(எம்.எப்.அய்னா)
பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ரி. அபூபக்கருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை மீளப் பெற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி குறித்த வழக்கின் குற்றப் பத்திரிகையை மீளப் பெற சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.
நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரி மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக கூறப்படும் புலஸ்தினி ராஜேந்ரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாரா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ரி. அபூபக்கருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் முன்னிலையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கில் கடந்த மார்ச் 20ஆம் திகதி அபூபக்கருக்கு மேல் நீதிமன்றம் பிணையளித்திருந்தது.
ஒரே ஒரு தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கை மற்றும் 18 சாட்சியாளர்களின் பட்டியலுடன் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குரிய குற்றத்தை புரிந்துள்ளதாக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019 செப்டெம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜெஸ்மினின் நடமாட்ட இடங்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல்களை மறைத்ததாகவும் அவரைக் கைது செய்ய அல்லது கைது செய்யும் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தல் அல்லது தலையீடு செய்தல் ஊடாக குற்றம் புரிந்துள்ளதாக கூறி சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பொலிஸ் அதிகாரியான அபூபக்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
எனினும் சாரா ஜெஸ்மின் கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் நடந்த வெடிப்புச் சம்பவத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸ் திணைக்களம் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் 3 ஆவது அறிக்கையை முன்னிலைப்படுத்தி அறிவித்துள்ளது. இந்த பின்னணியிலேயே குற்றப் பத்திரிகையை மீளப் பெற சட்டமா அதிபர் திட்டமிட்டுள்ளார்.- Vidivelli