ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல் குறித்து பூரண விசாரணை நடத்தப்படும்
பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என்கிறார் நீதியமைச்சர்
(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதனால் இதுதொடர்பாக பூரண விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூடியபோது, பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் கட்டான பிரதேசத்தில் ஓமான் நாட்டு முதலீட்டாளர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படாமல் இருப்பதால் குறித்த முதலீட்டாளர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவிக்கையில், ஓமான் நாட்டு முதலீட்டாளருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலை கட்டான பிரதேசத்தில் இயங்கி வருகிறது. இதில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றன. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த தொழிற்சாலை வெளிநாட்டு முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
அதனால் குறித்த முதலீட்டாளர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்து வருகிறார். முதலீட்டாளர் நாட்டைவிட்டு சென்றால், அந்த பிரதேசத்தில் தொழில் செய்துவரும் குடும்பங்கள் நடுத்தெருவில் விடப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவிக்கையில், முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துவரும் நிலையில், இருக்கும் முதலீட்டாளர்களை அச்சுறுத்தி நாட்டைவிட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால் கட்டான பிரதேசத்தில் தொழிற்சாலை அமைத்திருக்கும் ஓமான் முதலீட்டாளருக்கு நீதியை பெற்றுக்கொடுத்து, நாடு தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த நளின் பண்டார எம்.பி. தெரிவிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவுக்கு எதிராகவே குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இலஞ்சம் தொடர்பான சம்பவமே இந்த தாக்குதலுக்கு காரணமாகும். கடந்த வருடம் மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவமும் இலஞ்ச கலாசாரமே காரணமாகும். அதனால் மீண்டும் அந்த கலாசாரத்தை ஏற்படுத்தப்போகிறோமா? இவ்வாறான இராஜாங்க அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாக முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதில்லை. அதனால் இராஜாங்க அமைச்சரை அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
இதன்போது சபையில் இருந்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் இதற்கு பதிலளிக்கையில், ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறவில்லை என்றே அனைவரும் தெரிவித்திருந்தனர். பொலிஸாரினால் முன்வைக்கப்படும் அறிக்கையின் அடிப்படையிலேயே நீதிமன்றம் செயற்படுகிறது. அதனால் இதுதொடர்பாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பாக பூரண விசாரணை ஒன்றை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.- Vidivelli