தமிழ் – முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவோம்

0 520

யாழ் அஸீம்

தலை­முறை தலை­மு­றை­யாக வடக்கு மண்ணில் வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் மக்­க­ளி­டையே வலு­வான பிணைப்­புக்­களும், உற­வு­களும் தொடர்ந்து வந்­தி­ருக்­கின்­றன. மத ரீதி­யாக மட்டும் இவர்கள் வேறு­பட்­டாலும் வேற்­று­மைக்குள் ஒற்­று­மையை காட்டும் பல அம்­சங்கள் இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் காணப்­ப­டு­கின்­றன. திரு­ம­ணங்­களில் தாலி கட்­டுதல், மாலை­யி­டுதல், திரு­மணப் பந்­தி­முறை, சீதனம் போன்­றன யாழ் முஸ்லிம் மக்­க­ளிடம் காணப்­பட்ட, தமிழ் மக்­க­ளின் கலாச்­சாரப் பண்­பு­க­ளாகும்.

இத்­த­கைய நெருக்­க­மான உற­வு­களின் கார­ண­மா­கவே, தாயக மண்­ணி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட வேளை­யிலும், தமிழ் மக்கள் மீது எவ்­வித கசப்­பு­ணர்­வையும், பகை­மை­யையும் முஸ்­லிம்கள் கொண்­டி­ருக்­க­வில்லை. மாறாக, தாம் வாழ்ந்த பிர­தே­சங்­களில் தமிழ் மக்­க­ளுடன் நல்­லு­றவை பேணி நடந்­தனர். பாரம்­ப­ரிய மண்­ணிலே தோழ­மை­யுடன் வாழ்ந்த நண்­பர்கள் நீண்ட நாட்­களின் பின் சந்­திக்க நேரும் பொழு­தெல்லாம் கட்­டி­ய­ணைத்துக் கண்ணீர் சிந்தி தம் இனிய நட்பை மீட்­டிக்­கொள்வர்.

வாழ்­வி­ழந்த இம்­மக்கள் மீள்­கு­டி­யேற்­றங்கள் செய்­யப்­ப­டு­வ­தற்கும் இம்­மக்­களின் இருப்­புக்கள் புன­ர­மைப்புச் செய்­யப்­ப­டு­வ­தற்கும் ஆவன செய்தல் போல் நீண்ட இடை­வெ­ளியின் பின் இணைந்­தி­ருக்கும் தமிழ் – முஸ்லிம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வையும் சமா­தா­னத்­தையும் வலுப்­ப­டுத்தி ஐக்­கி­யத்­து­டனும் நிம்­ம­தி­யு­டனும் வாழ்­வ­தற்கு வழி­வ­குத்தல் சக­ல­ரதும் கட­மை­யாகும். மீண்டும் துளிர்க்கும் தமிழ்-­முஸ்லிம் உற­வுக்கு உர­மிட்டு வளர்ப்­பது சமா­தா­னத்தை விரும்பும் யாவ­ரதும் எதிர்­பார்ப்­பாகும்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் அண்­மையில் சில தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் பேச்­சுக்­களும் அறிக்­கை­களும் தமிழ் – முஸ்லிம் உறவில் விரி­ச­லையும் கசப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக அமைந்­தி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

தமிழ் – முஸ்லிம் உறவில் விரி­சலை
ஏற்­ப­டுத்­து­வது யார்?
அண்­மையில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கிளி­நொச்சி மாவட்­டத்தில் உள்ள பச்­சிலைப் பள்ளி பிர­தேச செய­லக பிரிவில் அமைந்­துள்ள 100 ஏக்கர் காணி­யை 400 முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்க போவ­தாக அறி­வித்­தி­ருந்தார். இச்­சந்­தர்ப்­பத்தில் தமிழர் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளுமன்ற உறுப்­பினர் சிறீ­தரன் அறிக்­கை­யொன்றை வீடியோ பதி­வாக வெளி­யிட்­டுள்ளார். அவ­ரது அறிக்­கையில் அவர் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது,

“கிளி­நொச்சி மாவட்­டத்தில் உள்ள பச்­சி­லைப்­பள்ளி செய­லகப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள 100 ஏக்கர் காணி­களில் முஸ்­லிம்­களை குடி­யேற்­று­வ­தற்­கான திட்­ட­மொன்றை ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்­ப­டுத்தப் போவ­தாக அறி­கிறேன்.

