வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263.55 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய அரச மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 263.55 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன.
அதற்கமைய 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுமார் 84523.84 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தினர் வசம் காணப்பட்டன. அதன்பின்னர் 2018 நவம்பர் 25 ஆம் திகதியாகும் போது இராணுவத்தினர் வசம் காணப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் அளவும் 66754.59 ஏக்கர்களாக பதிவாகியுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
மேலும், 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தினரிடம் 58181.12 ஏக்கர் வரையிலான அரச காணிகள் காணப்பட்டன. அதன் பின்னர் 2018 நவம்பர் 25 ஆம் திகதியாகும் போது 45980.97 ஏக்கர் அரச காணிகளே இராணுவத்தினர் வசம் காணப்பட்டன.
இந்த வகையில் இராணுவம் வசமிருந்த தனியார் காணிகளை எடுத்துக்கொண்டால் 2009 ஆம் ஆண்டில் 26342.72 ஏக்கர் காணிகளில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டுவந்த காணி விடுவிப்பிற்கமைய 2018 நவம்பர் 25 ஆம் திகதியாகும்போது 237773.62 ஏக்கர் காணிகளே இராணுவத்தின் வசம் காணப்பட்டன.
அதனடிப்படையில் சுமார் 79 வீதமான அரச காணிகளும் , 90 வீதமான தனியார் காணிகளும் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2018 நவம்பர் 25 ஆம் திகதி வரையில் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
இந்த நிலையிலேயே, டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இராணுவம் வசமுள்ள அரச மற்றும் தனியார் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
அதில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 130.66 ஏக்கர் அரச காணிகளும், 132.89 ஏக்கர் வரையிலான தனியார் காணிகளும் உள்ளடங்கலாக 263.55 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
-Vidivelli