உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 4 வருடங்கள் ; நீதி கிட்டுமா?

0 337

ஏ.ஆர்.ஏ.பரீல்

இலங்­கையை மாத்­தி­ர­மல்ல சர்­வ­தே­சத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு 2023.04.21 ஆம் திகதியுடன் நான்கு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­ன்றன.

மூன்று தசாப்­த­கா­ல­மாக நாட்டில் நடந்து கொண்­டி­ருந்த உள்­நாட்­டுப்போர் சூழ்­நி­லையில் கூட­ இவ்­வா­றான ஒரு பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெ­ற­வில்லை.
கிறிஸ்­தவ மக்­களின் புனி­த­மான உயிர்த்த ஞாயிறு தினத்தில் மத வழி­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்த அப்­பாவி மக்கள் மீது இந்தப் பயங்­கரவாதத்­தாக்­குதல் மேற் கொள்­ளப்­பட்­டமை இலங்கை வர­லாற்றில் அழி­யாத கறை­யாகப் படிந்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு முஸ்லிம் சமூகம் பல­வ­கை­யிலும் இலக்கு வைக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களின் பள்ளிகள், வீடுகள், கடைகள், வர்த்­தக நிறு­வ­னங்­கள் தீ­யிட்டுக் கொளுத்­தப்­பட்­டன.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் என­க் கூ­றப்­படும் சஹ்ரான் ஹாஷிமின் தலை­மை­யி­லான 10 தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டது. மூன்று கிறிஸ்­தவ ஆல­யங்கள், மூன்று ஹோட்­டல்கள் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கின. இத்­தாக்­கு­தலில் வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் உட்­பட 272 பேர் பலி­யா­னார்கள். 500க்கும் மேற்­பட்டோர் காயங்­க­ளுக்கு உள்­ளா­னார்கள்.

உயிர்த்த ஞாயிறு மத­வா­ழி­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்த குடும்­பங்கள், வயோ­திபர், சிறு­வர்கள் பெண்கள் எனப் பலர் பலி­யா­னார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்ற காலத்தில் ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன இருந்தார். எதிர்­கட்­சித்­த­லை­வ­ராக மஹிந்த ராஜ­பக்ஷ பதவி வகித்தார். தாக்­குதல் நடை­பெற்ற 2019 ஆம் ஆண்டின் இறு­தியில் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எதிர்­க்கட்சி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜ­பக்ஷ தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். அவர் நாட்டின் தேசிய பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­தை­ய­டுத்தே ஜனா­தி­ப­தி­யாக அதி­கப்­ப­டி­யான பெரும்­பான்மை வாக்­கு­களால் நாட்டு மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

இத்­தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த மைத்­திரி பால சிறி­சேன மற்றும் கோத்­தா­பய ராஜ­பக்ஷ அத்­தோடு தற்­போது பதவி வகிக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்­கங்­க­ளினால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டும் இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­தவர்கள் யாரென இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. கத்­தோ­லிக்க ஆலயம் மற்றும் பிர­ஜைகள் சிலர் உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் வழக்­கொன்­றினை தாக்கல் செய்­தி­ருந்­தனர். விசா­ரணை அறிக்­கை­க­ளின்­படி முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் நான்கு சிரேஷ்ட பாது­காப்பு அதி­கா­ரிகள் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டனர். அவர்கள் தமது கட­மை­யினை உதா­சீனம் செய்­தமை, கிடைக்­கப்­பெற்ற உள­வுத்­த­க­வல்­களின் அடிப்­ப­டையில் செயற்படாமை போன்ற ­குற்றங்களுக்காக மில்­லியன் கணக்­கான ரூபாய் நஷ்ட ஈடாக செலுத்த வேண்­டு­மென உத்­த­ர­வி­டப்­பட்­டது. என்­றாலும் நீதி­மன்றம் இத்­தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­ யா­ரென இனங்­கா­ண­வில்லை. எனவே சூத்­தி­ர­தா­ரியை இனங்­காண வேண்­டிய நிலைமை தொடர்­கி­றது.

பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித்
அர­சாங்­கத்தின் புனன் விசா­ர­ணைகள் இது­வ­ரை­காலம் திருப்­தி­க­ர­மா­ன­தாக அமை­ய­வில்லை. அவ்­வி­சா­ர­ணை­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தெரி­வித்­துள்ளார்.

தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு எதி­ரா­கவும் எதிர்­கா­லத்தில் அவர் தனது பத­வி­யி­லி­ருந்து வெளி­யே­றி­யதும் நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­படும் என பேராயர் எச்­ச­ரித்­துள்ளார். ஜனா­தி­பதி எப்­போதும் பத­வி­ வ­கிக்க முடி­யாது. ஆனால் கத்­தோ­லிக்க ஆலயம் தொடர்ந்தும் இருக்கும். தான் பத­வியில் இல்­லா­விட்­டாலும் தனக்­குப்பின் பத­வியில் இருக்கும் பேராயர் வழக்கு தொட­ருவார் எனவும் எச்­ச­ரித்­துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று பேராயர் மிகுந்த கவ­லை­யுடன் தனது ஆதங்­கத்தை வெளி­யிட்டார். கொழும்பு உயிர்த்த ஞாயிறு மத­வ­ழி­பாட்டில் அவர் பின்­வ­ரு­மாறு கூறினார். ‘ உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு எத்­தனை வரு­டங்கள். நான்கு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­விட்­டன. ஆனால் இது­வரை நீதி கிடைக்­க­வில்லை. என்ன நடந்­தது. பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் யார்? என்­பது எவ­ருக்கும் தெரி­யாது. நாங்கள் நீதிக்­கா­கவும் உண்­மைக்­கா­கவும் போரா­டிக்­கொண்­டி­ருக்­கிறோம். பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்டம் 1979 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருக்கும் நிலை­யிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம் பெற்­றுள்­ளது. இச்­சட்டம் அமுலில் இருக்­கும்­போதே அச்­சட்டம் பாது­காப்பு தரப்­பி­னரால் முறை­யாகக் கையா­ளப்­ப­ட­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யின்­படி இலங்கை பொலிஸ் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட அதி­கா­ரிகள் சிலர் தமது கட­மையில் தவ­றி­யி­ருக்­கி­றார்கள். இந்­தத்­தாக்­குதல் தொடர்பில் ஏற்­க­னவே அறிந்­தி­ருந்தும் அத­னைத்­த­டுப்­ப­தற்கு தவ­றி­யி­ருக்­கி­றார்கள். இவர்­க­ளுக்கு எதி­ராக ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் இவர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் ஆணைக்­குழு இவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு பரிந்­துரை செய்­துள்ள நிலையில் அவர்­களில் ஒரு­வரை அடுத்த பொலிஸ்மா அதி­ப­ராக நியமிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றமை நகைப்­புக்­குரி­ய­தாகும் என்றும் பேராயர் தெரி­வித்­துள்ளார்.

சாரா புலஸ்­தினி விவ­காரம்
உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சாரா புலஸ்­தினி விவ­காரம் இன்று விமர்­ச­னங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது. தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணைகளில் தொடர்ந்தும் மர்­ம­மாக இருந்து வந்த நீர்­கொ­ழும்பு, கட்­டு­வாப்­பிட்டி தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்­திரன் எனும் சாரா ஜெஸ்மின் உயி­ரி­ழந்து விட்­ட­தாக பொலிஸ் திணைக்­களம் கடந்த மாத இறு­தியில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது.

சாரா­வுக்கு என்­ன ­ந­டந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­யை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட நிலையில் அது குறித்த பரி­சோ­த­னை­க­ளில்­ இறப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சாராவின் தாயா­ரான ராஜ­ரத்­தினம் கவி­தா­வி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­ட டி.என்.ஏ. மாதி­ரி­க­ளுடன் 2019.04.26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது வெலி­வே­ரியன் கிரா­மத்தின் வீடொன்­றுக்குள் நடந்த ­ வெடிப்­பி­னை­ய­டுத்து அங்­கி­ருந்து எடுக்­கப்­பட்ட எலும்புத் துண்­டுகள் பல­வற்றின் டி.என்.ஏ. மாதி­ரிகள் தாயொ­ரு­வ­ருக்கும் பிள்­ளைக்கும் இடையே காணப்­படும் உயி­ரியல் தொடர்­பினை உறு­திப்­ப­டுத்தும் சான்­றாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

சாரா சாய்ந்­த­ம­ருது வெடிப்புச் சம்­பவத்தில் உயி­ரி­ழந்­தாரா?என்­பதை அறி­வ­தற்­காக ஏற்­க­னவே நடாத்­தப்­பட்ட இரண்டு டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களில் வெடிப்புச் சம்­ப­வத்தில் சாரா உயி­ரி­ழக்­க­வில்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. என்­றாலும் மூன்­றா­வது தட­வை­யா­கவும் பொலி­ஸாரால் டி.என்.ஏ. பரி­சோ­த­னைக்கு உத்­த­ர­விட்டு அப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. இப்­ப­ரி­சோ­தனை தற்­போது விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. சாரா குண்டு வெடிப்பு சம்­ப­வத்தில் இறந்­து­விட்டார் என்று உறு­தி­ப்ப­டுத்­து­வ­தற்­கா­கவே திட்­ட­மிட்டு இப்­ப­ரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது
கட்­டு­வப்­பிட்டி தற்­கொலை குண்­டு­தா­ரியின் மனை­வி­யான சாரா புலஸ்­தினி இத்­தாக்­குதல் தொடர்­பான பல விட­யங்­களை அறிந்­த­வ­ராவார். இவர் கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணி­யையும்,சூத்­தி­ர­தா­ரி­க­ளையும் இல­குவில் இனங்­காண முடியும். இதன்­பின்­ன­ணியில் இருந்த முக்­கிய புள்­ளி­களை இனங்­கா­ணாமல் இருப்­ப­தற்­கா­கவும், தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலில் இருந்து சாரா விவ­கா­ரத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கா­க­வுமே பொலிஸ் திணைக்­க­ளத்­தினால் இந்த அறி­விப்புச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான முயற்­சிகள் மக்கள் மத்­தியில் சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளன. தாக்­கு­தலின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களைப் பாது­காப்­ப­தற்கு அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் முயற்­சிப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. அவர்கள் இனங்­கா­ணப்­ப­ட­வேண்டும். சமூ­கத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

