நோன்பு பெருநாள் காலத்தில் அக்குறணை பகுதிக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
கண்டி மாவட்டம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ரமழான் இறுதி நோன்புப் பெருநாள் காலப்பகுதியில் அக்குறணையில் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்து கண்டி மாவட்ட பள்ளிவாசல் நிர்வாகங்கள் இது தொடர்பில் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களுக்கு அந்தந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேரில் சென்றும், தொலைபேசி மூலமும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் பள்ளிவாசலுக்கு வருகைதரும் அறிமுகமில்லாதவர்கள், புதியவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்கும்படி பள்ளிவாசல் நிர்வாகிகள் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏதும் சந்தேகம் நிலவினால் உடனடியாக பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளும் படியும் கோரப்பட்டுள்ளனர்.
மேலும் பயணப்பொதிகள், பார்சல்கள் தொடர்பில் கவனம் செலுத்தும்படியும் அவ்வாறு பயணப்பொதிகளுடன் வருபவர்களை சோதனை செய்யுமாறும் வேண்டப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள உளவுத்தகவல்களின்படி குண்டு வெடிப்புச் சம்பவங்களை தவிர்ப்பதற்கும், சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்குமே இந்த ஏற்பாடுகள் அவசியம் எனவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பொலிஸாரினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் பள்ளிவாசல் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக்கூடாது எனவும் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாதெனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கண்டி மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனமும் பள்ளிவாசல் நிர்வாகங்களை இக்கால கட்டத்தில் விழிப்புடன் செயற்படுமாறு கோரியுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு ஒத்துழைக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கண்டி மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் கருத்து தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு ஒவ்வோர் ஏப்ரல் மாதமும் கண்டி மாவட்ட மஸ்ஜித் நிர்வாகங்கள் இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கமாகும். ஆனால் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் புலனாய்வுத் தகவலின் பின்பு இவ்வருடம் இவ்விவகாரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேற்று அக்குறணை அஸ்னா பள்ளிவாசலுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக அக்குறணை மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் செயலாளர் இர்பான் காதர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அக்குறணைப் பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அக்குறணையில் சுமுகமான நிலைமை நிலவுவதாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத்தினருமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடவளை, உடதலவின்ன போன்ற பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வத்தேகம பொலிஸார் நேரில் சென்று அவதானமாக செயற்பாடுமாறு வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு தெல்தோட்டை பிரதேச பள்ளிகளுக்கு கலஹா பொலிஸாரும், கம்பளை பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு கம்பளை பொலிஸாரும் சென்று பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகையின் பின்பு அக்குறணை அஸ்னா பள்ளிவாசலுக்கு வருகை தந்த கண்டி உதவி பொலிஸ் அத்தயட்சர் மற்றும் அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்போர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
குண்டுதாக்குதல் சம்பவமொன்று இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு உளவுப்பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். அத்தோடு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தரப்பினர் ஈடுபடுத்தப்படுவர் எனவும், தேவையேற்படின் வீதித்தடைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு தரப்பினரால் முடிந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஊர் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டனர்.
மேலும் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்துபவர்கள் பயணிக்கும்போது பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்தும்படி உத்தரவிட்டால் அதன்படி நிறுத்தப்படாவிட்டால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் அதிகாரிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
பள்ளிவாசல்களுக்கு வருகைதரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பரிசோதனை செய்யப்படவேண்டுமெனவும் பொலிஸார் வேண்டிக்கொண்டனர்.
அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் டாக்டரை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.
பொலிஸாரின் வேண்டுகோளினையடுத்து அக்குறணை மஸ்ஜிதுகளின் சம்மேளன நிர்வாகிகள் அவசர கூட்டமொன்றினை நடத்தி மக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் தீர்மானத்தை மேற் கொண்டுள்ளதாகவும் மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அஸ்மி பாரூக் தெரிவித்தார்.
எதிர்வரும் சில நாட்களுக்கு மக்களின் பாதுகாப்பு கருதி, அக்குரணை மஸ்ஜிதுகள் சம்மேளனம் சில ஒழுங்குகளை அமுல்படுத்தியுள்ளது. அவ் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.
- ஒவ்வொருவரும் அவரவரது ஊர் பள்ளிவாசல்களில் தொழுது கொள்ளுதல்.
- பள்ளிவாசல்களுக்கு அந்தந்த ஊர் மக்கள் மாத்திரம் சமுகமளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- மஸ்ஜிதுகளுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தி வைக்க அனுமதி வழங்காதிருத்தல்.
அக்குரணை பஸார் மஸ்ஜித்களில் பெண்கள் இரவுத் தொழுகைக்கு வருவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுதல் - அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நகருக்கு வருதல்.
பஸாரிலுள்ள கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள, கடை உரிமையாளர்கள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல். - இளைஞர்கள் ஊரில் தேவையற்ற வகையில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிவதை முற்றாகத்தவிர்த்துக் கொள்ளுதல் நன்று.
- குறிப்பிட்ட விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரிமாறுவதை முற்றாகத் தவிர்த்தல், தங்களது குடும்பத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
- ஊரில் சந்தேகத்திக்கிடமாக யாராவது நடமாடுவதைக் கண்டால், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தல்.
- குறிப்பிட்ட அறிவித்தல்களை ஊர் ஜமா அத்தர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமெனவும் மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் இதனைக் கண்காணிக்க வேண்டுமெனவும் வேண்டப்படுகின்றனர்.
– Vidivelli