காதி நீதிமன்றங்களினால் வழங்கப்படும் விவாகரத்து சான்றிதழ் பிரதியை பிரதேச செயலகத்தில் பெற முடியாமையினால் சிரமம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காதி நீதிமன்றங்களினால் வழங்கப்படும் விவாகரத்துக்கான சான்றிதழ்களின் பிரதிகளை பிரதேச செயலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாததால் முஸ்லிம்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக பதிவாளர் நாயகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவாகரத்தினைப் பதிவு செய்யும் விவாகரத்து பதிவுப் புத்தகம் 100 பக்கங்களைக் கொண்டதாகும். இப்புத்தகத்தில் 100 விவாகரத்துகளைப் பதிவு செய்யலாம். 100 பதிவுகள் மேற்கொண்டதன் பின்பே அப்புத்தகம் குறிப்பிட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்படும். இதேவேளை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்யப்படும் விவாகரத்து பதிவுகளின் பிரதிகள் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தப் பிரதிகள் பிரதேச செயலகங்கள் மூலம் பதிவாளர் நாயகத்தின் மத்திய ஆவண நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவே நடைமுறையாகும்.
ஆனால் இதன் ஸ்கேன் தொகுப்பொன்றினை பிரதேச செயலகங்கள் வைத்துக் கொள்வதில்லை. இதேவேளை திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் ஸ்கேன் தொகுப்பொன்றினை பிரதேச செயலகங்கள் பேணி வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் விவாகரத்து சான்றிதழுக்கு மாத்திரம் இந்தப் பாரபட்சம் காட்டப்படுவதாக காதிநீதிவான்கள் போரம் பதிவாளர் நாயகத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
காதி நீதிவான்கள்போரத்தின் உபதலைவர் இப்ஹாம் யெஹ்யா இது தொடர்பில் பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
விவாகரத்து பதிவு புத்தகத்தில் 100 பதிவுகள் பூர்த்தியானதன் பின்பே அப்புத்தகம் காதிநீதிபதியினால் பிரதேச செயலகங்களுக்கு கையளிக்கப்படுகிறது. இந்நிலையில் புத்தகம் கையளிக்கப்படும் வரை பிரதேச செயலகங்கள் விவாகரத்து பதிவு தொடர்பான சான்றிதழை கொண்டிருப்பதில்லை. காதிநீதிபதிகளால் மாதாந்தம் அனுப்பி வைக்கப்படும் பதிவின் பிரதி பதிவாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எனவே பிரதேச செயலகங்களில் முஸ்லிம்கள் விவாகரத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
விவாகரத்து பதிவு புத்தகங்களில் 100 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்பு அப்புத்தகம் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தால் இந்நிலைமை ஏற்படுவதில்லை. காதிநீதிமன்றங்களில் பயன்பாட்டில் இருக்கும் 100 பதிவுகள் முற்றுப் பெறாத புத்தகங்களிலுள்ள பதிவுகளுக்கே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை காதிநீதிபதிகள் போரம் சுட்டிக்காட்டியுள்ளது.
பின்வரும் பரிந்துரைகள் காதிநீதிபதிகள் போரத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையான விவாகரத்து பிரதிகளை பெற்றுக் கொள்வதற்காக பிரதேச செயலகங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு தொகுப்பு நகல்களை வைத்திருத்தல்
மாவட்ட நீதிமன்றங்கள் தங்கள் நீதிமன்ற பதிவாளர் பதிவு அறை மூலம் மற்ற விவாகரத்து தீர்ப்புகளை வழங்குவது போன்று காதி நீதிமன்றங்கள் மூலம் முஸ்லிம் விவாகரத்துச் சான்றிதழ்களைக் கையாள விரும்பினால் காதி நீதிபதிகள் வழங்கும் விவாகரத்து பிரதிகள் செல்லுபடியாகும் என்று சுற்று நிருபம் வெளியிடப்படலாம். இது மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாது தவிர்ப்பதாக அமையும்.
பொதுமக்கள் தேவைப்படும் போது விவாகப்பதிவு பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலக அலுவலகத்திலும் ஸ்கேன் செய்யப்பட்ட தொகுப்பு பிரதிகளைப் பராமரிக்கலாம். காதி நீதிபதிகளிடமிருந்து 100 பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட விவாகரத்து பதிவுப் புத்தகம் கிடைக்கப்பெறும் வரை இந்நடைமுறையைப் பின்பற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli