வழமையான மாதங்களை விட உயர்வான ஒரு மாதமாக இதோ ரமழான் எங்களை வந்தடைந்து மிக வேகமாக எங்களை விட்டும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
அல்குர்ஆன் இறங்கப்பட்ட இந்த அற்புத மாதத்தின் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது. ஆனால் ஏனோ நாம் தான் அதன் பெறுமதி உணராது செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் (இம்மாதத்தில் தான்) மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தையும்அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர்அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).
புனிதமிக்க அல்லாஹ்வின் வேதம் இறங்கிய சங்கையான இந்த மாதத்தில் அல்குர்ஆனோடு அதனை ஓதுவது, அதன் கருத்துக்களை புரிந்து கொள்வது, தஃப்ஸீர் விளக்கங்களை கற்றுக் கொள்ள முயற்சிப்பது என எமது பெண் சகோதரிகளின் உறவு எவ்வளவு இறுக்கமாக பேணப்பட்டு வருகிறது என்பதனை அவர்களாகவே பரிசீலித்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் அல்குர்ஆனை கற்றுக் கொள்வது தொடர்பில் இம்மாதத்தில் நபிகளாரும் அதிக பிரயத்தனத்தை எடுத்துள்ளார்கள் என்பதனையே பின்வரும் நபி மொழி எமக்கு சொல்லித்தருகிறது.
ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை (ஓதிக்காட்டிக்) கற்றுக் கொடுப்பார்கள்’ (நூல் : புஹாரி 3220).
புஹாரி மற்றும் முஸ்லிமின் அறிவிப்பில் வருவது போன்று இரவின் மூன்றாம் பகுதியில் யார் பாவமன்னிப்பை தேடுகிறார்கள் என காத்திருக்கும் அந்த ரப்பை பல பொழுதுகளில் வரவேற்க எமது பெண்கள் தவறிவிடுகின்றனர். குடும்பத்தினருக்கான சுடுசோறு,பொரியல் என மும்முரமாய் ஈடுபடுவதால் அவசர அவசரமான இரண்டு ரக்அத்தொழுகையுடன் பெரும்பாலும் இறைவனுடனான சந்திப்பை சுருக்கிக் கொள்கிறார்கள். குறிப்பாக இந்த சங்கைமிகு ரமழானில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புஹாரி 3277, முஸ்லிம் 1079) என்ற இந்த செய்தியை அறிந்த பின்பும் வாயில்கள் திறக்கப்பட்டு, நமது வருகையை எதிர்பார்க்கும் அந்த சுவனத்தை அடைய முயற்சிப்பதில்லையே என நம்மை நாமே ஒரு கணம் விசாரித்துக் கொள்ள வேண்டிய அவசிய தேவைப்பாடு உள்ளது.
பஜ்ரிற்கு பின்னரான பொழுதுகளில் பாரினில் விசிறப்படும் அருள்களை தேடச் சொன்னதை மறந்து தொழுகைஎப்பொழுது முடியும்?
எப்பொழுது தூங்கலாம் ? என்ற அங்கலாய்ப்பில் அருள்களையும் புறக்கணித்து விடுகிறோம். நன்மையின் பதிவுகளுடன் அந்த நேரத்தில் எம்மை நோக்கி வரும் மலக்குமார்களை இஸ்திஃக்பாருடனும் அவ்ராதுகளுடனும் சந்திப்பது பற்றி எதுவித கரிசனையும் இல்லாமல் உறக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். ரமழான் காலங்களில் ஒவ்வொரு செயலுக்கும் மகத்தான கூலி கொடுக்கப்படுமென தெரிந்திருந்தும் நன்மையில் ஆர்வமற்றிருப்பது எமது பொடுபோக்குத் தனத்தினை தானே எடுத்தியம்புகிறது?
லுஹர் தொழுது முடிந்ததிலிருந்தே இப்தாருக்குரிய உணவுகளுக்காக இறைச்சி, கிழங்கு அவிப்பது மாவு பிசைவது என எமது குடும்பத் தலைவிகள் பரபரப்பாக இயங்குவதால் குர்ஆனை அவசரமாக ஓதி முடிப்பதை பல வீடுகளிலும் அவதானிக்கலாம். நோன்பு என்பது நன்மைகளை சேகரிப்பதற்கு முயற்சிக்க வேண்டிய காலமேயன்றி, வித விதமான உணவுகளால், அதுவும் ஆரோக்கியத்திற்கு பாதகமான உணவுகளால் உடலுக்கு தீங்கு செய்வதற்குரிய காலம் அல்ல. முடியுமான வரை இறைவனைப் பற்றி அறிந்து, உணர்ந்து வணக்கங்களில் ஈடுபடுவதன் மூலம் ஆன்மாவை வளப்படுத்த வேண்டிய காலம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?
அஸருக்குப் பின்னரான நேரமும் அதிகாலை நேரத்தைப் போல மலக்குமார்கள் நன்மை, தீமையின் ஏடுகளை சுமந்துகொண்டு எங்களை தேடி வரும் நேரமாகும். அந்த நேரத்தில் எண்ணெய் சட்டிகளுடனும், பொரியல் கரண்டிகளுடனும் அவர்களை எதிர்கொள்வதா? அவ்ராதுகளால் ஏடுகளை கனக்கச் செய்வதா? என இந்த ரமழானிலாவது சிந்திக்கக் கடைமைப்பட்டிருக்கிறோம். வீட்டு வேலைகளோ சமையல் ஏற்பாடுகளோ செய்வதில் எந்த தவறும் கிடையாது, அதற்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்கப் போதுமானவன். எனினும் ரமழான் காலங்களில் அதற்கு வழங்குகின்ற முக்கியத்துவத்தை விட பன்மடங்கு எமது ஆன்மாக்களின் உணவுகளுக்கு வழங்க வேண்டும் என்பதையேசுட்டிக்காட்ட முயற்சிக்கிறோம்.