அர­சியல் சூழ்ச்­சியா?
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் ஓர் அர­சியல் சூழ்ச்சி என பொது­வான கருத்து நில­வு­கி­றது. இவ்­வி­டத்தில் முன்னாள் சட்­டமா அதிபர் தெரி­வித்த கூற்­றொன்று தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் பாரிய இர­க­சிய சதித் திட்­ட­மொன்று இருந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்ளார். அதி­கா­ரத்தைக் கைப்­பற்றிக் கொள்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட அர­சியல் சூழ்ச்சி என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

குற்­ற­வா­ளிகள் சட்ட பாது­காப்பின் கீழ், சட்­டத்தின் பிடியில் அகப்­ப­டாது தப்­பித்துக் கொண்­டுள்­ள­னர். இவ்­வா­றான சூழ்­நி­லையில் இது­போன்ற தாக்­கு­தல்கள் இடம்­பெ­ற­மாட்­டா­தென்­பது என்ன நிச்­சயம். சிலர் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கு இவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொள்­ளலாம் அல்­லவா? அதனால் நாட்டு மக்கள் அனை­வரும் இன மத பேதங்­களை மறந்து நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக ஒன்­றி­ணைய வேண்டும்.

போது­மான உளவுத் தக­வல்கள் இருந்தும், கிடைக்­கப்­பெற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை தடுக்­கத்­த­வ­றி­யமை அடிப்­படை மனித உரிமை மீறல் என உயர் நீதி­மன்றம் கடந்த ஜன­வரி மாதம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளமை இத்­தாக்­குதல் தொடர்­பான விட­யங்­களில் ஒரு திருப்பு முனை­யாகும்.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பணிப்­பா­ளரும், தற்­போதைய பொலிஸ் நிர்­வாக பிரிவின் சிரேஷ்ட பிர­திப்­பொலிஸ் மாஅ­திபருமான நிலந்த ஜய­வர்­தன, தேசிய உளவுச் சேவை பிர­தா­னி­யாக இருந்த சிசிர மெண்டிஸ் என்போர் அடிப்­படை மனித உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக உயர் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.

இதற்­க­மைய முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்ட ஈடாக 100 மில்­லியன் ரூபாவை வழங்க வேண்­டு­மென நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. மேலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன ஆகியோர் தலா 75 மில்­லியன் ரூபா­வையும், முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ 50 மில்­லியன் ரூபா­வையும், சிசிர மெண்டிஸ் 10 மில்­லியன் ரூபா­வையும் நஷ்ட ஈடாக வழங்க வேண்­டு­மென நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

முஸ்லிம் சமூகம்
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு முஸ்லிம் சமூ­கமே சூத்­தி­ர­தா­ரி­யாக்­கப்­பட்­டது. முஸ்லிம் சமூ­கமே இலக்­கு­வைக்­கப்­பட்­டது. முஸ்லிம் சமூ­கத்தின் மீதே தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஐ.எஸ்.பயங்கரவாதிகள் என பெயர் சூட்டப்பட்டது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஐ.எஸ். தீவிரவாதம் பற்றி எதுவுமே அறியாதவர்கள்.

ஆனால் தாக்­கு­தல்­தா­ரி­களை இயக்­கி­ய­வர்கள் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக இவ்­வா­றான சதி முயற்­சி­களில் ஈடு­பட்­ட­வர்கள், அதி­கா­ரத்தின் பலத்தின் மூலம் சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்தும் தப்­பித்து சுக­போகமாக வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள். இவர்­களை இனங்­கண்டு சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்­காக கிறிஸ்­தவ சமூகம் அய­ராது பாடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. போராட்­டங்­க­ளையும் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடாத்திக் கொண்­டி­ருக்­கி­றது. அவர்­களை பேராயர் வழி நடாத்திக் கொண்­டி­ருக்­கிறார்.

இதே­வேளை முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் இலக்கு வைப்­ப­தற்கு கார­ணமாய் அமைந்­துள்­ளது. இந்­நி­லையில் முஸ்லிம் சமூ­கத்தின் தலை­வர்­களும் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­களை வெளிச்­சத்­துக்கு கொண்டு வரு­வ­தற்­காக குரல்­கொ­டுக்க வேண்டும். உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாலே சமூகத்தின் மீது படிந்துள்ள கறை அகல்வதற்கு வழிபிறக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.