கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இந்தத் தலைப்பை பற்றி ஆவணப்பட இயக்குனர் நாதியா பெரேராவின் வரலாற்று முக்கியம்பெற்ற படைப்பொன்றை அண்மையில் யூரியுப் வழியாகப் பார்த்து ரசிக்க நேர்ந்தது. அது இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரச் செழிப்புக் காலமொன்றை நினைவுக்குக் கொண்டு வந்ததாலும், அதனை அச்சமூகத்தின் இளம் சந்ததியினர் மறந்து வாழ்வதையிட்டு மனம் நொந்ததாலும், அந்த முதுசத்துக்குப் புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்பதாலும் இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன். இதிலே வரும் சில கருத்துக்கள் பலருக்கு மனக்கிலேசத்தை ஏற்படுத்துமாயின் அதற்காக வருந்துகிறேன்.
வைசியராக வந்த முஸ்லிம்கள் வைசியத்தையே பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டு வைதீகப் பாதையிலே போதிக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவி, வியாபார மையம், பள்ளிவாசல், குடும்பம் என்ற முக்கோணத்துக்குள்ளேயே தமது வாழ்வை வரையறையிட்டு, வெறும் ஜடத்துவ தேவைகளையும் ஆன்மிக தேவைகளையும் மட்டுமே பூர்த்தி செய்துகொண்டு வாழ்வதால் ரசாஞான தேவை என்ற ஒன்றை அவர்கள் மறந்துவிட்டனர். அதனால் அவர்களின் வாழ்வு ஒரு பூரணவாழ்வல்ல என்ற ஓர் சமூகவியல் உண்மையை காலஞ் சென்ற காத்தான்குடிக் கவிஞர் அப்துல் காதர் லெப்பை தனது பூரண வாழ்வு என்ற சிறு நூலில் யதார்த்தத்துடன் விளக்கியுள்ளார். அந்த நூலை எத்தனை முஸ்லிம்கள் வாசித்துள்ளனரோ தெரியாது. ஆனால் அவர் படம்பிடித்துக்காட்டிய முஸ்லிம் சமூகம் 1950களுக்குப் பின்னர் உருவானதொன்று என்பதையும் அதற்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வு கலாரசனையும் ரசாஞானமும் கலந்திருந்தது என்பதையும் அந்த வாழ்வு மீண்டும் மறுமலர்ச்சி காணவேண்டும் என்பதையுமே இக்கட்டுரை வலியுறுத்துகிறது. அதற்கொரு தூண்டுதலாக அமைந்துள்ளது நாதியா பெரேராவின் ஆவணப்படம். அவருக்கு இக்கட்டுரையாளனின் நன்றிகள்.
இஸ்லாத்துக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. திருக்குர்ஆனே ஒரு இசைப் பொய்கை என்றால் அது மிகையாகாது. அதன் ஒவ்வொரு வசனங்களையும் பயிற்றப்பட்ட காரிகள் மீட்கும்போது மொழி விளங்காதவர்களும் அந்தத் திருவசனங்களில் மெய்மறந்திடுவர். எட்டாம் நூற்றாண்டிலேயே யூனுஸ் அல் காதிப் என்பவர் இசைபற்றிய முதலாவது நூலை அரபு மொழியில் வெளியிட்டு பல பாடல்களையும் அவர் அதிலே கோர்வை செய்தார். இஸ்லாமிய கிலாபத் காலத்தில் பக்தாதும் கொர்டோபாவும் இஸ்தாம்புலும் இஸ்பகானும் தில்லியும் மற்றும் தலைநகர்களும் இஸ்லாத்தின் அரசியல் மையங்களாகவும் பொருள்வளம் கொண்ட பொக்கிஷச் சாலைகளாகவும் மட்டுமல்லாது கலைப் பீடங்களாகவும் திகழ்ந்தன என்பதை வரலாறு காட்டும். கிலாபத் ஆட்சி முடிவுக்குவந்து தேசிய உணர்வின் வெளிப்பாடுகளாக முஸ்லிம் நாடுகள் உருவாகியதன் பின்னரும் கலை வளர்ச்சி அங்கே பல கோணங்களில் மிளிரத் தொடங்கியது.
