(எம்.எப்.அய்னா)
கண்டி -அக்குரணை பகுதியில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற உளவுத் தகவலை அடுத்து, அப்பகுதி பூரண இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (18) இரவு முதல் இந்த பாதுகாப்பு நடைமுறை அமுல் செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் 118 அவசர அழைப்பு இலக்கம் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினை மையப்படுத்தி, பொலிஸ் மா அதிபர் ஊடாக கண்டி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட உளவுத் தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் விடிவெள்ளிக்கு குறிப்பிட்டார்.
இந் நிலையில், பொலிஸார் முன் வைத்த கோரிக்கை பிரகாரம் தாமும் அக்குரணை பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு படையினரை அனுப்பியுள்ளதாகவும் அவர்களும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் விடிவெள்ளிக்கு கூறினார்.
இந் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கண்டிக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததுடன், பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி மக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம் என பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இந் நிலையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவலை மையப்படுத்தி சிறப்பு விசாரணை ஒன்றும் முன்னெடுக்கப்படும் நிலையில், அக்குரணை நகரில் மக்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli