எம்.எல்.எம். மன்சூர்
”ஒன்பது: ஒளிந்திருக்கும் இரகசியம்” என்ற பெயரில் விமல் வீரவன்ச (சிங்களத்தில்) ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதன் வெளியீடு அண்மையில் கொழும்பில் வைபவரீதியாக இடம்பெற்றது. சீனத் தூதுவராலயத்தின் உயர் அதிகாரி ஒருவர் அந்த சபையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தார் என்பது ஒரு கூடுதல் செய்தி.
2022 மே 09, ஜூன் 09 மற்றும் ஜூலை 09 ஆகிய திகதிகளில் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகள் இலங்கை அரசை நிர்மூலமாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு மேலைத்தேச சதியின் விளைவுகள் என்பது அவர் அந்நூலில் முன்வைக்கும் முக்கிய வாதம்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஷங்க், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, உளவுத்துறை தலைவர் சுரேஷ் ஷலே மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ டி விக்ரமரத்ன ஆகியோர் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்த முக்கிய புள்ளிகள் என்கிறார் அவர். இந்திய உளவு நிறுவனமான ரோ இதில் சம்பந்தப்பட்டிருந்ததாக இப்போதைக்கு கூற முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்துகிறார்.
”இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஷங்க் மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தார்” என்பது அவரது முக்கியமான குற்றச்சாட்டு.
இதற்கு ஒரு டுவிட்டர் செய்தியின் மூலம் எதிர்வினையாற்றியிருக்கும் ஜூலி ஷங்க்:
”புனைகதை என வகைப்படுத்தக் கூடிய ஒரு நூலில் எம் பி ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பச்சைப் பொய்களைப் பரப்பியிருப்பது குறித்து நான் கவலையடைந்துள்ளேன்” என்கிறார்.
ஒரு விதத்தில் இந்த நூலில் அவர் வெளிப்படுத்துவதாகச் சொல்லும் ’இரகசியம்‘ ஒன்றும் புதியதல்ல. சில மாதங்களுக்கு முன்னர் ”ஹிரு” தொலைக்காட்சி ‘சலக்குண’ நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்லே குணவங்ச தேரர் சொன்ன அதே விடயங்கள் தான். அவர் அதில் மேலதிகமாக ரோ அமைப்பின் மீதும் குற்றம் சுமத்தியிருந்தார்.
சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரகல பூமியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட பின்னணியில், சரத் பொன்சேகா எவ்வித இடையூறுகளுமில்லாத விதத்தில் ஜூலை 09 ஆம் திகதி அங்கு சமூகமளித்து, உரை நிகழ்த்திய சம்பவத்தை அமெரிக்க சதிக்கான நிரூபணமாக முன்வைக்கின்றார் வீரவன்ச.
கோல்பேஸ் திடலுக்கருகில் காலி வீதி நெடுகிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ டிரக் வண்டிகள் அமெரிக்கத் தூதுவர் ஜூலியின் வேண்டுகோளின் பேரில் அகற்றிக் கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
மாலைதீவில் தஞ்சமடைந்திருந்த கோட்டாபய ராஜபக்சவுடன் தொடர்பு கொண்ட ஜூலி ஷங்க் தனது ராஜினாமா கடிதத்தையும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யும் கடிதத்தையும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்ததாகவும், அந்த இரு கடிதங்களையும் காமினி செனரத் தயாரித்து, மாலைதீவுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறும் வீரவன்ச, அதனையடுத்து சொல்லும் விடயம் மிக முக்கியமானது:
”உங்கள் ராஜினாமா கடிதத்தை மட்டும் கையொப்பமிட்டு அனுப்புங்கள். ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்யும் கடித்தத்தில் கையொப்பமிட வேண்டாம். இச்சந்தரப்பத்தில் ரணில் விலகினால் அது எமது குடும்பத்தின் பாதுகாப்புக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம்” என்ற வேண்டுகோளுடன் கொழும்பிலிருந்து சென்ற ஒரு தொலைபேசி அழைப்பையடுத்து ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்யும் கடிதத்தில் கோட்டாபய கையொப்பமிடவில்லை என்பது வீரவன்சவின் வாதம். ரணில் பதவி நீக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை இந்தியாவே அதிகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த நிர்ணயகரமான தொலைபேசி அழைப்பில் கொழும்பிலிருந்து பேசியவர் பசில் ராஜபக்ச என்கிறார் நூலாசிரியர்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கச் செய்வதே அமெரிக்காவின் ‘Plan A’ ஆக இருந்தது என்றும், ஜேவிபி யும் கூட (இந்த அமெரிக்கச் சதியை சரிவர புரிந்து கொள்ளாமல்) அத்திட்டத்திற்கு உடன்பட்டிருந்தது என்று குறிப்பிடுகிறது இந்நூல். (கடாபியின் மரணத்தின் பின்னர் லிபியாவிலும் இதே விதத்தில் பாராளுமன்ற சபாநாயகர் தலைமையில் ஓர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருந்தது).
