சூடானில் வெடித்துள்ள உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் இல்லை என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து நேற்று வரை 460 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4600 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் சவூதி அரேபியா ஈடுபட்டு வருகிறது. நேற்று வரை 62 நாடுகளைச் சேர்ந்த 2148 பேர் வெளியேற்றப்பட்டு சவூதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதில் இலங்கையர்களும் அடங்குவர். இக்கட்டான இந்த சூழ்நிலையில் சவூதி அரேபியாவின் இந்த அர்ப்பணிப்பை பல்வேறு நாடுகளும் பாராட்டியுள்ளன.
இதனிடையே, அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட அது முழுவீச்சில் அமுல்படுத்தப்படவில்லை என சூடானுக்கான ஐ.நா. தூதுவர் வோல்கர் பெர்தஸ் தெரிவித்திருக்கிறார். “இருதரப்புமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. ஏனெனில் ஆயுத பலம் மூலம் நிச்சயமாக வெற்றி பெறலாம் என இரு தரப்புமே நம்புகிறது. இந்தச் சூழலில் சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் இரு தரப்பும் அதற்கு கட்டுப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல் சூடானின் கார்ட்டூம் நகரில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கூடமும் கலவரக்காரர்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் ஆராய்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளில் கசிவு ஏற்படலாம். இதனால் சூடானில் தொற்றுநோய் பரவலாம் என்று உலக சுகாதார நிறுவனத் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 முதல் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் சூடான் ஆயுதப் படைகளும் (எஸ்ஏஎஃப்), துணை இராணுவப் படையும் (ஆர்எஸ்எஃப்) கடந்த 15 ஆம் திகதி முதல் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.
சூடான் பல தசாப்தங்களாக பல்வேறுபட்ட மோதல்களை சந்தித்துள்ளது. சூடான் அரசாங்கத்திற்கும் டார்பூரில் பல்வேறு ஆயுதமேந்திய எதிர்க்கட்சி குழுக்களுக்கு மிடையே நீண்டகாலமாக மோதல்கள் இடம்பெற்று வந்தன. அத்துடன் தெற்கு கோர்டோபான் மற்றும் நீல நைல் மாநிலங்களில் இடம்பெற்ற மோதல்களும் குறிப்பிடத்தக்கவை. வளங்களைப் பகிர்தல், நில உரிமைகள் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றல் ஆகிய காரணங்களுக்காகவே அங்கு தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
சூடானை நீண்டகாலம் ஆட்சி செய்துவந்த உமர் அல்-பஷீர் 2019 ஏப்ரலில் இடம்பெற்ற மக்கள் எழுச்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். இதனையடுத்து அங்கு ஓர் இடைக்கால அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அந் நாடு தொடர்ந்து அரசியல் ஸ்திரமின்மை, பொருளாதார நெருக்கடிகள், இராணுவம் மற்றும் பொது மக்களுக்கிடையிலான மோதல்கள் என தொடர்ச்சியான வன்முறைகளுக்கு முகங்கொடுத்து வருகிறது.
கடந்த வருடம் ஒக்டோபரில், சூடானின் கிழக்குப் பகுதியில் அரசாங்கப் படைகளுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது ஆயிரக் கணக்கான பொது மக்கள் இடம்பெயர்வதற்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்தது. இந் நிலையிலேயே புதியதொரு மோதல் வெடித்து நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
சூடானில் அமைதி திரும்ப வேண்டுமானால் முரண்பாட்டுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் மனந்திறந்த பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் சமரச முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பிரச்சினைகளின் மூல வேர் கண்டறியப்பட்டு தீர்வுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். நாட்டில் ஜனநாயக நிறுவனங்கள் பலப்படுத்தப்படுவதுடன் பொருளாதார ஸ்திரத்தன்மை தோற்றுவிக்கப்பட வேண்டும். எனினும் இவை அனைத்து ஓரிரு மாதங்களிலோ வருடங்களிலோ சாத்தியமாகக் கூடியவையல்ல. எனினும் இதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதும் அழுத்தங்களை வழங்குவதும் சர்வதேச நாடுகளின் கடப்பாடாகும்.
சூடானில் மோதல்கள் நீங்கி, அமைதி திரும்பவும் அப்பாவிப் பொது மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படவும் பிரார்த்திப்போமாக.- Vidivelli