சூடானில் உள்நாட்டுப்போர் தீவிரம் : 41 இலங்கை பிரஜைகளில் 13 பேர் சவூதியை அடைந்தனர்
62 நாடுகளைச் சேர்ந்த 2148 பேரை வெளியேற்றியது சவூதி அரேபியா
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சூடானில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு வாழும் 41 இலங்கையர்களில் 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கப்பல் மூலம் சவூதி அரேபியா, ஜித்தா துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையின் பதில் கொன்சியூலர் ஜெனரல் சவூதி அரசாங்கத்தின் உதவியுடன் இந்நடவடிக்கையை முன்னெடுத்ததாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கையர்களை சூடானிலிருந்து மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சூடானில் எஞ்சியுள்ள இலங்கையர்கள், இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சூடானில் போர் சூழலில் சிக்கியிருந்த சவூதி பிரஜைகள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த 91 பேர் சவூதி அரேபியாவினால் மீட்கப்பட்டு சவூதி அரேபியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹம்மூத் அல்கத்தானி தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் முதற்கட்ட மீட்பு நடவடிக்கையின் கீழ் அரச சவூதி கப்பற்படை சவூதி பிரஜைகள் மற்றும் சவூதி அரேபியாவின் சகோதரத்துவ, நட்பு நாடுகளின் பிரஜைகளை மீட்டு அழைத்து வந்தது.
91 பேரில் 66 பேர் வெளிநாட்டவர்களாவர். அவர்களில் இராஜதந்திரிகள், சர்வதேச அதிகாரிகள் அடங்குகின்றனர். இதேவேளை நேற்றுக்காலையும் சூடானிலிருந்து கப்பலொன்று ஜித்தா துறைமுகத்தை வந்தடைந்தது.
சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடானில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, மேலும் பல சவூதி அரேபியப் பிரஜைகள் உட்பட சகோதர மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களும் சவூதி அரேபியக் கப்பலொன்றின் மூலம் ஜித்தா நகரை வந்தடைந்தனர். இவர்களுள் 13 சவூதி அரேபியப் பிரஜைகளும், இலங்கை, ஓமான், சிரியா, லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, துனிசியா, லெபனான், எகிப்து, ஈராக், ஜோர்டான், பலஸ்தீனம், மொரிட்டானியா , யெமன், அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, ஆர்மீனியா, ஹங்கேரி, ஸ்வீடன், துருக்கி, எத்தியோப்பியா, சியரா லியோன், நைஜீரியா, செனகல், தான்சானியா, ஜிபூட்டி, கேப் வெர்டே, காங்கோ, மடகாஸ்கர், ஐவரிகோஸ்ட், சோமாலியா, தென்னாபிரிக்கா, போட்ஸ்வானா, மாலாவி, குரோஷியா, நிகரகுவா, லைபீரியா, தெற்கு சூடான், கென்யா, உகண்டா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா, சிம்பாப்வே, பாகிஸ்தான், சாட், பங்களாதேஷ், நைஜர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த 1674 பேர்களும் உள்ளடங்குவர்.
இதுவரை மொத்தமாக 62 நாடுகளைச் சேர்ந்த 2148 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் (114 சவூதி பிரஜைகள் மற்றும் 2034 ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்). அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வழங்க சவூதி அரேபியா சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவின் தலைமைத்துவமானது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ சவூதி அரேபிய பிரஜைகளின் நலன்களுக்காக எப்பொழுதும் செயற்படும் என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சூடானில் நிலவும் உள்நாட்டுப்போர் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, சூடானில் வாழும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சூடானில் வாழும் இலங்கையர்களுக்கு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சூடான் குடியரசுடன் அங்கீகாரம் பெற்ற கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதுரகம் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
கார்ட்டூம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுடன் தூதரகம் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறது. பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
சூடானில் உள்ள இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பில் உதவி பெற்றுக்கொள்வதற்கு தூதரக மின்னஞ்சல் slcaironsular@gmali.com தொலைபேசி + 201272813000 மற்-றும் கார்ட்டூமில் உள்ள இலங்கையின் தூதுவர் சயீத் அப்தெல்வினுடைய தொலைபேசி + 249912394035 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.-Vidivelli