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் முதல் தடவையாக இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியை எந்த அளவுக்கு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தும் வீரவன்ச, அந்த அவசரத்தில் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றவர்களை – ‘சிங்கள இனத்தை எதிரிகளிடமிருந்து மீட்டுத் தந்த மாபெரும் வெற்றி வீரர்களாக‘ யாருக்கு அவர் புகழாரம் சூட்டினாரோ அவர்களை – ‘அமெரிக்காவின் கையாட்கள்‘ எனக் குறிப்பிடுகிறார்.
அரகலயவில் பங்கேற்ற நடுத்தர வர்க்கம் (தாம் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமலேயே) ‘தோசைக் கல்லை நன்கு சூடாக்கிக் கொடுத்தது’ என்பதும், அதில் ஜூலி ஷங்க் ‘அநாயாசமாக தோசையை வார்த்தெடுத்தார்‘ என்பதும் இந்நூல் முன்வைக்கும் முதன்மையான வாதம்.
பசில் ராஜபக்சவுடன் தனக்கிருக்கும் வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் ஒரு வடிகாலாகத் தான் இந்த நூலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் வீரவன்ச. 2022 இல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பசில் ராஜபக்ச வேண்டுமென்றே திட்டமிட்டு, உருவாக்கிய ஒரு நெருக்கடி என்ற விசித்திரமான வாதத்தையும் அவர் முன்வைக்கிறார்.
அதன் மூலம் ஏனைய ராஜபக்சகளையும், அவர்களுடைய சிங்கள – பௌத்த பேரினவாத பெருந்திட்டத்துக்கு ஆதரவையும், அனுசரணையையும் வழங்கிய பிக்குகள், ஊடக முதலாளிகள், பெரு வணிகர்கள் மற்றும் (தன்னையும் உள்ளிட்ட) சிங்கள தேசியவாதிகள் ஆகிய தரப்புக்களை நிரபராதிகளாக்குவதற்கு அவர் முயற்சிக்கிறார்.
‘அரகலய’ முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் வீரவன்ச போன்ற ஒருவர் இவ்விதம் சதித் திட்டங்கள் (Conspiracy Theories) குறித்து பேச முற்பட்டிருப்பது ஏன்? அதற்கான நிர்ப்பந்தம் என்ன?
அடுத்து வரும் தேர்தல்களுக்கான ஒரு வியூகம் என்பதைத் தவிர இதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சுமார் 20 – 25% அளவிலிருக்கும் சிங்கள பௌத்த வாக்காளர்களை – ‘சிங்கள பௌத்தர்களுக்கு ஆபத்து’ என்ற தேர்தல் சலோகத்தை கேட்டு, உடனடியாக உணர்ச்சிவசப்படும் அப்பாவி சிங்கள வாக்காளர்களை – இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு காய் நகர்த்தல் இது.
இந்த வாக்கு வங்கி இன்னமும் மஹிந்த ராஜபக்சவின் கைகளில் தான் இருந்து வருகிறது. வீரவன்சவோ அல்லது சம்பிக ரணவக்கவோ அதனை இலகுவில் அபகரித்துக் கொள்ள முடியாது. அடுத்த தேர்தல்களிலும் அந்த வாக்குகள் ராஜபக்சகளுக்கோ அல்லது அவர்கள் கைகாட்டும் ஒருவருக்கோ தான் செல்ல முடியும். ராஜபக்சவின் சிங்கள பௌத்த செயல்திட்டத்தின் முக்கிய கோட்பாட்டாளர்கள்/ பரப்புரையாளர்கள் அதிகமானவர்கள் இப்பொழுது வீரவன்சவுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு (பசிலைத் தவிர) ராஜபக்ச சகோதரர்களுடன் பெரிதாக பிரச்சினைகள் எதுவுமில்லை (இந்த நூல் அதற்கான தெளிவான ஓர் அத்தாட்சி).
பொது வெளியில் மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து போலி விமர்சனக் கணைகளை முன்வைத்தாலும் கூட, மறைமுகமாக அவரை நோக்கி – அதற்கூடாக அவரது ஆதரவுத் தளத்தை நோக்கி – நீட்டப்படும் ஒரு நேசக் கரமாகவே இந்நூலைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜேவிபி/ என்பிபி கூட்டணியைத் தவிர, ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்பொழுது எதிர்கொண்டு வரும் தடுமாற்ற நிலை அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்வது எப்படி, அவற்றின் போது முன்வைக்க வேண்டிய சுலோகங்கள் எவை என்பது.
