கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
“உறங்குகின்ற கும்பகர்ண உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றதின்று காண்;, எழுந்திராய்! எழுந்திராய்!!” (கம்பராமாயணம்)
முஸ்லிம்களுக்கு இது ஒரு புனிதமான மாதம். ஒவ்வொரு வருடமும் இந்த மாதம் எப்போது வருமென்று காத்திருக்கும் மாதம். பகல்தோறும் பசித்திருந்து இரவு நேரத்தை இறை வணக்கத்திலும் பாவமன்னிப்புக் கேட்பதிலுமாகக் கழிக்கும் அருட்கொடை மாதம். அதனாலேதான் நாட்டு நடப்பு பற்றியும் அரசியல், பொருளாதார விடயங்களைப்பற்றியும் என் கட்டுரைகளில் அலசி அவர்களின் சிந்தனையை வேறுதிசையில் திருப்பக் கூடாதென நினைத்து அமைதியாக இருந்தேன். ஆனால் ஒளிமயமான எதிர்காலமொன்று வரவிருக்கிறது என்ற ஒரு மாயையை சிருஷ்டித்து அதனை தடுப்பதற்கு முனையும் சகல எதிர்ப்புகளையும் பயங்கரவாதச் செயல் எனக் கருதும் ஒரு சட்டத்தையும் இயற்ற எத்தனிக்கிறது அரசு. அந்தப் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் அதனால் சிறுபான்மை இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படுவர் என்பதையும் உணர்ந்து அதனைப்பற்றி இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன். இராமாயணத்தின் மேற்கூறிய இரு வரிகள் இக்கட்டுரையின் உள் நோக்கத்தை தெளிவாக்குமெனவும் நினைக்கிறேன். இவ்விடயத்தைப் பற்றிய ஓர் ஆங்கிலக்கட்டுரை ஏற்கனவே கொழும்பு தெலிகிறாபிலும் பைனான்சல் ரைம்ஸிலும் வெளியாகியுள்ளது.
ஒளிமயமான மாயை
கடந்த வருடம் காலிமுகத் திடலிலே குழுமிய இளை ஞர்களின் எழுச்சிப் படை சிங்கள பௌத்த இனவாதச் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட அரசியல் சமூக பொருளாதார அமைப்பையே மாற்று என்ற மகத்தான ஒரு கோரிக்கையை முன்வைத்து அமைதியுடன் தனது பேராட்டத்தை ஆரம்பித்தது. அந்த மாற்றம் இல்லாமல் ஒளிமயமான எதிர்காலமொன்றை இலங்கையில் உருவாக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இன்றுள்ள அரசியல் தலைமைத்துவம் பொருத்தமற்றது என்பதையும் அவ்விளைஞர்கள் உணர்ந்ததனால் “225 வேண்டாம்” என்ற இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்துக் கிளர்ச்சி செய்தனர். எல்லா இனத்தவரையும் மொழியினரையும் உள்ளடக்கி ஆண் பெண் பாகுபாடற்று அரசியல் சாயமின்றி நான்கு மாதங்களாக அமைதியுடன் நடைபெற்ற அக்கிளர்ச்சி உலகத்தின் கவனத்தையே தம்பக்கம் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனை என்று பலராலும் பாராட்டப்பட்டது.
ஆனால், அக்கிளர்ச்சியைக் கண்டு நடுங்கிய பழைய அமைப்பிலே ஊறித்திழைத்து அதன்மூலம் அமோக பயனடைந்த அரசியல் தலைவர்கள் என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். ஈற்றில் அந்தப் போராட்டத்தை எவ்வழியிலேனும் முறியடிக்கத் திட்டமிட்டு ஒரு கூலிப்படையினரை ஏவி வன்முறையை அவிழ்த்துவிட்டனர். தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல அந்த வன்செயல் பிரதமர் மஹிந்தவை பதவி துறக்கச் செய்து, ஜனாதிபதி கோத்தாவையும் நாட்டையே விட்டோடச் செய்து, ஈற்றில் 2019 பொதுத் தேர்தலில் படு தோல்வியைக் கண்ட ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக அமர்த்திவிட்டது. மக்களால் தெரிவு செய்யப்படாமல் அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் அவர்.
