நீர் கொழும்பு – படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்பே பகுதியில் ஓமான் முதலீட்டாளர் ஒருவர் மீது சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் அதிகார பின்னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியமை இன்று பல்வேறு மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பின்மையை உறுதிப்படுத்தியுள்ளதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நாட்டத்தை குறைக்கச் செய்யும் அபாயத்தை தோற்றுவித்துள்ளது.
ஏற்கனவே நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்திருக்கும் நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் விதத்தில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும், அதனை சீர்குலைக்கும் வகையிலேயே ஹல்பே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன், இராஜாங்க அமைச்சர் ஒருவரை தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளானது அரசாங்கத்தின் மீது சர்வதேச அரங்கில் அவநம்பிக்கையையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இது குறித்து நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
நளின் பண்டார எம்.பி. பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவுக்கு எதிராகவே குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இலஞ்சம் தொடர்பான சம்பவமே இந்த தாக்குதலுக்கு காரணமாகும். கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவமும் இலஞ்ச கலாசாரமே காரணமாகும். அதனால் மீண்டும் அந்த கலாசாரத்தை ஏற்படுத்தப்போகிறோமா? இவ்வாறான இராஜாங்க அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாக முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதில்லை. அதனால் இராஜாங்க அமைச்சரை அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம்” என சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர், ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறவில்லை என்றே அனைவரும் தெரிவித்திருந்தனர். பொலிஸாரினால் முன்வைக்கப்படும் அறிக்கையின் அடிப்படையிலேயே நீதிமன்றம் செயற்படுகிறது. அதனால் இதுதொடர்பாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பாக பூரண விசாரணை ஒன்றை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, ஓமான் முதலீட்டாளர் ஹல்பான் அல் அல் உபைதியை தொடர்ந்தும் பாதுகாப்பாக இலங்கையில் வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறித்த முதலீட்டாளரை சந்தித்து பேசியிருந்தார். இதன்போது, அவருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
குறித்த தொழிற்சாலையை கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தொழிற்சாலை மூடப்படமாட்டாது என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பன சர்வதேச முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவர பாடுபடுகின்றன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் இதுவிடயமாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வர்த்தக கண்காட்சியொன்று ஒக்டோபர் மாத இறுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், அரபு நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படுத்துவதானது இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளமுடியாத நிலைக்கே தள்ளிவிடும். இது விடயத்தில் அரசாங்கம் மிகப்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதுடன், பொதுமக்களும் தமது பொறுப்புக்களை உணர்ந்துகொள்ள வேண்டும். அத்தோடு, பேராசைபிடித்த அரசியல் குழுக்களின் குறுகிய மனநிலைகொண்ட இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் தாக்குதல் நடத்தியிருப்பது ஓமான் முதலீட்டாளர் மீது மாத்திரமல்ல, முழு இலங்கையிலுமுள்ள முதலீட்டாளர்கள் மீதே என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். முதலீட்டாளர்களைத் துரத்தியடிக்காது, இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளையே துரத்தியடிக்க வேண்டும்.– Vidivelli