தமிழ் – முஸ்லிம் மக்­க­ளி­டையே பிரச்­சி­னையை உரு­வாக்­கு­வதை நோக்­க­மாகக் கொண்டே ரணில் விக்­கி­ர­ம­சிங்க இத்­திட்­டத்தை கொண்டு வந்­துள்ளார்.
நான் முஸ்லிம் சமூ­கத்­திடம் பகி­ரங்­க­மாக ஒரு வேண்­டு­கோளை விடுக்­கிறேன். தமிழ் – முஸ்லிம் மக்­க­ளி­டையே இன்னும் சுமு­க­மான உறவு நிலை ஏற்­ப­டாத சூழல் காணப்­ப­டு­கி­றது. இரு சாரா­ரி­டமும் காயங்கள் வேரூன்றிப் போயுள்­ளன.

முஸ்­லிம்கள் தம்மை விடு­த­லைப்­பு­லிகள் அனுப்­பி­னார்கள் என்று ஒரு செய்­தியை சொல்­லிக்­கொண்­டாலும் அதே நேரம் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மக்கள் யாரும் கொல்­லப்­ப­ட­வில்லை என முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 2004ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் கோஷம் எழுப்­பிய நாட்­களும் உண்டு. அதேபோல் ஹிஸ்­புல்லா, தமிழ் மக்­க­ளு­டைய காணி­களை பறித்தேன். ஆயு­தக்­கு­ழுக்­களை உரு­வாக்­கினேன் என்று கூறிய விட­யங்­களும் உண்டு. அதே­நேரம் கல்­முனை பிர­தேச செய­ல­கத்தை தரம் உயர்த்­து­வதில் முஸ்லிம் காங்­கி­ரஸும் சில முஸ்லிம் சகோ­த­ரர்­களும் தடை­யாக இருக்­கின்­றார்கள். ஏப்ரல் 21 மனித வெடி­குண்டு தாக்­கு­தலால் தேவா­ல­யங்­களில் கொல்­லப்­பட்­ட­வர்கள் தமி­ழர்­கள்தான். குண்டு வெடித்­த­வர்கள் முஸ்லிம்க­ளாக இருந்­தாலும் கொல்­லப்­பட்­ட­வர்கள் தமி­ழர்­கள்தான். அந்த ஆறாத காயங்கள் இன்னும் உண்டு. எனவே முஸ்­லிம்­க­ளிடம் பகி­ரங்­க­மாக வேண்­டிக்­கொள்­கின்றேன். தமி­ழர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் பிரிக்க முயல்­கின்ற இத்­திட்­டத்­திற்கு துணை போக­வேண்டாம்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்டு 33 வரு­டங்­க­ளா­கியும் இன்னும் முழு­மை­யான மீள்­கு­டி­யேற்றம் நடை­பெ­றாமல் துய­ரப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் இவ்­வே­ளையில் 400 குடும்­பங்­க­ளுக்­கா­வது மீள்­கு­டி­யேற்றம் கிடைக்­கின்ற சந்­தர்ப்­பத்­தையும் தடுக்க முயல்­கி­றாரா? என்­றுதான் இங்கு சிந்­திக்­க­வேண்­டியும் உள்­ளது. ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ்- முஸ்­லிம்­க­ளி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்தும் நோக்­க­மா­கக்­கொண்டே இத்­திட்­டத்தை கொண்டு வரு­கின்றார் என கூறும் அவர் இச்­சந்­தர்ப்­பத்தில் தமிழ் -முஸ்­லிம்­க­ளி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்­தாத வகையில் வட­மா­காண முஸ்லிம் அக­தி­களின், வட­மா­காண முஸ்லிம் அக­தி­களின் அவ­ல­நி­லையை தமிழ் மக்­க­ளுக்கு விளக்கும் வகை­யாக, தமிழ் – முஸ்லிம் விரிசல் ஏற்­ப­டா­த­வாறு அறிக்கை விடு­வ­துதான் தமிழ் -முஸ்லிம் உறவை விரும்பும் ஒரு­வ­ரு­டைய செயற்­பா­டாக இருக்கும். ஆனால், அவ­ரது அறிக்­கையின் படி தமிழ் – முஸ்­லிம்­க­ளி­டையே இன்றும் சுமு­க­மான உற­வு­நிலை இல்லை. ஆறாத காயங்கள் வேரூன்றிப் போயுள்­ளன என்று கூறு­வ­துடன் முஸ்­லிம்கள் மீது தமிழ் மக்­களின் பகை­மையை அதி­க­ரிக்கும் வண்ணம் கிழக்கு மாகாண அர­சியல் பற்றி விமர்­சிப்­பது தமிழ் முஸ்­லிம்­க­ளி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்­துமா? புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­துமா? என்­பதை சிறீ­தரன் எம்.பி புரிந்­து­கொள்­ள­வேண்டும். அத்­துடன் ஏப்ரல்-21 தாக்­கு­தலில் குண்டு வெடித்­த­வர்கள் முஸ்­லிம்­க­ளாக இருந்­தாலும் கொல்­லப்­பட்­ட­வர்கள் தமி­ழர்­கள்தான் எனக் கூறு­வதன் மூலம் விரி­சலை ஏற்­ப­டுத்த முனை­கி­றாரா? சஹ்­ரானை பயன்­ப­டுத்தி குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடாத்­திய சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பது இப்­போது பகி­ரங்­க­மா­கி­யுள்ள வேளை­யிலும் அத­னையும் முஸ்­லிம்கள் தலையில் இட்டு தமிழ் முஸ்லிம் விரி­சலை ஏற்­ப­டுத்­திட பச்­சி­லைப்­பள்­ளியில் 400 முஸ்லிம் குடும்­பங்­களின் குடி­யேற்­றத்தை தடுக்க முயல்­கி­றாரா என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

