முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம்: மசூரா மூலம் தீர்மானிப்பது எம்.பி.க்களின் பொறுப்பு

மு.கா.தலைவர் ஹக்கீம் கூறுகிறார்; நீதியமைச்சரின் கூட்டத்தில் எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை

0 308

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை சமூகப்பிரச்சினையாகும். இச்சட்டத்தில் திருத்தங்களை மசூரா மூலம் இறுதி செய்துகொள்ள வேண்டியது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும். திருத்தங்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஷரீஆ நியமங்களுக்கு அமைவாக காலதாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை இறுதி செய்து கொள்வதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு அழைத்திருந்தார்.

இதில் ரவூப் ஹக்கீமைத் தவிர ஏனைய முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை. நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற நிலையிலும் அவர்கள் இப்பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள வில்லை.

இது தொடர்பில் ரவூப் ஹக்கீம் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
சட்டதிருத்தங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக சமரசமாக தீர்மானிக்கப்படுவதே சிறந்ததாகும். இச்சட்ட திருத்தம் தொடர்பான நகர்வுகள் நீண்டகாலமாக இடம் பெற்றுவருகிறது. காலதாமதத்துக்கு உட்பட்டு வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் கலந்து கொண்டிருக்கின்றமை பாராட்டத்தக்கதாகும். நீதியமைச்சர் காலதாமதமின்றி சட்டதிருத்தங்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்றார்.
பேச்சுவார்த்தையில் சட்டத்திருத்தங்களுக்கான ஆலோசனை வழங்குவதற்காக முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இம்ரான் மகரூப் எம்.பி
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறிப்பிட்ட பேச்சுவார்த்தைக்கு நீதியமைச்சரிடமிருந்து தமக்கு அழைப்பு கிடைக்கவில்லையெனவும், எதிர்க்கட்சி அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த கலந்துரையாடல் இடத்துக்கு சென்றதாகவும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காகவே இப்பேச்சுவார்தை ஏற்பாடு செய்யப்பட்டதாக தான் கருதியதாகவும் எனினும் பெண்கள் பிரதிநிதிகளும் அங்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சிரேஷ்ட உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் கலந்துரையாடலுக்கு செல்லவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நீதியமைச்சர் ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடல் தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழு முஸ்லிம் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்தும் இக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீமைத் தவிர ஏனைய எம்.பிக்கள் கலந்து கொள்ளாமை கவலையளிப்பதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்திருந்தனர்.

கடந்த பல வருடங்களாக காதிநீதிமன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட, நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் 20 பெண்களும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் இவர்களது கருத்துக்களை செவிமடுக்க முஸ்லிம் எம்.பி.க்கள் வருகைதராமை ஏமாற்றமளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.