ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல்கள் விசாரணைகள் சி.ஐ.டி. சிறப்புக் குழுவிடம்

முறையான விசாரணை இன்றேல் முதலீட்டாளர் வெளியேறும் அபாயம்; வெளிவிவகார அமைச்சர், முதலீட்டு அமைச்சர் மன்னிப்பு கோரினர்

0 285

(எம்.எப்.அய்னா)
நீர்கொழும்பு -படல்­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹல்பே பகு­தியில் ஓமான் முத­லீட்­டாளர் ஹல்பான் அல் உபைதி மீது இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரின் அர­சியல் அதி­கார பின்­னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும் அவ­ரது ஆடை தொழிற்­சாலை மீதான தொடர்ச்­சி­யான  அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சிறப்புக் குழு­வொன்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் உத்­த­ரவில், பொலிஸ்மா அதிபர் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை சி.ஐ.டி.யிடம் கைய­ளித்­துள்ள நிலை­யி­லேயே சி.ஐ.டி.யினர் இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

கடந்த மார்ச் 30 ஆம் திகதி இரவு 11.30 மணி­ய­ளவில், ஹல்பே பகு­தியில் அமைந்­துள்ள, குறித்த முத­லீட்­டா­ள­ருக்கு சொந்­த­மான ஆடைத் தொழிற்­சா­லைக்குள் அத்து மீறி கோடீஸ்­வர வர்த்­த­க­ரான அந்த ஓமான் முத­லீட்­டாளர் மீதும், அவ­ரது பாது­காப்பு அதி­காரி மீதும் இவ்­வாறு தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளது.

தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த ஓமான் முத­லீட்­டாளர் ஹல்பான் அல் உபைதி ஸ்ரீ ஜய­வர்­தனபுர வைத்­தி­ய­சா­லை­யிலும், பாது­காப்பு அதிகாரி நீர்கொழும்பு வைத்­தி­ய­சா­லை­யிலும் சிகிச்சைபெற்று வெளி­யே­றி­ய­துடன், தற்­போது முத­லீட்­டாளர் பாது­காப்­பான இட­மொன்றில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்ளார்.

சம்­பவம் குறித்து ஆரம்ப விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த படல்­கம பொலி­ஸாரும் நீர்கொழும்பு வலய குற்றத் தடுப்புப் பிரி­வி­னரும் 4 சந்­தேக நபர்­களைக் கைது செய்­தி­ருந்­தனர்.

தாக்­குதல் நடாத்­திய இந்த குழு, ஆடைத் தொழிற்­சாலை உரி­மை­யா­ள­ரான ஓமான் முத­லீட்­டாளர், அவ­ரது ஆடை உற்­பத்தி நிறு­வ­னத்­துக்­குள்ளே அமைந்­துள்ள பங்­க­ளாவில் தங்­கி­யி­ருந்த நிலையில், அப்­பங்­க­ளாவின் கத­வுகள், ஜன்­னல்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் வீட்டின் முன்னால் இருந்த வாக­னத்­தையும் அடித்­து­டைத்­துள்­ளனர்.

சம்­ப­வத்­துக்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், குறித்த அர­சி­யல்­வா­தியின் சகா ஒருவர், ஆடைத் தொழிற்­சா­லைக்கு வாகனம் ஒன்­றினை வாடகை அடிப்­ப­டையில் வழங்க முற்­பட்டபோது, அதனை குறித்த முத­லீட்­டாளர் நிரா­க­ரித்­தமை தாக்­கு­த­லுக்­கான காரணம் என குறித்த ஆடை உற்­பத்தி நிறு­வ­னத்தின் பொது முகா­மை­யாளர் யசீர் லாஹிர் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

‘எமது நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­படும் விநி­யோ­கஸ்­தர்கள் உள்­ளிட்ட பலர் பிர­தே­சத்தின் முக்­கிய அர­சி­யல்­வாதி ஒரு­வ­ருடன் தொடர்­பு­டை­ய­வர்கள். அவர்கள் தொடர்பில் தீர்­மானம் ஒன்­றினை எடுக்கும் போது ஒவ்­வொரு முறையும் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்வோம். இது தொடர்ந்து இருந்­தது. இறு­தி­யா­கவே இந்த தாக்­குதல் நடாத்­தப்­பட்­டது.

உண்­மையில் இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து, முத­லீட்­டாளர் தமது முத­லீ­டு­க­ளுடன் நாட்­டி­லி­ருந்து வெளி­யேறும் நிலைப்­பாட்டில் இருக்­கின்றார். இலங்­கையை விட, எத்தி­யோப்­பியா, சோமா­லியா போன்ற நாடு­க­ளுக்கு அந்த முத­லீ­டு­களை கொண்டு செல்­வது முத­லீட்­டா­ள­ருக்கு இலா­ப­க­ர­மா­னது.

எமது நாடு தற்­போது உள்ள பொரு­ளா­தார சூழலில், இவ்­வாறு முத­லீட்­டா­ளர்கள் நாட்டை விட்டு வெளி­யே­றினால் அது பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். எனவே இந்த தாக்­குதல் தொடர்பில் பூரண விசா­ரணை நடாத்­தப்­படல் வேண்டும். நியாயம் நிலை­நாட்­ட­ப்பட வேண்டும்.