புதிய ஜனாதிபதியின் எண்ணக் கருவில் ஒளிமயமான எதிர்காலம் அமைவதற்கு கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பு மாற்றம் அவசியம் இல்லை, பொருளாதார மீட்சியே தேவை என்ற கருத்து ஏற்கனவே குடிகொண்டிருந்தது. எனவே அவர் முதலாவதாகச் சாதித்தது இளைஞர்களின் கிளர்ச்சியை காவல் துறையினரைக்கொண்டு முறியடித்தமையாகும். அவர்களின் தலைவர்களை சிறைக்குள் தள்ளி ஏனையோரை அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வெற்றிவாகை சூடினார். அந்தச் சாதனையால் ராஜபக்ச அரசுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் புதிய ஜனாதிபதி பழைய அமைப்பின் பாதுகாவலன் என்பதை உறுதிப்படுத்திற்று. ஆனால் ஜனாதிபதியோ தன் செல்வாக்கை நாடாளுமன்றத்துக்கு வெளியே பொது மக்களிடம் பெருக்க வேண்டுமானால் அந்த வெற்றி மட்டும் போதாது என்பதை நன்குணர்ந்து தனது கவனத்தை வங்குரோத்தான பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் திருப்பலானார்.
திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பர். அதேபோன்று பொருளாதாரத்திலும் தாராண்மை கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இலங்கை போன்ற திறந்த பொருளாதாரங்கள் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுத் திக்கற்று நின்றால் அதற்குத் துணையாக சர்வதேச நாணய நிதிதான் உண்டு. எனவே ஜனாதிபதி ரணிலும் அந்த நிதியின் காலடியில் சரணடைந்ததில் எந்த வியப்பும் இல்லை.
அந்த நிதியோ தனது விதிகளுக்கு அடிபணிய விரும்பினால் 2.9 பில்லியன் டொலர்களை எட்டுத் தவணைகளில் கொடுத்து உதவுவதற்கு முன்வந்தது. அந்த விதிகளுக்கு அமையவே ஜனாதிபதியும் நிதி அமைச்சர் என்ற முறையில் 2023ஆம் வருடத்துக்கான வரவுசெலவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரம் பெற்றார். அந்த அறிக்கை அமுலாக்கிய வரிப்பளுவும் கட்டணங்களும் பொதுமக்களிடையே எவ்வாறான கசப்பை உருவாக்கிற்று என்பதை மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் எடுத்துக்காட்டின.
இருந்தும் நாணய நிதியின் பண உதவி கிட்டியதாலும் நாட்டின் கடன்பழுப் பிரச்சினை சற்றுத் தள்ளிப்போடப்பட்டதாலும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டதால் அப்பொருள்களின் விலைகள் குறையத் தொடங்கி அவற்றுக்கான நுகர்வோர் கியூ வரிசைகளும் மறையத் தொடங்கின. இந்த மாற்றங்களே பொருளாதாரப் பொற்காலம் பிறந்துவிட்டதென்ற ஒரு மாயையை இப்போது தோற்றுவித்துள்ளது. இந்த மாயையையின் பின்னணியிலேதான் அறிமுகமாக இருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஆராய வேண்டும்.