பாரா­ளுமன்ற உறுப்­பினர் சிறீதர் இவ்­வா­றான தமிழ் முஸ்லிம் விரி­சலை தோற்­று­விக்கும் கருத்­துக்­களை தவிர்த்து முஸ்­லிம்­க­ளுக்கு காணிகள் வழங்­கு­வது போல் தமிழ் மக்­க­ளுக்கும் காணிகள் வழங்கும் படி கோரு­வ­துதான் நியாயம். அதனை விடுத்து இவ்­வா­றான கருத்­துக்­களை தமிழ் மக்­க­ளுக்கு கூறு­வதன் மூலம் முஸ்­லிம்கள் பற்றி தவ­றான அபிப்­பி­ரா­யத்தை உரு­வாக்­கு­வ­துடன் மூன்று தசாப்த கால அகதி வாழ்வை அனு­ப­விக்கும் வட­புல முஸ்­லிம்­க­ளுக்கு கிடைக்­க­வி­ருக்கும் காணி­களை கிடைக்­காமல் தடுப்­பதே அவ­ரது அறிக்­கையின் உள்­நோக்கம் ஆகும்.

கிளி­நொச்சி முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு வீடு வழங்க ஜனா­தி­பதி எடுத்­துச்­செல்லும் நட­வ­டிக்­கை­களை விமர்­சிக்கும் வகையில் கருத்தை வெளி­யிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறீ­த­ரனின் அறிக்கை பற்றி பல­வந்த­மாக வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அதன் செய­லாளர் நைசர் வெளி­யிட்ட கருத்­துக்­களும் கவ­னிக்­கத்­தக்­க­வை­யாகும். இந்­நி­கழ்வில் அவர் கூறி­யது
“தமிழ் மக்கள் தமது உரி­மைக்­காக போராடி வரு­கின்­றார்கள். அவர்­களின் போராட்­டங்­களை நாம் ஒரு­போதும் கொச்­சைப்­ப­டுத்­தி­யது கிடை­யாது. அதனை அவர்­களின் உரிமை சார்ந்த விட­ய­மா­கவே பார்க்­கின்றோம். இரண்டு வரு­டங்கள் முகாம்­களில் வாழ்ந்த அவர்­க­ளுக்கு துரித கதியில் மீள்­கு­டி­யேற்­றமும் அவர்­க­ளுக்கு தேவை­யான அத்­தனை அபி­வி­ருத்திப் பணி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால், 32 வரு­டங்கள் தமது தாயக மண்ணில் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட வட­புல முஸ்­லிம்கள் விட­யத்தில் யாரும் அக்­கறை கொள்­ள­வில்லை. அவர்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் எந்த அர­சாங்­கமும் கவனம் செலுத்­த­வில்லை. இந்த அர­சாங்­கத்தில் இப்­ப­டி­யா­ன­தொரு மீள்­கு­டி­யேற்றம் நடை­பெ­றக்­கூ­டிய சாத்­தியம் இருக்கும் வேளையில் இதனை தடுக்க முயல்­வது வேத­னை­ய­ளிக்­கி­றது.