வானம்பாடியென சுற்றித் திரிந்து தன் இனிமையான குரலால் அரபு உலகத்தையே மயக்கிய உம்மு குல்துமை யாரும் மறக்க முடியுமா? அதேபோன்று பாக்கிஸ்தானின் நுஸ்ரத் பதே அலிகானின் கவாலி ராகக் கானங்கள் மேற்குலகின் பொப் இசைப் பாடகர்களையும் பிரமிக்க வைத்ததை மறுக்கத்தான் முடியுமா? இலங்கையிலும்கூட காலஞ்சென்ற மொகிதீன் பேக் பாடிய புத்தம் சரணம் கச்சாமே என்ற பாடல் பௌத்த மக்களையே மெய்சிலிர்க்க வைத்ததையும் யாரும் மறுப்பரோ? அந்தப்பாடல் கவாலி இசையில் பாடப்பட்டதென்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ? இந்த வளர்ச்சி 1950களுக்குப்பின் மங்கத் தொடங்கியதேன்? அதற்கு விடைகாணும் முன்னர் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இன்னும் சில உண்மைகளை வாசகர்முன் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
களிக்கம்பு, ஊஞ்சல் பாட்டு, பக்கீர் பைத், றப்பாணம், நாட்டுக்கவி, மீன் வலை இழுப்போரின் ஏலேலேப் பாடல்கள், விருத்தம், பதம் என்றவாறு எத்தனையோ வகையான இசை மரபுகளுக்குச் சொந்தக்காரர்கள் இலங்கை முஸ்லிம்கள். நெல் வயலிலே ஏர் பூட்டி உழுகையிலும், கன்னியர் களை பிடுங்கும்போதும், பறவைகளை விரட்டும்போதும், வயற்கட்டிலே பரண் அமைத்து ஆண்களுடன் பெண்களும் களிப்புடன் போட்டிக்குக் கவிபாடுதலை கிழக்கிலங்கையின் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. அறுவடை செய்த தானியத்தை மாட்டு வண்டிகளிலே ஏற்றிக்கொண்டு முஸ்லிம் முல்லைக்காரர்கள் கரைவாகுப்பற்றிலிருந்து காத்தான்குடிவரை போடிமார் வீட்டுக்கு இரவோடிரவாகக் கொண்டு செல்லும்போது கண் விழித்திருப்பதற்காக அவர்கள் பாடும் கவிகளில் காதற் சுவையும், பக்திப் பரவசமும், நையாண்டிச் சுவையும், வசைகளும் மலிந்து காணப்படும். பள்ளிக்கூடப் படிக்கட்டிலும் கால்வைத்திராத பாமர முஸ்லிம் பெண்களும் இயல்பாகவே கவிபாடும் திறமை பெற்றிருந்ததை என்னென்று வியப்பதோ?
ஊரிலே களிக்கம்பு விழா அந்தே ஊரே களைகட்டி நிற்கும். களிக்கம்பு மேடைக்குக் கதாநாயகன் அண்ணாவியார். அவருக்குச் சமூகத்தில் ஊர் வைத்தியர், பள்ளி மரைக்காயர் போன்றவர்களின் அந்தஸ்துக்குச் சமமான மதிப்பு இருந்தது. அவரை வெற்றிலை வட்டா வைத்து களிக்கம்பு மேடைக்கு அழைத்து வருவர். பெண்கள் குரைவையிட்டு அவரின் ஊர்வலத்துக்கு மெருகூட்டுவர். அந்த நிகழ்வைக் கண்டுரசிக்க ஆண்களும் பெண்களும் வெண்ணிலவு நாட்களிலே திரள்வதால் ஊரே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கிடக்கும். அதே போன்று நபிபெருமானாரின் பிறந்த தினக் கொண்டாட்டங்களிலும் மற்றும் பெருநாள் பண்டிகைக் காலங்களிலும் திறந்த வெளியிலே பேரூஞ்சல் அமைத்து ஆண்கள் விருத்தம்பாடி இரவிலே ஆடுவர். பெண்களுக்கும் தனவந்தர் வீட்டு வளவுகளுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடச் செய்வர்.