முத­லீட்டுச் சபை ஊடாக வரும் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பாது­காப்­ப­ளிக்க வேண்­டி­யது மிக முக்­கிய நிபந்­தனை. இந்த நிபந்­தனை மீறப்­பட்­டுள்­ளது.’ என பொது முகா­மை­யாளர் யசீர் லாஹிர் விடி­வெள்­ளி­யிடம் மேலும் தெரி­வித்தார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் அர­சி­யல்­வா­தியின் ஆத­ர­வாளர், அவ­ரது வாக­னத்தை வாடகை அடிப்­ப­டையில் ஆடைத் தொழிற்­சா­லைக்கு பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என விசா­ரித்­துள்ளார்.

தற்­போ­தைய சூழலில், வாடகை அடிப்­ப­டையில் வாக­னங்­களை பெறு­வ­தில்லை என இதற்கு முத­லீட்­டாளர் அறி­வித்­துள்ளார்.
இவ்­வா­றான பின்­ன­ணியில், இந்த சம்­ப­வத்தால் கோபத்தில் இருந்­துள்ள குறித்த நபர், ஆடைத் தொழிற்­சா­லையின் பின் பக்­க­மாக உள்ள மதி­லினால் பாய்ந்து முத­லீட்­டாளர் தங்­கி­யி­ருந்த வீட்டு பகு­திக்குள் நுழைந்து தாக்­கி­யுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.
ஓமான் முத­லீட்­டாளர் தங்­கி­யி­ருந்த வீட்டை, குறித்த கும்பல் தாக்க முன்னர் அவ்­வீட்டின் பாது­காப்பு அதி­கா­ரியை தாக்­கி­யுள்­ளனர்.

பின்னர் வீட்டின் கதவு, ஜன்­னல்­களை உடைக்கும் போது, முத­லீட்­டாளர் வெளியே வந்­துள்­ள­தா­கவும், இதன்­போது அவரை சர­மா­ரி­யாக இந்த கும்பல் தாக்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து தாக்­குதல் நடாத்­திய கும்பல் அங்­கி­ருந்து தப்­பி­யோடி இருந்­தனர். இந்நிலையில், இந்த தாக்­குதல் தொடர்பில் பொலி­சா­ருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் பிர­காரம் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போதும், சந்­தேக நபர்கள் தொடர்பில் எந்த தக­வல்­களும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் சம்­பவ இடத்தில் சந்­தேக நபர் ஒரு­வரின் காலணி ஜோடி ஒன்று பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் சார்ஜன் அதி­கா­ரியின் மேற்­பார்­வையில் பொலிஸ் மோப்ப நாய் நேரோ ஸ்தலத்­துக்கு அழைக்­கப்­பட்டு மோப்பம் பிடிக்­கப்­பட்­டது.

இந் நிலையில் நேரோ எனும் மோப்ப நாய், ஆடைத் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து 700 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்­றுக்கு சென்று, அங்கு கட்டில் அருகே அமர்ந்­துள்­ளது. இத­னை­ய­டுத்தே சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய மூவர் கடந்த 31ஆம் திகதி மாலை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சமன் சிகே­ராவின் மேற்­பார்­வையில் பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த அம­ர­துங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய படல்­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­ரத்ன தலை­மை­யி­லான குழு­வினர் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த நிலையில், அவ்­வி­சா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு தற்­போது சி.ஐ.டி.யின­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஓமான் முத­லீட்­டா­ள­ரான ஹல்பான் அல் உதைபி கடந்த 2015 முதல் 8 வரு­டங்­க­ளாக இந்த ஆடைத் தொழிற்­சா­லையை நடாத்தி வரு­வ­தா­கவும் அங்கு சுமார் 350 இலங்­கை­யர்கள் சேவை­யாற்­று­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில், தாக்­கு­தலை அடுத்து ஓமான் தூதுவர் அஹமட் அல் ராசி­தி­யுடன் தாக்­கு­த­லுக்கு உள்­ளான முத­லீட்­டாளர் உள்­ளிட்ட உயர் மட்டக் குழு, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியை இரு தினங்­க­ளுக்கு முன்னர் சந்­தித்­துள்­ளது.

இதன்­போது இரா­ஜாங்க அமைச்­ச­ரான பிர­தே­சத்தின் அர­சி­யல்­வா­தியின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முறை­யி­டப்­பட்­டுள்­ள­துடன், நடந்த சம்­பவம் குறித்து சி.ஐ.டி. ஊடாக விசா­ரணை கோரப்­பட்டு ஜனா­தி­ப­திக்­கான மகஜர் ஒன்றும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நியா­ய­மான நட­வ­டிக்கை இன்றேல், முத­லீட்­டுடன் நாட்­டி­லி­ருந்து வெளியேறவரும் என்பதும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தனது கவலையை பதிவு செய்துள்ளதுடன், நாட்டிலிருந்து வெளியேற வேண்டாம் எனவும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் உறுதி செய்து பொலிஸ்மா அதிபருக்கும் கதைத்துள்ளார்.

இதனையடுத்து முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகமவுடனும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது அவரும் சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளதுடன் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதியளித்துள்ளார்.
இந் நிலையிலேயே ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை தற்போது முன்னெடுத்துள்ளனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.