SLMC/ACMC போன்ற கட்சிகள் கொழும்பு அரசியலில் யாருடன், எதற்காக கூட்டுச் சேர்வது, அவ்விதம் உருவாக்கிக் கொள்ளப் போகும் கூட்டணிகளை தமது வாக்காளர்களிடம் நியாயப்படுத்துவது எப்படி என்ற தடுமாற்ற நிலையில் இப்பொழுது இருந்து வருகின்றன. TNA யையும் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் கூட அதே தடுமாற்ற நிலை நிலவுவதை அவதானிக்க முடிகிறது.
இந்தச் சூழ்நிலையில், சிங்களத் தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பில் தாம் இருந்து வர வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் விமல் வீரவன்ச போன்றவர்கள் ‘அரகலய ஒரு மேலைத்தேச சதி’ என்ற சுலோகத்தை இலகுவில் அந்த வாக்கு வங்கியிடம் சந்தைப்படுத்த முடியுமென்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே, நளின் டி சில்வா மற்றும் சேன தோரதெனிய போன்றவர்கள் ‘அரகலய சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பு’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்துள்ளார்கள். அரகல பூமியில் காணப்பட்ட ‘மிதமிஞ்சிய அளவிலான கிறிஸ்தவ – முஸ்லிம் பிரசன்னத்தையும்’ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
“Culture of Galle Face Protestors” என்ற தலைப்பிலான நீண்ட கட்டுரையில் சேன தோரதெனிய முன்வைத்திருக்கும் அவதானிப்புக்கள் சுவாரசியமானவை:
”ஜனாதிபதி செயலகத்தின் முன்புறச் சுவர்களில் ஏப்ரல் 17 ஆம் திகதி லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் சமஷ்டி மற்றும் ஈழ ஆதரவாளர்களின் ‘ஒருமித்த தேசம்’ என்ற சுலோகம் காட்சிப்படுத்தப்பட்டது. பிரிவினைவாதிகளினதும், TNA இனதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து வைக்கும் விதத்தில் அங்கு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது….. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோல்வியில் துவண்டு போயிருந்த குழுக்கள் கோல்பேஸ் திடலில் தஞ்சம் புகுந்திருந்தன. புலிகளின் இறுதிக் கோட்டையான முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி அங்கு நிறைவு கூரப்பட்டது….. இலங்கை அரசுக்கு சவால் விடுக்கும் விதத்தில் பிரபாகரனின் புகைப்படம், புலிச் சின்னம் மற்றும் ஈழத்தின் வரைபடம் என்பன அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன…..”
”புர்கா அணிந்த முஸ்லிம் பெண்கள் தமது சமய, கலாசார தளைகளை முற்றாகக் களைந்து விட்டு, ஏனைய இனங்களைச் சேர்ந்த ஆண்களுடன் நெருங்கிப் பழகுவதை எமது வாழ்வில் முதல் தடவையாக நாங்கள் பார்த்தோம். பிக்கு ஒருவரை மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கென ஒரு முஸ்லிம் யுவதி குடை பிடித்துக் கொண்டிருப்பதை எமது வாழ்வில் முதல் தடவையாக நாங்கள் பார்த்தோம். கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்குவதை எமது வாழ்வில் முதல் தடவையாக நாங்கள் பார்த்தோம். பிறப்பால் பௌத்தரான ஒரு பல்கலைக்கழக மாணவி அங்கு கன்னியாஸ்திரிகளின் உடையிலிருந்தார். குடை பிடித்த முஸ்லிம் பெண்ணும் கூட அவ்விதம் களமிறக்கப்பட்ட வேறொருவராக இருந்திருக்க முடியும்….. கத்தோலிக்க அருட் தந்தையர், கன்னியாஸ்திரிகள், முஸ்லிம் மௌலவிமார் மற்றும் ஏனைய முஸ்லிம் சகோதரர்கள் அங்கு பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். அதற்கான விளக்கம் என்ன?”
”கோல்பேஸ் திடலில் ஒன்று கூடியிருந்த பல்வேறு இனத்துவ மற்றும் சமயக் குழுக்கள் தமது சொந்த நிகழ்ச்சிநிரல்களை முன்னெடுப்பவர்களாக இருந்து வந்தார்கள் என்பதே எமது அனுமானம்….. அந்த எதிர்ப்புக் கலாசாரம் தேச விரோத இயல்பைக் கொண்டது; சிங்களவர்களுக்கு எதிரானது; அது சமஷ்டி ஆதரவு, ஈழ ஆதரவு கலாசாரம்…..”
வீரவன்சவின் நூலின் உள்ளடக்கமும் இந்தப் புள்ளியையே தொட்டுச் செல்கிறது. ஏனென்றால் இவ்விதமான பிரசாரங்களை நம்புவதற்கு இலங்கையில் இன்னமும் நிறையப் பேர் இருந்து வருகிறார்கள் என்ற விடயத்தை மஹிந்த ராஜபக்சவை போலவே அவருடைய முதன்மைச் சீடரான வீரவன்சவும் நன்கு அறிந்து வைத்துள்ளார்.- Vidivelli