ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு நகரின் முகப்பாய் அமைந்துள்ள மட்டக்களப்பு நகர பள்ளிவாசலான ஜாமியுஸ் ஸலாம் ஜும்மாப் பள்ளிக் காணியை அபகரிப்பதற்கான முயற்சிகளில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அதாவது இப்பள்ளிவாசலின் முன்னாலுள்ள வாசல் பகுதியை அகற்ற வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. அருகிலுள்ள வின்சென்ற் தேசிய பாடசாலைக்கு வரும் மாணவர்கள் காலையிலும் பிற்பகல் பாடசாலை விடும் தறுவாயிலும் வீதியில் நெரிசலை எதிர்கொள்கிறார்கள் என்பதே இதற்கு கூறப்படும் காரணமாகும்.
இந்தப் பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள இரு புறங்களும் ஒரு பக்கம் நீதிமன்ற வளாகத்தின் நிலம் மற்றொரு புறம் பரந்து விரிந்த வெபெர் விளையாட்டு மைதானத்தின் நிலம். இவ்விரு பகுதிக்குமுரிய காணிகளில் பயன்பாட்டுக்குப் போக மேலதிக நிலம் வெறுமனே உள்ளது. மேலும் இப்பாடசாலைக்கு நேர் எதிராக உள்ள அடுத்த பக்கத்தில் பரந்து விரிந்த பாதையும் போதியளவு நடை பாதையும் போதியளவு நிலமும் உள்ளது. இவையெல்லாம் இருக்க பள்ளிவாசல் காணியையே அபகரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த விடயம் குறித்து அந்தப் பள்ளிவாசலின் நிருவாக சபை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான இஷற்.ஏ. நஸீர் அஹமட்டைச் சந்தித்துப் பிரஸ்தாபித்தது.
அமைச்சரிடம் அவர்கள் கையளித்த மகஜரில் பின்வரும் விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன.
17ஆம் நூற்றாண்டின் சகாப்தத்தில் நிறுவப்பட்ட மட்டக்களப்பு நகரப் பள்ளிவாசல், அதன் தொடக்கத்தில், 1920 முதல் 1971 வரை இலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவளியினரான சொலுக்கர்களின் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டது, மேலும், அவர்கள் பள்ளிவாசலையும் அதன் அசையும் அசையாச் சொத்துக்களையும் உள்ளூர் மக்களான அறங்காவலர்களிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினர்.
இப்பள்ளிவாசல் 1950 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் இலக்கம் R/ 729/BT / 42 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு 1965 ஆம் ஆண்டு JAMIUS SALAM JUMMA MOSQUE (TOWN MOSQUE) என்ற பெயரில் ஜும்மா பள்ளிவாசலாக அறிவிக்கப்பட்டது.
இந்த மஸ்ஜித் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வக்ஃப் சபையின் வழிகாட்டுதலின்படி அறங்காவலர் குழு அதன் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது.
மட்டக்களப்பு நகரின் மையப் புள்ளியாக விளங்கும் இந்தப் பள்ளிவாசலில் அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பயனடைகின்றனர்.
இந்த பள்ளிவாசலுக்கு தினசரி 2000க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் வருகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின்போது 4500க்கும் அதிகமாக உள்ளது.
தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வருவோரும், தமது வியாபார அலுவல்களுக்குச் செல்வோரும் என இந்தப் பள்ளி ஓய்வெடுக்கும் மக்களுக்கு இது ஒரு நிம்மதியான விடுதியாகவும் விளங்குகிறது.
இவ்வாறிருக்கும் தறுவாயில் பள்ளிவாசலுக்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டத்தை விரிவுபடுத்த கடந்த காலங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்தபோது, எமது வாகன நிறுத்துமிடத்திலிருந்து காணியின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குமாறு அறங்காவலர் சபையிடம் கோரிக்கை விடுத்தனர்.
1965ஆம் ஆண்டு இந்தப் பள்ளிவாசலைக் கட்டும்போது வழிபாடு செய்பவர்களுக்காக தரிப்பிட வசதிக்காக ஒதுக்கப்பட்ட எங்களின் வாகன நிறுத்துமிடத்திலிருந்து ஒரு நிலத்தை முழு ஆதரவுடன் அவர்களுக்கு நன்கொடையாக வழங்கினோம்.
அதன்பிறகு, நாங்கள் எங்கள் முன் பகுதியை வரையறுத்து, எங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கான நடைபாதையை அமைத்தோம்.
இவ்வாறான வேளையில், அருகில் அமைந்துள்ள வின்சென்ற் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பிள்ளைகள், எங்கள் வாகன நிறுத்துமிடத்தின் வழியாக நடைபாதை மேடையாகப் பயன்படுத்த, வழி வகுக்கும்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அவ்வப்போது எங்களுக்குக் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் பலமுறை கலந்துரையாடி, மனிதாபிமான அடிப்படையில் ஏற்கெனவே நாம் ஒரு பகுதிக் காணியை நன்கொடையாக வழங்கியிருப்பதால், நாங்கள் எங்களுக்கு மிகச் சொற்பமாக எஞ்சியுள்ள, எங்களுக்கு காணியில்லாத அவல நிலையை விளக்கியுள்ளோம்.
இந்தப் பின்னணியில், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்திற்கான எங்களின் உரிமையைப் பெறுவதற்காக, எங்கள் நிலைப்பாட்டில் சில நியாயங்களை முன்வைக்க விரும்புகிறோம்.
• 1965 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காலப்பகுதியில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான பகுதியில் உள்ள தொழுகையாளர்களின் பயன்பாட்டிற்காக வாகன நிறுத்துமிடம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
• கூறப்பட்ட சொத்து அறக்கட்டளை வக்ஃப் வாரியச் சட்டத்தின் கீழ் வருகிறது, இது தொடர்பான எந்த நடவடிக்கைகளுக்கும், வக்ஃப் வாரியத்தின் முன் அனுமதி கட்டாயமாகும்.
• வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளின் செயல்பாடுகள் பொது நலன் சாராததாகவும் முற்றிலும் இன அடிப்படையிலானதாகவும் அமைந்துள்ளது.
• அவர்களின் எந்தவொரு அதிகாரபூர்வமான நடவடிக்கைகளும் வகுப்புவாத வன்முறை, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் பிரதேசத்தில் நிலவும் அமைதியான சூழலை குழப்புவதற்கே வழிவகுக்கும்.
• மேற்படி பாடசாலையில் கற்கும் பிள்ளைகள் தங்கள் வளாகத்திற்கு மாற்று அணுகலைக் கொண்டுள்ளனர்.
• கடந்த காலங்களில் அறங்காவலர் குழு, வீதி அபிவிருத்தியின்போது, மனிதாபிமான அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கோரிக்கையை மதிக்கும் ஒரே நோக்கத்துடன் வாகன நிறுத்துமிடத்திலிருந்து போதுமான நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
• வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், துறைத் தலைவருடன் இணைக்கப்பட்ட தலைமைப் பொறியியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் வடிவமைப்பைக் கருத்தில் கொள்ளாமல், தற்போதுள்ள சுற்று வளைவைக் கட்டியுள்ளனர்.
• தற்போதுள்ள வளைவை மறுவடிவமைப்பு செய்வது இந்த பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு எங்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த விடயம் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் நடந்த கலந்துரையாடலின்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனவே, இந்த விடயங்களை உங்கள் மனதின் ஆழத்தில் உள்வாங்கி, இப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை உறுதிப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.