யாழ் – கிளி­நொச்சி சம்­மே­ள­னத்தின் செய­லாளர் அனீஸ் இது­பற்றி கருத்து தெரி­விக்­கையில் “1990ஆம் ஆண்டு வட­புல முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­ட­போது வடக்கு முஸ்லிம் மக்கள் ஒரு இலட்­ச­மாக இருந்­த­வர்கள் இன்று 32 வரு­டங்­களின் பின் மூன்று இலட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளனர். யாழ் மாவட்­டத்தில் 2600 குடும்­பங்கள் மீள்­கு­டி­யே­று­வ­தற்கு விண்­ணப்­பித்த போதிலும் 250 குடும்­பங்­களே தெரிவு செய்­யப்­பட்­டன. இந்­திய வீட­மைப்­புத்­திட்­டத்தில் 317 பேர் விண்­ணப்­பித்­தாலும் 51 குடும்­பங்­களே தெரிவு செய்­யப்­பட்­டனர். இத்­தனை வரு­டங்­க­ளாக மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­ப­டாது அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் இம்­மக்­க­ளுக்கு பச்­சி­லைப்­பள்­ளியில் 400 குடும்­பங்­க­ளுக்கு மட்டும் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­போ­வ­தாக ஜனா­தி­பதி அறி­வித்­த­தற்கு இம் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை தடுக்கும் வகையில் முஸ்லிம் – தமிழ் விரி­சலை உரு­வாக்க கூடிய வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறீ­தரன் பேசி­யி­ருப்­பது நியா­ய­மற்­றதும் வேத­னை­ய­ளிக்க கூடி­யதும் என குறிப்­பிட்­டுள்ளார்.

மேற்­கூ­றப்­பட்ட அறிக்­கை­களும் செயற்­பா­டு­களும் சீர­டைந்து வரும் தமிழ் – முஸ்லிம் உறவை சிதைக்­குமே தவிர சீர்­ப­டுத்த உத­வாது என்­பதை தமிழ் -முஸ்லிம் மக்­களும் அர­சி­யல்­வா­தி­களும் சிந்­தித்து செயற்­ப­ட­ வேண்டும்.

உண்மை வர­லாற்றை உரைப்போம்
அண்­மையில் டான் தமிழ் ஒளி தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பான “ஸ்பொட் லைட்” நிகழ்ச்­சியில் கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்­த­போது வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் கே. சம்­பந்தன் “நல்லூர் கந்­த­சு­வாமி ஆலயம் அமைந்­துள்ள இடத்தில் இஸ்­லா­மிய பாபா ஒரு­வரின் சமாதி இருக்­கின்­றது. இதனால் அங்கு விளக்கு எரிக்­கப்­ப­டு­கின்­றது” என தெரி­வித்­தி­ருந்தார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மூத்த தலை­வரும் வடக்கு மாகாண சபையின் அவைத்­த­லை­வ­ரு­மான சீ.வீ.கே சிவ­ஞானம், “நல்லூர் கந்­த­சு­வாமி ஆலயம் அமைந்­துள்ள இடத்தில் இஸ்­லா­மிய பாபா ஒரு­வரின் சமாதி இருக்­கின்­றது என்று கூறப்­படும் கருத்து முழு­மை­யாக தவ­றா­னது” என்று தெரி­வித்­தி­ருந்தார். இச்­செய்தி கடந்த 17.03.2023 ஈழ­நாடு பத்­தி­ரி­கையில் வெளி­யா­கி­யி­ருந்­தது.