ஒரு வாரிசு
அறிமுகமாக இருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஜெயவர்த்தன ஆட்சியில் 1979ல் அமுலாக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் வாரிசு. இந்த வாரிசின் தாய்ச் சட்டம் புலிகளின் வன்செயல்களின் பின்னணியிலும் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் பின்னணியிலும் உருவாக்கப்பட்டதால் பௌத்த சிங்களப் பேரினவாதிகளும் சிங்களச்சமூகமும் அதனை பூரணமாக ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. ஏன், முஸ்லிம்களும்தானே அதனை ஆதரித்தார்கள். ஆனால் 2009ல் புலிகளின் படைகளைப் பூண்டோடு அழித்த பின்னரும் அச்சட்டம் எவ்வாறு சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஒரு ஜனாதிபதியின் கைகளில் ஜனநாயகத்தையே ஒழித்துக்கட்டி மனித உரிமைகளையும் பறிக்கும் ஓர் ஆயுதமாக மாறலாம் என்பதை கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சி மிகவும் துல்லியமாக விளக்கியது. அந்தச் சட்டத்தினாலேதான் மனித உரிமைச் சட்டத்தரணியும் நிரபராதியுமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சிறையில் அடைக்கப்பட்டதை முஸ்லிம்கள் மறந்திருக்கமாட்;டார்கள். அதேபோன்று 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதலின்பின்பு எத்தனை முஸ்லிம்கள் அச்சட்டத்தினால் இன்றும் சிறையி;ல் அடைபட்டுக் கிடக்கின்றார்கள் என்பதையும் மறப்பதற்கில்லை
பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்திற்கெதிரான போராட்டம் கோத்தாபய ஆட்சியலேதான் சூடுபிடிக்கத் தொடங்கியது. சிவில் சமூக இயக்கங்கள், மனித உரிமைத் தாபனங்கள், புலம்பெயர் இலங்கையர் அமைப்புகள், தொழிற் சங்கங்கள் என்றவாறு பல கோணங்களிலிருந்தும் எதிர்ப்புகள் ஆரம்பமாகி அது உலக அரங்கிலே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கவனத்தையும் ஈர்த்தது. இலங்கையின் ஜனநாயக மரபுகள் படிப்படியாக அச்சட்டத்தின் பிடிக்குள் சிக்கி சிதையத் தொடங்கியதை உணர்ந்த உலக அரங்கு அச்சட்;டத்தை நீக்குமாறு வற்புறுத்தியது. பொருளாதார வங்குரோத்துக்குள் சிக்கித்தவித்த இலங்கை அரசுக்கு வெளிநாடுகளின் உதவிகளையும் அதிலும் குறிப்பாக மேற்குலகின் பொருளாதார உதவிகளையும் சலுகைகளையும் பெறவேண்டுமானால் அச்சட்டத்தை நீக்குவதன்றி வேறுவழி தெரியவில்லை.
ஆனால் அந்தச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிக்கொண்டு இப்போது அறிமுகப்படுத்த இருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முன்பிருந்த சட்டத்தின் நகல்போன்று இருப்பதாக அதனைப்படித்த சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, அரசாங்கத்தின் வரிகளுக்கெதிரான ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டால் அவ்வாறு திட்டமிட்டோரை பயங்கரவாதிகளெனக் கருதி இந்தச் சட்டத்தின்கீழ் தடைசெய்ய முடியும். அதேபோன்று சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினால் அதையும் பயங்கரவாதமெனக் கருத இச்சட்டத்தில் இடமுண்டு. இவ்வாறு நினைத்தவாறெல்லம் ஓர் அரசு தனது எதிராளிகளின்மீது குற்றம் சுமத்தக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும் சட்டங்கள் உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு சட்டவியல் ரீதியான ஒரு வரைவிலக்கணம் இதுவரை இயற்றப்படவில்லை. அவ்வாறு ஒரு வரைவிலக்கணத்தை இயற்றுவதை உலக வல்லரசுகளும் விரும்பவில்லை. அதனாலேதான் அரசுகள் தமக்குப் பிடிக்காத எதிர்ப்புகளை எல்லாம் பயங்கரவாதம் என்ற கூட்டுக்குள் காலவரையின்றித் தள்ளிவிடலாம். அதைத்தான் ரணிலின் ஆட்சியும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்மூலம் செய்ய முனைகிறது.
ஏன் இந்தச் சட்டம்?
இக்கட்டுரையின் ஒரு முக்கிய கேள்வி இந்தச் சட்டம் இப்போது அறிமுகப்படுத்தப்படுவதன் அந்தரங்கம் என்ன என்பதுதான். அதன் பின்னணி என்ன?
அமைப்பையே மாற்று, அந்த மாற்றத்தைக் கொண்டுவர ஒரு புதிய தலைமைத்துவம் வேண்டும் என்று போராடிய இளைஞர்களைத் துரத்தியடித்துவிட்டு, சில பொருளாதார மாற்றங்களையும் நாணய நிதியின் உதவியுடன் கொண்டுவந்து, இன்னும் 25 ஆண்டுகளில் இலங்கை ஒரு பொற்காலத்தில் மிதக்கும் என்ற ஒரு மாயையை ஜனாதிபதி சிருஷ்டித்துள்ளார் என்பதை ஏற்கனவே கண்டோம். ஆனால் அது முடியாதென்பதையும் அவர் உணர்வார். மீண்டும் பொருளாதாரக் கார்மேகங்கள் உலகப் பொருளாதாரத்தைச் சூழும் என்பதை சர்வதேச நாணய நிதியே அறிவித்துள்ளது. அதற்குரிய காரணங்களை இங்கே விளக்கப்போனால் இக்கட்டுரை மிகவும் நீண்டுவிடும் என்பதால் அதனை வேறெரரு கட்டுரையில் விளக்குவேன். எனினும் உலகப் பொருளாதாரமே சரியும்போது உலக சந்தையை நம்பி இயங்கும் இலங்கையின் பொருளாதாரம் மட்டும் துரித வளர்ச்சி காண முடியுமா?
