கொவிட் ஜனாசா பலவந்த எரிப்பு விவகாரம் : வழக்கு தொடர தீர்மானம்
அமைச்சரவை, சுகாதாரப் பணிப்பாளர், அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கிறார் முஜிபுர்
(எஸ்.என்.எம்.சுஹைல், எம்.வை.எம்.சியாம்)
கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாசாக்களை பலவந்தமாக எரித்தமை தொடர்பாக அப்போதைய அமைச்சரவை, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் மற்றும் நிபுணர் குழு ஆகியோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மருதானையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நிபுணத்துவ குழுவின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறார். அவரும் கோத்தாபயவின் அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்தவர் என்ற ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டும்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது. எனினும், இலங்கையில் அடக்கம் செய்வதற்கு கோத்தாபய அரசாங்கம் அனுமதி விழங்கவில்லை. அவர்களின் கடும்போக்குவாத சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொள்கை காரணமாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
இது குறித்து முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு, மனித உரிமைகள் ஸ்தாபனம் மற்றும் சர்வதேச அமைப்புகள் பலவும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தும், அவற்றை கண்டுகொள்ளாது ஜனாசாக்கள் எரிக்கப்பட்டன. இலங்கை முஸ்லிம்களை வேண்டுமென்றே அவர்கள் கொதிப்படையச் செய்தனர்.
இந்நிலையில், ஜனாசா எரிப்பது தொடர்பில் நிபுணத்துவக் குழுவே பிழையாக வழி காட்டியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருக்கிறார். அவர் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை கருத்திற்கொண்டு தப்பித்துக்கொள்ளவே இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கிறார்.
முஸ்லிம் மக்களையும், கிறிஸ்தவ மக்களையும் இன்னும் சில தரப்பினரையும் வெகுவாக பாதிப்படையச் செய்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் உடலங்களை எரித்த விவகாரமானது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். எனவே, இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட திட்டமிட்டிருக்கிறோம். இது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த வாரம் நீதிமன்றத்தை நாடுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
குறிப்பாக அப்போதைய அமைச்சரவை, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் மற்றும் நிபுணர்கள் குழுவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும்படியும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார். -Vidivelli