அவர் மேலும் குறிப்­பி­டும்­போது “நல்லூர் ஆல­யத்தின் உள்ளே பாபாவின் சமாதி இருப்­ப­தாக கூறப்­ப­டு­வது தவ­றான கருத்­தாகும். நல்­லூரின் அருகே மேற்­குப்­ப­கு­தியில் முன்­னைய காலத்தில் ஒரு சில குடும்­பங்கள் இருந்­தன. பின்னர் அவர்கள் இடம்­பெ­யர்ந்து சோனக தெருவில் குடி­யே­றினர்.

நல்­லூரின் மேற்­குத்தி­சையில் இஸ்­லா­மி­யர்கள் வழி­பாட்டில் ஈடு­பட்­டனர். ஆனால், அங்கு பாபாவின் சமாதி உள்­ளது. அதற்­கா­கவே விளக்கு எரிக்­கப்­ப­டு­கின்­றது என்று கூறு­வது முற்­றிலும் தவ­றா­னது.

முன்னர் முஸ்லிம் குடும்பம் ஒன்று கற்­பூரம் விற்கும் உரி­மையை கொண்­டி­ருந்­தது. அதற்கு ஆலயம் அனு­மதி வழங்கி இருந்­தது. இப்­போது அந்த குடும்பம் இல்லை. 1950களில் நல்­லூரின் மேற்­குப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் தொழு­கையை நடாத்­தினர். இதனை நான் நேரில் கண்­டி­ருக்­கின்றேன். மற்­றும்­படி அங்கு சமாதி இருக்­கின்­றது. விளக்கு எரிக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தல்லாம் தவ­றா­னவை என குறிப்­பிட்­டுள்ளார்.

எந்­த­வொரு சமூகம் தன் வர­லாற்றைப் பற்றி அறி­ய­வில்­லையோ அந்த சமூகம் திட்­ட­மி­டப்­ப­டாத எதிர்­கா­லத்தை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது எனலாம். கடந்த கால அனு­ப­வங்­களில் இருந்தும் வர­லாற்­றி­லி­ருந்தும் நிகழ்­கா­லத்­தையும் நிகழ்­கா­லத்தில் இருந்து எதிர்­கா­லத்­தையும் திட்­ட­மி­டப்­ப­டு­வ­தற்கு வர­லாற்றில் இருந்து கற்­றுக்­கொண்ட பாடங்­களே உத­வு­கின்­றன.

“மக்கள் தமது வர­லாற்றை முதுகில் சுமந்த வண்­ணமே முன்­னோக்கிச் செல்­கின்­றனர். “The people more forword with their history on their back” என்றார் புரட்­சிக்­க­விஞர் அல்­லாமா இக்பால்.

எனவே எமது நிகழ்­காலம் பய­ணத்தில் ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளையும் தவ­று­க­ளையும் நுணுக்­க­மாக ஆராய்ந்து அவற்றை திருத்­தி­ய­வர்­க­ளாக பய­ணிக்­க­வேண்டும். அந்த வகையில் வட­மா­காண சபையின் அவைத்­த­லைவர் சீ.வீ.கே. சிவ­ஞானமின் கூற்­றி­லுள்ள தவ­றினை சுட்­டிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். “நல்லூர் கந்­த­சு­வாமி ஆலயம் அமைந்­துள்ள இடத்தில் இஸ்­லா­மிய பாபா ஒரு­வரின் சமாதி இருக்­கின்­றது. இதன் கார­ண­மா­கவே விளக்கு எரிக்­கப்­ப­டு­கின்­றது என்­பது தவ­றா­னது” என்ற அவ­ரது கூற்­றின்­படி நல்லூர் கந்­த­சு­வாமி ஆலயம் அமைந்­துள்ள இடத்தில் பாபா ஒரு­வரின் சமாதி இல்லை என வலி­றுத்­து­கின்­றது.

