பெண் சட்டத்தரணிகளின் புதிய ஆடை ஒழுங்கு அபாயா அணிய முடியாத நிலை
முஸ்லிம்கள் அதிருப்தி;மறு பரிசீலனை செய்யுமாறு நீதியமைச்சர், பிரதம நீதியரசர், சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
பெண் சட்டத்தரணிகளுக்கான நீதிமன்ற ஆடையில் மாற்றம் ஏற்படுத்தி வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலையடுத்து முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் அபாயா அணிந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாமற்போயுள்ளதென முஸ்லிம் சமூகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2325/ 44 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பெண் சட்டத்தரணிகளின் நீதிமன்ற ஆடை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்புதிய வர்த்தமானி அறிவித்தலின் படியே முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் அபாயா அணிந்து நீதிமன்ற கடமைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெண் சட்டத்தரணிகளின் ஆடை தொடர்பில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலின்படி பெண் சட்டத்தரணிகள் கறுப்புநிற GOWN/ CLOAK அணியலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் நீளமான கவுன் என்ற வகையில் அபாயா அணிந்து நீதிமன்றுக்குச் சென்றார்கள்.
ஆனால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த GOWN/ CLOAK என்ற வார்த்தை அகற்றப்பட்டிருப்பதனால் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் இதன் பின்பு அபாயா அணிந்து செல்லும் அனுமதி உயர்நீதிமன்ற புதிய விதிகளின் படி இல்லாமற்போயுள்ளது.
இதனை மீறி முஸ்லிம் பெண் சட்டத்தரணியொருவர் அபாயா அணிந்து வழக்கொன்றில் ஆஜரானால் எதிர்தரப்பு புதிய வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைய அவரின் ஆடையைக் கேள்விக்கு உட்படுத்தலாம். இதனால் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது அல்லது சட்டத்தரணிகள் இருக்கையில் அமர்வது முடியாமற் போகும்.
பிரேரணை நிறைவேற்றம்
புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானதையடுத்து கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் அவரசமாகக் கூடி பிரேரணையொன்றினை நிறைவேற்றியுள்ளது.
பெண் சட்டத்தணிகளின் ஆடைதொடர்பில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நீண்ட கவுண் என்ற ஆடையை மீண்டும் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் உள்வாங்குமாறு குறித்த பிரேரணை தெரிவிக்கிறது என கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் ஆரிகா காரியப்பர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பிரேரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் கெளசல்யா நவரத்னவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி நீதி, சிறைச்சாலைகள் புனர்நிர்மாணம், அரசியலமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம்
இதே வேளை முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் அதன் செயலாளர் ரஸ்மரா ஆப்தீன் தலைமையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கெளசல்யா நவரத்னவை நேற்று முன்தினம் சந்தித்து புதிய வர்த்தமானி அறிவித்தலையடுத்து முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை விளக்கியது.
ஜனாதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் வழிகாட்டலின் கீழ் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.
இதேவேளை நேற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு ஒன்று கூடி இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்தது. முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் முன்புபோல் GOWN/ CLOAK ஆடையணிந்து (அபாயா) நீதிமன்ற கடமைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை மீண்டும் பெற்றுக் கொடுப்பதென நிர்வாகக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதென சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.-Vidivelli