வெளிநாட்டு உளவுப்பிரிவுக்கு சஹ்ரானின் தொலைபேசி தரவுகளை கொடுத்தது ஏன்?
சந்தேகமாக இருக்கிறது என்கிறார் மைத்திரிபால
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்திய சஹ்ரானின் கையடக்கத் தொலைபேசியின் தரவுகளை வெளிநாட்டு உளவுப்பிரிவினர் எடுத்துச் செல்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட்டது என்பது வியப்பாக இருக்கிறது. சந்தேகத்துக்கு இடமாக இருக்கிறது. அந்த கையடக்கத் தொலைபேசியில் தாக்குதல் தொடர்பில் அநேக இரகசிய தகவல்கள் உள்ளடங்கியிருந்திருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இருக்கும் போது தான் இலக்கு வைக்கப்படுவது அசாதாரணமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘என்னால் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையை கையளித்தபோது முன்னாள் ஜனாதிபதியிடம் மேலுமொரு அறிக்கையை கையளித்தது. அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாமெனவும் வேண்டப்பட்டது. அந்த குறிப்பிட்ட அறிக்கையை வெளியிடுங்கள். அப்போது அந்த இரகசிய அறிக்கையில் என்ன உள்ளடங்கியிருக்கிறது என்பதை எம்மால் அறிந்து கொள்ள முடியும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை இறுதித்தீர்மானம் இல்லை. விரைவில் இதுபற்றி தீர்மானித்து என்னை சிறைக்கு அனுப்புவதற்கு கர்தினாலுக்கு தேவையாக உள்ளது. என்னை தூக்கு மரத்துக்கு அனுப்புவதற்கு முயற்சிக்கிறார். ஆனாலும் இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை.
உலகில் பிரசித்தி பெற்ற உளவுப்பிரிவினர் பலர் இலங்கைக்கு வருகை தந்தார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் உளவுப்பிரிவினர் வருகை தந்தார்கள். அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளில் உள்ளடங்கி உள்ளவைகள் வெளிப்படுத்தப்படவேண்டும்.
சஹ்ரானின் கையடக்கத் தொலைபேசியில் உள்ளடங்கியிருந்த தரவுகள் குறிப்பிட்ட உளவுப்பிரிவினருக்கு எடுத்துச் செல்வதற்கு யார் அனுமதி வழங்கியது? அந்த தரவுகளில் சில முக்கியமான விடயங்கள் உள்ளடங்கியிருக்கலாம். இது நூல் பந்து போன்ற சிக்கலான ஒன்று. இந்த அறிக்கை கத்தோலிக்க சபைக்கு வழங்கப்படுவதற்கு முன்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இப்போது என்னையே இலக்கு வைத்திருக்கிறார்கள். என் மீதே விரல் நீட்டுகிறார்கள். குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் சிறையில் இருக்கிறார்கள். நான் கைது செய்தவர்கள் 160 பேர் வரை சிறையில் இருக்கிறார்கள். கோத்தாபாய ராஜபக்ஷ இருவரை விடுதலை செய்தார். சஹ்ரானின் மனைவி என்று ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
நான் மூன்று வாரங்களுக்குள் சஹ்ரானின் தீவிரவாதக் குழுவினை அழித்தேன். இப்போது என்னைச் சுற்றி வருகிறார்கள். குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடருங்கள்.
நேற்றும், நேற்று முன்தினமும் சிலர் வீதிகளில் கோஷமிட்டார்கள். என்றாலும் குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் எதுவும் கூறவில்லை. அவர்கள் பற்றி கோஷமெழுப்பவில்லை. அவர்கள் உண்டு குடித்து சவர்க்காரம் பூசி குளித்து நன்றாக இருக்கிறார்கள். தலைமுடி வெட்டிக் கொள்கிறார்கள். எங்களையே குறி வைக்கிறார்கள்.
பாதுகாப்பு அதிகாரிகள் இத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியை தெளிவுபடுத்தவில்லை என வழக்கின் தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.என்றோ ஒரு நாள் இந்தச் சம்பவத்தின் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றார். -Vidivelli