சீ.வீ.கே சிவ­ஞானம் யாழ்ப்­பாண முஸ்­லிம்­க­ளுடன் நெருக்­க­மான உறவு கொண்­டவர். இவ்­வா­றான தவ­றான கருத்­துக்­க­ளாக நாம் சுட்­டிக்­காட்­டு­வதன் மூலம் எமது உறவு மேலும் வலுப்­பெற வேண்டும் என்ற நம்­பிக்­கையில் பணி­வுடன் பின்­வரும் வர­லாற்று ஆதா­ரங்­களை சுட்­டிக்­காட்ட விளை­கிறேன்.

பிர­பல எழுத்­தா­ளரும் நாவ­லா­சி­ரி­ய­ரு­மான செங்கை ஆழியான் என்ற புனைப்­பெயர் கொண்ட கந்­தையா குண­ராசாவுடைய “நல்லூர் கந்­த­சு­வாமி வர­லாறு” என்ற வர­லாற்று ஆய்வு நூலில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“கி.பி 1591இல் 3ஆவது தட­வை­யாக போர்த்­துக்­கேயர் யாழ்ப்­பா­ணத்­திற்கு படை­யெ­டுத்­த­போது தமிழர் படையும் பறங்­கியர் படையும் தற்­போ­தையை ஆலயம் அமைந்­துள்ள குருக்கள் வளவில் ஒன்­றை­யொன்று எதிர்­கொண்­டன. அப்­போ­தைய கால­கட்­டத்தில் முஸ்­லிம்கள் குருக்கள் வளவில் குடி­யேறி நின்­றனர். பறங்­கிய படைக்கும் தமி­ழர்க்கும் நிகழ்ந்த சண்­டையில் சிக்­கந்தர் என பெயர் கொண்ட சைவர்­க­ளாலும் முஸ்­லிம்­க­ளாலும் மதிக்­கப்­பெற்ற அச்­சர்வ மத யோகியும் உயி­ரி­ழக்க நேர்ந்­தது. யோகி­யா­ருக்­கான சமாதி ஒன்றும் முஸ்­லிம்­களால் குருக்கள் வளவில் கட்­டப்­பட்­டது. அக்­கா­ல­கட்­டத்தில் இன்­றைய நல்லூர் கந்­த­சு­வாமி கோயில் அமைந்­துள்ள குருக்கள் வளவில் முஸ்­லிம்கள் குடி­யேறி இருந்­தனர் என அறி­யப்­ப­டு­கி­னது. (நல்லூர் கந்­த­சு­வாமி கோயில் – க.குண­ராசா பக்:20)
மேற்­படி செங்கை ஆழி­யானின் நூலில் நல்லூர் ஆலயம் அமைந்­துள்ள குருக்கள் வளவில் உயி­ரி­ழந்த யோகி­யா­ருக்­கான சமாதி ஒன்று முஸ்­லிம்­களால் கட்­டப்­பட்­டது என்­பது தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் இந்த நூலில் பக்கம் 31,32இல் இடம்­பெற்­றுள்ள பந்­தியில் “ஆகவே குருக்கள் வள­வி­லி­ருந்து வாழ்ந்த முஸ்­லிம்கள் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றப்­பட்ட பின்­னரே அவ்­வி­டத்தில் கந்­த­சு­வாமி கோயிலை நிறுவ முடிந்­துள்­ளது. பின்னர் அவ்­வி­டத்தை பெருப்­பித்து கட்­டும்­போது, அங்­கி­ருந்து இறந்து அடக்கம் செய்­யப்­பட்ட ஒரு முஸ்லிம் பெரி­யா­ரு­டைய சமாதி அக்­கோ­யிலின் உள்­வீ­திக்குள் அகப்­பட்­ட­ப­டியால், அதை­யிட்டு முஸ்­லிம்கள் கலகம் செய்­தனர். பின்பு கோயில் மேற்கு வீதியில் வாயில் வைத்து சமா­தியை அணுகி அவர்கள் வணங்­கி­வர இடம் கொடுத்­த­ததால் கலகம் ஒரு­வாறு தணிந்­தது. அதற்கு சாட்­சி­யாக அவ்­வாயிற் கதவு இன்னும் இருப்­பதும் அத­ன­ருகே வெளிப்­புறம் பந்­தர்க்குள் சில­கா­லத்தின் முன்­வரை தொழுகை நடத்தி வந்­ததும் இதனை வலி­யு­றுத்தும். (இரா­ச­நா­யகம் – செ-1933)
நல்லூர் கந்­த­சு­வாமி கோயில் க.குண­ராசா (பக்-32)