நீண்ட நேரம் பசித்திருந்துவிட்டு இப்தாரின் போது எண்ணெயால் செய்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால்ஏற்படும் அசதி காரணமாக உறங்குவதற்கு முன்னரே இரவு வணக்கத்தில் ஈடுபடுவது குறித்து சிந்திக்க முடிவதில்லை. பிந்திய இரவுகளிலாவது நின்று வணங்க முயற்சி எடுப்பதுமில்லை. ரமழானில் செய்யும் சுன்னத்தான அமல்களுக்கும்மகத்தான நன்மைகள் கிடைக்குமென தெரிந்திருந்தும், அல்லாஹ்வின் ரஸுல் ரமழானின் இரவுத் தொழுகைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிந்திருந்தும் நாள் முழுதும் சமையலறையில் களைப்படைந்த பெண்கள் இரவுகளை உயிர்ப்பிக்கவும் தவறி விடுகிறோம்.
நிறைய ஓய்வு நேரம் கிடைக்கக் கூடிய ரமழானின் பொழுதுகளில் தனக்குத் தெரிந்த வகை வகையான உணவுகளால் இப்தாரையும் ஸஹரையும் சிறப்பிக்கவென்று வேலைப்பளுவை வலிய இழுத்துப் போட்டுக் கொள்கின்றோம். நன்மையை அறுவடை செய்ய வேண்டிய அற்புத மாதத்தையும் வீணடித்துவிடுகிறோம்.
ரமழானின் முதல் இரவு வந்து விடுமானால் ஷைத்தான்களும், அட்டூழியம் புரியும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் அதில் ஏதும் திறக்கப்படமாட்டாது, சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும் அதில் ஏதும் மூடப்படமாட்டாது. ஓர் அழைப்பாளர் நன்மையை விரும்புபவர்களே அதிகம்நன்மை செய்யுங்கள், பாவங்களை விரும்புபவர்களே பாவங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். ஒவ்வொரு இரவும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.’ என நபிகள் நாயகம் (ஸல்ய) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (நூல் : திர்மிதி 582, இப்னுமாஜா 1642). நன்மைகளை சேமித்து களஞ்சியப்படுத்தவேண்டிய புனித மிகு இம்மாதத்தில் வேறு தேவையற்ற அனைத்து விடயங்களிலும் பொன்னானநேரத்தை வீண் விரயமாக்குகின்றோம்.
ரமழானின் இறுதிப் பத்து நாட்களை அடைந்து விட்டால் நபிகளார் இஃதிகாப் இருந்திருக்கிறார்கள். அவர்களது மரணத்தின் பின்னர் அன்னாரின் மனைவிமார் இஃதிகாப் இருந்திருக்கிறார்கள். ஆனால் எமது ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் கடைத்தெருக்களில் இருப்பதையே காண முடிகிறது. காலையில் சுற்றித் திரிந்த களைப்பில்லைலதுல் கத்ரை தேட வேண்டிய இரவுகளில் ஓய்வையும் உறக்கத்தையும் தேடிக் கொண்டிருக்கிறோம், கடைசிப்பத்து நாட்களிலும் எதிர்பார்க்க வேண்டிய லைலத்துல் கத்ரை 27 ஆம் நாளென்ற ஒரு நாளில் மட்டும் சுருக்கிக் கொண்டு வித விதமான ஆடைகளைத் தேடி வெளிக்கிளம்பி விடுகிறோம். கடைத் தெருக்கள் ஷைத்தான்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்களென்பதை உணர்ந்து கொண்டே ஆடை வாங்குவதை இறுதி வரை பிற்போடுகிறோம். புதுபெஷன் ஆடை வேண்டுமென்பதற்காக நன்மைகளை அடகு வைக்கவும் துணிந்து விடுவதை எண்ணி எப்போதுகைசேதப்படப் போகிறோம்? ரமழானுக்கு முன்னரே அந்த ஆடைகளை வாங்கி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் கடைசிப் பத்து நாட்களை நன்மை தேடுவதில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நோன்பு காலங்களில் உணவு விடயத்திலும் சரி, உடை வாங்கும் விடயத்திலும் சரி ஏனைய அனைத்து விவகாரங்களிலும் வீட்டுப் பெண்களுக்கு ஒத்தாசை புரிவதன் மூலம் அவர்கள் நன்மைகளை தேடுவதில் ஆண்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனெனில் ஆண்கள் தான் பெண்களுக்கான பொறுப்பாளர்கள். அது பற்றிய விசாரணைகள் அவர்களுக்குரியதே. எனவே ஆண்களும் தமது பெண்கள் விடயத்தில் கரிசனையெடுத்து தாமும் அதற்கு சிறந்த முன்மாதிரிகளாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புஹாரி 1896)
ரமழான் காலங்கள் நன்மையைத் தேட வேண்டிய காலங்கள். அதை வீணடிக்காமல் தக்வாவை ஏற்படுத்தி, ஆன்மாவைப் போஷித்து ரய்யான் எனும் சுவன வாயிலால் நாமும் நமது குடும்பமும் சுவனத்தில் நுழையும் பேற்றைப்பெற முயற்சிப்போமாக!- Vidivelli