பக்கீர் பாடல்களோ அலாதியானது. மின்சார வெளிச்சம் இல்லாதிருந்த காலத்தில் றமழானிலே சஹர் வேளைக்கு தூக்கத்திலிருக்கும் மக்களை தட்டியெழுப்புவது பக்கீர்களின் தகராவும் அவர்களின் பாடல்களுமே. அதுமட்டுமல்லாமல் சில பள்ளிவாசல்களில் கொடியேற்ற காலத்தில் இரவிரவாக அவர்களின் பைத்துகளைக் கேட்கலாம். கல்முனை கடற்கரைப் பள்ளியின் கொடியேற்றமென்றால் வெளியூர்களிலிருந்தும் மக்கள் திரள்வர். அவர்களை ஈர்ப்பது பக்தியல்ல, பக்கீர்களின் சாகச விளையாட்டுகளும் பாடல்களுமே என்பதை யதார்த்தவாதிகள் உணர்வர்.
இந்த இசை மரபுகளை கட்டிக்காத்து அவற்றை ரசித்துக் களித்த ஒரு காலம் முஸ்லிம்களிடையே இருந்தது. கிழக்கிலங்கை இந்துக் கோயில் முற்றங்களிலே வருடாவருடம் சித்திரை மாதத்தில் கூத்து நாடகம் அரங்கேறுவது வழக்கம். அவை இந்துக்களின் விழா என நினைத்து முஸ்லிம்கள் அதிகம் அங்கே செல்வதில்லை. ஆனால் அவற்றிற்கு ஈடாகவே மேற்கூறிய களியாட்டங்கள் முஸ்லிம் கிராமங்களில் நடைபெற்று வந்தன என்றும் கூறலாம். இவ்வாறு கலாரசனையுடன் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏன் 1950களுக்குப்பின்னர் ஜடத்துவ தேவைகளுக்கும் ஆன்மீக தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரசாஞான தேவைகளைக் கைவிடத் தொடங்கினர் எனபதற்கு விடை காண்போம்.
1950களுக்குப் பின் தப்லீக் இயக்கமும் 1970களுக்குப்பின் வஹ்ஹாபித்துவமும் நுழையத் தொடங்கி மதப் புனருத்தாரணம் என்ற பெயரில் அறிமுகப்படுத்திய சில கொள்கைகள் முஸ்லிம்களின் இசை மரபுகளுக்கு ஓர் இடியாய் விழுந்து அவர்களின் கலாரசனைக்கும் ஒரு புதிய விளக்கத்தை கொடுத்தன. அதற்கு இன்னொரு காரணம் தமிழ், ஹிந்தி, சிங்களத் திரைப் படங்களின் தாக்கம் என்றும் கூறலாம். இவை இரண்டினதும் விளைவாக உருவாகியதே இஸ்லாமிய கீதம் என்ற கலப்பட இசையின் வளர்ச்சி. அதை வளர்ப்பதற்கு ஊன்றுகோலாக விளங்கியது இலங்கை வானொலியின் இஸ்லாமிய நிகழ்ச்சி. இஸ்லாமிய கீதம் என்பது பெரும்பாலும் சினிமாப் பாடல்களின் நகலேதவிர அவற்றில் எந்தத் தற்பண்பும் இல்லை. ஆனால் அதன் மோகத்தாலும் மௌட்டீக மதக் கொள்கைகளாலும் பரம்பரை இசை மரபுகள் படிப்படியாகத் தேயத் தொடங்கி இன்றைய முஸ்லிம் இளஞ்சந்ததிக்கு அவ்வாறான ஒரு மரபு இருந்ததென்ற ஞாபகமே இல்லாமல் போய்விட்டமை அச்சமூகத்தின் துரதிஷ்டம்.