மேற்­படி வர­லாற்­றுக் ­கு­றிப்­புக்­களின் படி நல்லூர் கந்­த­சு­வாமி கோயில் அமைந்­துள்ள இடத்தில் ஒரு முஸ்லிம் பெரி­யா­ரு­டைய சமாதி இருந்­தது என்­பதும் அதன் வாயிற் கதவு இன்றும் இருப்­ப­துவும் நிரூ­ப­ண­மா­கின்­றது. தமிழ்-­முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்­பட்டு விடக்­கூ­டாது என்ற வகையில் மிக அவ­தா­ன­மாக நாம் செயற்­பட வேண்டும் என்­பது முக்­கியம். எனினும் வர­லாற்றில் ஒரு தவ­றான கூற்று முன்­வைக்­கப்­ப­டும்­போது அத­னைத்­ தொ­ட­ராமல் ஆதா­ரத்­துடன் எடுத்­துக்­காட்ட வேண்­டி­யது நம் ஒவ்­வொ­ரு­டைய சமூ­கப்­பொ­றுப்­பாகும்.

தமிழ் -முஸ்லிம் மக்­க­ளி­டையே யாழ்ப்­பா­ணத்தில் நில­விய நீண்ட கால நட்­பு­றவு என்றும் தொட­ர­ வேண்டும் என்­பதே யாவ­ரி­னதும் எதிர்­பார்ப்பும் விருப்­ப­மு­மாகும்.
யாழ் முஸ்­லிம்கள் தமிழ் மக்­களின் இன்­பத்­திலும் துய­ரத்­திலும் அவர்­க­ளது உரி­மைப்­போ­ராட்­டத்­திலும் கூட இணைந்­தி­ருந்­தனர். 1961 இல் யாழ்ப்­பா­ணத்தில் தமிழ் மக்­களின் சத்­தி­யாக்­கி­ரகம் நடை­பெற்­ற­போது முஸ்­லிம்­களின் நோன்பு கால­மாக இருந்­தது. எனினும் முஸ்­லிம்­களும் நோன்­புடன் பேரார்­வத்­துடன் சத்­தி­யாக்­கி­ர­கத்தில் இணைந்­து­கொண்­டனர். இந்­நி­கழ்­வா­னது அச்­சந்­தர்ப்­பத்தில் செல்­வ­நா­யகம் போன்ற தலை­வர்­களால் கௌர­விக்­கப்­பட்­டது.

