கற்றதாகவும் எனினும் ஒரு போதும் ஆயுத பயிற்சிகளையோ, அடிப்படைவாத போதனைகளோ தமக்கு வழங்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அதனை அண்மித்த நாளொன்றில் தமது வீட்டுக்கு வந்த சி.ஐ.டி. என கூறிக்கொண்ட குழுவினர், சில புகைப்படங்களைக் காட்டி, அவர்கள் தாம் கற்ற அரபுக் கல்லூரிக்கு வந்து அடிப்படை வாதத்தை போதித்து ஆயுத பயிற்சி அளித்ததாக கூற வற்புறுத்தியதாக மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்கட்டியுள்ளனர்.
சி.ஐ.டி.யினர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையில், கரை தீவின் குறித்த அரபுக் கல்லூரி தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தி அங்கு கற்றவர்களை தேடி விசாரித்து வாக்கு மூலம் பெற்று வந்தது. அதன்படி அங்கு ஆயுதப் பயிற்சி மற்றும் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டதாக அங்கு கற்ற மாணவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக சி.ஐ.டி. தரப்பில் கூறப்பட்டு வந்த பின்னணியிலேயே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், நேற்று முன் தினம் இந்த மனு பரிசீலனைக்கு வந்த போது, மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், சட்ட மா அதிபர் மனுதாரர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சாட்சியாளர்களாக மாறலாம் எனும் அடிப்படை ஆட்சேபனத்தை மையப்படுத்தி வாதங்களை முன் வைத்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீதான முழு விசாரணையும் கவனத்தை திசை திருப்பும் சூழ்ச்சி என நீதிமன்றில் சுட்டிக்காட்டிய பர்மான் காசிம், இன்னுமா அந்த அறிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என சட்ட மா அதிபர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
இந் நிலையிலேயே, மனுக்களை விசாரணைக்கு ஏற்று எதிர்வரும் நவம்பர் மாதம் வரை அவற்றை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம், ஜனாதிபதி சட்டத்தரணி பார்மான் காசிம், சட்டத்தரணி சாந்த ஜயவர்தன மற்றும் நுவான் போபகே ஆகியோர் ஆஜராகினர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார ஆஜரானார்.-Vidivelli