இசைக்கு மொழி, மதம், இனம் என்ற பிரிவுகள் கிடையா. அது மனித இதயங்களின் பசிக்குக் கிடைக்கும் மிகச்சுவையான உணவு. ரசாஞான தேவையின் மிகவும் முக்கியமான ஒரு பிரிவு இசை. அதனை வழங்குவோரை சர்வ உலகமே பாராட்டும். இல்லையென்றால் ஏ. ஆர். ரகுமானுக்கு அமெரிக்காவிலே ஏன் ஆஸ்கார் விருது இரு முறை கிடைக்க வேண்டும்? பிஸ்மில்லா கானின் ஷெனாய் வாசிப்புக்கு ஏன் இங்கிலாந்துவரை புகழ்பரவ வேண்டும்? எல்லாவற்றுக்கும் மேலாக ஏன் இறைவன் தாவுத் நபிக்கு இசையை அருட்கொடையாக வழங்க வேண்டும்? திருக்குர்ஆனின் திரு வசனங்கள் ஏன் இசையோடு கலந்திருக்க வேண்டும்? இவற்றை மதத்தின் புனிதவாதிகள் என்று கூறுவோர் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இன்றைய இளம் சந்ததியை ஒன்றிணைக்கும் சக்திகளுள் இரண்டு மிகவும் வலுவானவை. ஓன்று விளையாட்டு, மற்றது இசை. இரண்டிலுமே இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று பின் நிற்கிறது. ஏன்? இரண்டு கோடி மக்களைக் கொண்ட இச்சமூகத்தில் ஏன் பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு ஓர் இசைக் குழு இல்லை? முஸ்லிம் இளைஞர்களிடம் திறமை இல்லையா அல்லது அத்திறமைக்குத் தடையாய் அமைந்துள்ள மதக் கொள்கைகளா? 1970களிலே அன்றைய முஸ்லிம் கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்முத் இசையை கவின்கலைகளுள் ஒரு பாடமாக முஸ்லிம் பாடசாலைகளில் புகுத்த முயன்றபோது முல்லாக்களும் அரசியல்வாதிகளும் சேர்ந்து நடாத்திய எதிர்ப்புப் போராட்டம் இஸ்லாமிய வைதீகவாதத்தின் எதிரொலி என்பதை இக்கட்டுரை வலிந்துரைக்கிறது.
இலங்கை இன்று இனவாதத்தால் சீரழிக்கப்பட்டு இனங்களுக்கிடையே உள்ள உறவுகள் அற்ப அரசியல் நோக்கத்துக்காக மட்டுமேயன்றி மனித நேயத்துக்காக அல்ல என்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனை இன்றைய இளந் தலைமுறை உணர்ந்துள்ளதற்குக் கடந்த வருடம் காலிமுகத் திடலில் நடைபெற்ற இளைஞர் போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு. அதே வேளை கடந்த சுமார் அரை நூற்றாண்டுகளாக முஸ்லிம்களிடையே வளர்ச்சிபெற்ற மதவாதம் அவர்களின் நடையுடை பாவனைகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்களைப் புகுத்தியது மட்டுமல்லாமல் அவர்களுக்கும் மற்றைய இனங்களுக்கும் இடையே உள்ள சமூக உறவையும் பாதித்துள்ளது. அந்த உறவை மீண்டும் பலப்படுத்துவதற்கு இசை ஒரு சிறந்த கருவியாகலாம். அதற்கு ஒரு வழி மறைந்துவரும் முஸ்லிம் இசை மரபுகளுக்குப் புத்துயிர் அளிப்பது. இதனை ஒரு சிறு உதாரணத்தைக் கொண்டு இக்கட்டுரை விளக்குகிறது.
வருடா வருடம் கண்டி மாநகரிலே நடைபெறும் எசல பவனி பௌத்த விழாவாகவே ஆரம்பித்தது என்பது உண்மைதான். ஆனால் அது இன்று வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் அவர்கள் கொண்டுவரும் அன்னியச் செலாவணியையும் கவரும் ஒரு கவர்ச்சிக் கலாச்சாரக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. பத்து இரவுகளாகப் பல்லாயிரக்கணக்கான மக்களின் பார்வையை ஈர்க்கும் ஒரு விழா அது. அந்தப் பவனியில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன் செல்ல அவற்றைப் பின்தொடர்ந்து கண்டிய நடனங்கள், காவடிக் கூத்துகள், மேளங்களின் ஓசைகள் என்றவாறு பல களிப்பூட்டும் காட்சிகள் இடம்பெறும். அதிலே தமிழினமும் கலந்து கொண்டு சிறப்பிப்பது அச்சமூகத்தின்மேல் பௌத்த மக்களுக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது. ஆனால் எங்கே முஸ்லிம்கள்? பக்கீர் தகரா பவனியொன்று அதற்குரிய கலாச்சார ஆடைகளுடன் அவ்விழாவில் பங்குபற்றினால் அல்லது ஓர் அண்ணாவியார் தலைமையில் களிக்கம்பு ஆட்டம் அந்த விழாவில் இடம்பெற்றால் இன உறவு வலுப்பெறாதா? இதனால் இஸ்லாம் மாசடைந்து விடுமா? வாசகர்களே சிந்தியுங்கள்.
சிங்களக் கிராமங்களுக்குள் முடங்கிக் கிடந்த கிராமிய நாடகக் கலைக்கு புதுமெருகு ஊட்டி நாடே கண்டு களிக்கும் ஒரு கலாச்சார பரரம்பரியச் சொத்தாக மாற்றியவர் பேராசிரியர் சரச்சந்திர. அதேபோன்று கோயில் வளவுகளுக்குள் சிறையுண்டிருந்த அண்ணாவி மரபுக் கூத்து நாடகங்களுக்குப் புத்துயிரளித்து அதனை தமிழரின் வாழும் கலையாக மாற்றியவர் பேராசிரியர் வித்தியானந்தன். அவர்களை நாடும் சமூகமும் மறக்காது. அவ்வாறு கவனிப்பாரற்று அருகிவரும் முஸ்லிம்களின் இசைப் பாரம்பரியத்துக்கு மறுவாழ்வழித்து கலை மறுமலர்ச்சி ஒன்றைத் தோற்றுவிக்க இன்றைய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் முஸ்லிம் விரிவுரையாளர்கள் அல்லது பேராசிரியர்கள் எவரும் முன்வருவார்களா? இது காலத்தின் தேவை. நாதியா பெரேராவின் ஆவணப்படம் அந்த வகையில் ஒரு விழிப்பூட்டும் சித்திரமாக அமைகின்றது.
இறுதியாக ஒன்று. இது சர்ச்சைக்குரிய ஒரு விடயம். அந்தத் திரை ஓவியத்திலே பங்குகொண்ட ஓரிருவர் முஸ்லிம் கன்னியர் பதின்ம வயதுக்குமேல் இசையில் ஈடுபட்டால் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை தேடுவது கஷ்டமாகிவிடும் என்ற ஓர் ஆணாதிக்கக் கருத்தை முன்வைத்தனர். இது குர்ஆனின் போதனைக்கு எதிர்மாறானது. அத்திருமறை மூன்று இடங்களில் இறைவன் வானத்தையும் பூமியையும் அவற்றிற்கிடையேயுள்ள யாவற்றையும் விைளயாட்டுக்காகப் படைக்கவில்லை என்று கூறுகிறது. அவ்வாறாயின் எதற்காக அவை படைக்கப்பட்டன? இதற்கு விடைகாண சமூவியலைத்தான் நாடவேண்டும். மனிதன் உட்பட ஒவ்வொரு படைப்புக்குள்ளும் ஏதோ ஓர் இரகசியத்தை அல்லது திறமையை இறைவன் பொதித்துள்ளான். அதனை வெளிப்படுத்துவதுதான் சமூகத்தின் கடமை. அதனை வெளிப்படுத்துவதன் மூலம்தான் அந்தச் சமூகம் செழிப்புறும். அந்த வழியில் பார்த்தால் உம்மு குல்துமின் இசைவன்மையும் நுஸ்ரத் பத்தே அலிகானின் பாடல்திறனும் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த வரன். அதை வெளிப்படுத்தியதனாலேதான் அவர்களின் நாமம் இன்றும் மங்காதிருக்கிறது. இதை உணர்ந்தால் ஆணோ பெண்ணோ என்ற பேதம் இல்லாமல் இசைத் திறனுள்ள எந்த உயிரையும் திருமணத்தின் பெயரால் மட்டந்தட்டுவது குர்ஆனின் போதனைக்கு மாறானது. முஸ்லிம் சமூகத்தின் ஆணாதிக்கம் பெண்களை படுக்கையைறைக்கும் சமையற் கூடத்துக்குமட்டுமே தேவையான ஜீவன்கள் என்றவாறு ஒதுக்கி வைத்துள்ளது. அந்தக் கோட்டையைத் தகர்த்துக்கொண்டு இன்றைய முஸ்லிம் பெண்கள் வெளிவருகின்றனர். அதற்கு இலங்கை முஸ்லிம் சமூகம் விதிவிலக்கல்ல.-Vidivelli