மேலும் யாழ் நக­ரினுள் போர்த்­துக்­கேயர் நுழைந்­த­வே­ளையில் தமிழ் மன்­னர்கள் அவர்­களை எதிர்த்து போரா­டினர். அவ்­வே­ளையில் போர்த்­துக்­கே­ய­ருக்கு எதி­ரான தமிழ் மக்­களின் போராட்­டத்தில் முஸ்­லிம்­களும் இணைந்­து­கொண்­டனர். இதனை பேரா­சி­ரியர் எஸ். நித்­தி­யா­னந்தனும் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் யாழ் மாந­கர சபையில் இரு முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் மிகக்­கூ­டு­த­லான தமிழ் உறுப்­பி­னர்­களும் இருந்தும் கூட பேத­மற்ற தமிழ் முஸ்லிம் உறவின் கார­ண­மா­கவும் தமிழ் மக்­களின் நன்­ம­திப்பை பெற்­றதன் கார­ண­மா­கவும் 1955ஆண்டு யாழ்­ந­கரின் முத­லா­வது முஸ்லிம் மேய­ராக எம். சுல்தான் போட்­டி­யின்றி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். தமிழ் மீது மிகப்­பற்­றுள்­ள­வ­ரா­கவும் தமிழை அர­ச­க­ரும மொழி­யாக்­க­வேண்டும் என்ற கொள்­கை­யிலும் மிக உறு­தி­யாக இருந்த எம். எம் சுல்தான் 1955இல் மொழிப்­பி­ரச்­சினை பற்றி ஆராய்­வ­தற்­காக கூட்­டப்­பட்ட முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்­து­கொண்டு “தமிழே முஸ்­லிம்­களின் தாய்­மொழி என்றும் தமிழ் சிங்­கள மொழி­யுடன் சம அந்­தஸ்த்து பெற­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார். இதற்கு பெரும்­பான்­மை­யி­னரின் ஆத­ரவு கிடைக்­கா­ததன் கார­ண­மாக சிங்­கள மொழியே அர­ச­க­ரும மொழி­யாக இருக்­க­வேண்டும் என்ற தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. எனவே மேயர் சுல்தான் இந்த தீர்­மா­னத்தில் கையெ­ழுத்­தி­டாமல் தமி­ழுக்­காக உரி­மைக்­குரல் எழுப்பி அம்­ம­கா­நாட்டை விட்டு வெளி­யே­றினார். இச்­செய்­தி­யா­னது சகல பத்­தி­ரி­கை­க­ளிலும் முன்­பக்க செய்­தி­யாக பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. அத்­துடன் வெளி­ந­டப்பு செய்து யாழ்ப்­பாணம் திரும்­பிய சுல்தான் அவர்­க­ளுக்கு யாழ் புகை­யி­ரத நிலை­யத்தில் தமிழ் மக்­க­ளாலும் மாந­க­ர­சபை உறுப்­பி­னார்­க­ளாலும் மகத்­தான வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது.

இதே­போன்று தமிழ் மக்­களும் தமிழ் அர­சியல் தலை­வர்­களும் கூட முஸ்­லிம்­க­ளுடன் நல்­லு­ற­வையும் பேணி வந்­துள்­ளனர். தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளான தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். புத்தளம் பள்ளிவாசலினுள் நுழைந்த பொலிஸார் முஸ்லிம்களை சுட்டபோது தந்தை செல்வநாயகம் பாராளுமன்றத்தில் துணிச்சலாக கண்டித்து குரல் கொடுத்தார்.

மேலும் மறைந்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு. சிவசிதம்பரம் வட மாகாணத்திலிருந்து விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் “வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக மண்ணுக்கு திரும்பும் வரை என் பாதமும் யாழ் மண்ணை மதிக்காது” என கூறினார். அவ்வாறே அவர் உயிர் வாழும் வரை யாழ்ப்பாணம் செல்லவில்லை. அவர் இறந்த பின்னரே அவரது பூதவுடல் யாழ் மண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இவ்வாறாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு இறுக்கமானது. புனிதமானது. இடையில் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட இடைவெளியை மறந்து தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மீண்டும் நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

எனவே, இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் குறு­கிய நோக்­கங்­க­ளுக்­காக, தமிழ் முஸ்லிம் உற­வு­களைச் சிதைக்கும் கருத்­துக்­களை வெளி­யி­டு­வதைத் தவிர்த்து அம்­மக்­க­ளி­டையே காணப்­படும் தவ­றான அபிப்­பி­ரா­யங்­களை நீக்கி, புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது தலை­வர்­க­ளி­னதும் புத்திஜீவிகளினதும் கடமையாகும்.-VIdivelli

Leave A Reply

Your email address will not be published.