உலகப் பொருளாதார நிலைமை ஒரு புறமிருக்க, இலங்கையின் கடன் இறுப்புச் சீரமைப்பைப் பற்றிய பேச்சுவர்த்ததைகள் இன்னும் ஆரம்பமாகவில்லை. அதன் விளைவுகள் பொருளாதாரக் கஷ்டங்களை மேலும் வலுவடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் விலைவாசிகள் ஏறுவதையும் பணவீக்கம் உயர்வதையும் வட்டிவீதம் அதிகரிப்பதையும் தடுக்க முடியாது. அவற்றைத் தடுக்க இன்றைய மத்திய வங்கிகள் செயலிழந்து நிற்கின்றன என்பதை பொருளியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில் அரசு கடும் எதிர்ப்பினை மக்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
அரசியல் காரணம்
ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிடப் போவது நிச்சயம். ஆனால் அதற்காக மக்களின் ஆதரவைப் பெறவேண்டுமானால் அந்த மக்களை தான் சிருஷ்டித்துள்ள மாயையில் தொடர்ந்து மயங்கவைக்க வேண்டும். அதே வேளை அந்த மாயையின் வெற்று வடிவத்தை மக்களுக்கு உணர்த்தி நாட்டின் அரசியல் சமூக பொருளாதார அமைப்பையே மாற்றவேண்டும் என்ற போராட்டம் மீண்டும் வெடிக்கலாம் என்பதும் அவருக்குத் தெரியும். அந்த முயற்சியில் தேசிய மக்கள் சக்தி இப்போது முன்னிலையில் நிற்கிறது. அதன் அணியில் இளைஞர் சமூகமும் திரள்கிறதும் அவருக்குத் தெரியும். இளைஞர்களை தனது வலைக்குள் சிக்கவைக்க அவர் கையாண்ட யுக்திகளெல்லாம் பலனளிக்கவில்லை. எனவேதான் வருமுன் காப்போனாக அவர் எடுக்கும் முயற்சியின் வடிவமாக அமைகின்றது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.
முஸ்லிம்களே! விழிப்புறுங்கள்
அமைப்பை மாற்றாமல் தனது மாயைக்குள் சிறுபான்மை இனங்களையும் இழுப்பதற்காக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகவும் அவர் கூறுகிறார். ஏற்கனவே இரு மாதங்களின் முன்னர் 13ஆம் திருத்தத்தை அமுலாக்க அவர் எடுத்த முயற்சி காவிப்படையை வீதிக்குக் கொண்டுவந்ததை யாவரும் அறிவர். ஒன்றுமட்டும் உண்மை. பௌத்த சிங்கள பேரின ஆட்சியின் அடித்தளத்தையே நீக்காமல் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. அந்த அடித்தளத்தினை உடைத்ததெறியும் துணிவு அவருக்கில்லை. எனினும் சில சிறுபான்மை அங்கத்தவர்களை விலைபேசி வாங்கி மந்திரி சபைக்குள் நுழைத்து அவர்களைக்கொண்டு அவ்வினங்களின் ஆதரவைத்திரட்ட முயல்கிறார். அவ்வாறு வாங்கக்கூடிய முஸ்லிம் தலைவர்களுக்கு என்ன பஞ்சம்? அதனாலேதான் வரப்போகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப்பற்றி அவர்கள் மௌனிகளாக இருக்கின்றனர். முஸ்லிம்களே! மாயையை விட்டெழுந்து விழிப்புடன்; செயற்படுங்கள். கம்பன் சொன்னது போன்று “உங்கள் மாயவாழ்வெலாம் இறங்குகின்றது இன்று காண்”.- Vidivelli