சட்டத்தரணி ஒருவரின் சேவையைப் பெற பணம் கூட இருக்காத நிலையில் சி.ஐ.டி.யினரே சட்டத்தரணி ஒருவரையும் நியமித்ததாக குறுக்கு விசாரணைகளில் 2ஆவது சாட்சியாளர் தெரிவிப்பு; முதல் சாட்சியாளர் மலிக்குடன் பேசிய பின்னர் ஹிஜாஸ் தொடர்பில் ஞாபகப்படுத்தி புத்தளம் மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்ததாகவும் தெரிவிப்பு
எம்.எப்.அய்னா
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான 2 ஆவது சாட்சியாளர், புத்தளம், அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் பெளஸான், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தேவைக்காக பொய்யாக சாட்சியமளிப்பதாக , பிரதிவாதிகள் தரப்பினர் சார்பில் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரமும், இவ்வாரத்தின் ஆரம்பத்திலும் புத்தளம் மேல் நீதிமன்றில் நடந்த வழக்கு விசாரணைகளின் இடையே, இந்த விடயம் பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணியால் மன்றில் வெளிப்படுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த 24 ஆம் திகதி முதல் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
குறித்த தினங்களில், பிணையில் இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2 ஆம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் , ஜனாதிபதி சட்டத்தரணிகளான நலிந்த இந்ரதிஸ்ஸ, பர்மான் காசிம், சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
2 ஆம் பிரதிவாதியான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையில் சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், தனுஷன் கணேசயோகன் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
இவ்வழக்கினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேடமாக மேற்பார்வை செய்யும் நிலையில் அதற்காக பிரத்தியேக சட்டத்தரணிகள் குழாம் ஆஜரானது.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் முதல் நாளில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவும் 2 ஆவது நாளில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வாவுடன் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவும் ஆஜராகினர்.
அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தமை விஷேட அம்சமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதிநிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை காண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்ததாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி நடந்த விசாரணைகளின் போது 2 ஆம் சாட்சியாளராக அல் சுஹைரியா மத்ரஸாவின் முன்னாள் மாணவனான, 19 வயதுடைய மொஹம்மட் பெளஸான் சாட்சியமளித்தார்.
அவரது சாட்சியத்தை அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம நெறிப்படுத்திய நிலையில் அவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பு வசதியும் செய்துகொடுக்கப்பட்டது.
இதனைவிட குறித்த வழக்கு விசாரணை நடைபெற்ற தினம் நோன்பு மற்றும் வெள்ளிக் கிழமை என்பதால், விஷேடமாக 12 மணி முதல் ஒன்றரை மணி நேரம் ஜும் ஆ தொழுகைக்காக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொடவினால் நிறுத்தப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இந் நிலையில் அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவின் நெறிப்படுத்தலில் சாட்சியமளித்த மொஹம்மட் பெளஸான், தான் 2018 ஆம் ஆண்டு அல் சுஹைரியா மத்ரஸாவில் இணைந்ததாக, தனது தாயின் மரணத் திகதியை ஞாபகப்படுத்திக்கொண்டு தெரிவித்தார்.
தனது ஊரான குருணாகல் – நாரம்மல, சியம்பலாகஸ்கொட்டுவை – மதீனா தேசிய பாடசாலையில் 9 ஆம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு அல் சுஹைரியா மத்ரசாவுக்கு சென்றதாக சாட்சியாளர் குறிப்பிட்டார். தனது மச்சான் ஊடாக மத்ரஸாவுக்கான அறிமுகம் கிடைத்ததாகவும், தனது ஊரிலிருந்து கொழும்புக்கு சென்று அங்கு ரிகாஸ் ஹாஜியார் ஊடாகவே அல் சுஹைரியா மத்ரஸாவில் இணைந்ததாகவும், அப்போது ரிகாஸ் ஹாஜியார் கொழும்பு பகுதியில் இருந்த மேலும் சில மாணவர்களையும் சேர்த்து குறித்த மத்ரஸாவுக்கு அழைத்து சென்றதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
மத்ரஸாவின் ஹிப்ழ் பிரிவில் தான் குர் ஆன் மனனம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் சாட்சியாளர் கூறினார்.
மத்ரஸாவின் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பிலும் சாட்சியமளித்த அவர், தனது மத்ரஸாவின் அதிபராக வழக்கின் 2 ஆவது பிரதிவாதி சகீல் மெளலவி கடமையாற்றியதாக கூறி அவரை அடையாளம் காட்டினார்.
இதனைவிட, தான் மத்ரஸாவில் இருந்த காலப்பகுதியில், அங்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான குண்டுதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரான் மற்றும் ரிழ்வான் அல்லது ரிஸ்வான் எனும் பெயரில் அறியப்படும் ஒருவரும் வந்ததாக சாட்சியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் சாரா ஜெஸ்மின் மற்றும் பாத்திமா ஜிப்றியா எனும் இரு பெண்களும் அங்கு பிறிதொரு தினத்தில் வந்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
சஹ்ரான், ரில்வான் அல்லது ரிஸ்வான் ஆகியோர், முஸ்லிம்களின் பள்ளிவாசல் கள் மீது கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடாத்துவதாகவும் அதற்கு பதிலடியாக குண்டுத் தாக்குதல் நடாத்த வேண்டும் எனக் கூறியதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார். அதனால் அச்சமடைந்து தான் மத்ரஸாவில் இருந்து யாருக்கும் தெரியாமல் பலமுறை வீட்டுக்கு ‘பாய்ந்து’ சென்றதாக சாட்சியாளர் கூறினார்.
எவ்வாறாயினும் சாரா மற்றும் ஜிப்றியா ஆகியோர், சில பயிற்சி நடவடிக்கைகளையும் விளையாட்டுக்களையுமே சொல்லித் தந்ததாக சாட்சியாளர் குறிப்பிட்டார்.
இவ்வாறு சாட்சியமளிக்கும் இடை நடுவே, சாட்சியாளர் பயந்து பயந்து சாட்சியமளிப்பதை நீதிமன்றம் அவதானித்து, அவரிடம் அது குறித்து வினவியிருந்தது.
தான் பிழையாக ஏதாவது கூறினால், தன்னை சிறைப்படுத்திவிடுவார்களோ என்ற பயத்தில் அவ்வாறு அச்சத்துடன் சாட்சியமளிப்பதாக சாட்சியாளர் குறிப்பிட்டார்.
பிறிதொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு அச்சத்துடன் சாட்சியமளிப்பது குறித்து நீதிபதி வினவிய போது, தனக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ ஏதும் ஆபத்து விளைவிக்கப்படுமோ என அஞ்சுவதாக சாட்சியாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சட்ட மா அதிபர் சார்பில் நேரடியாக சில தற்கொலை குண்டுதாரிகளின் பெயர்களைக் கூறி தெரியுமா என வினவப்பட்டது. எனினும் அவர்களை தெரியாது என சாட்சியாளர் குறிப்பிட்டார்.
இறுதியாக, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஒரு நாள் அல் சுஹைரியா மத்ரஸாவுக்கு வந்ததாகவும், அந்த தினத்தில் 3 அல்லது நான்கு தடவைகள் அவரைக் கண்டதாகவும் அப்போது அவர் அதிபருடன் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
எனினும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஏதும் போதனைகள் செய்ததாகவோ ஏதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவோ சாட்சியமளிக்கப்படவில்லை.
இந் நிலையில் இரண்டாம் நாள் விசாரணையின் போது சாட்சியாளர் மொஹம்மட் பெளசானிடம், கடந்த திங்களன்று, முதல் பிரதிவாதி சட்டத்தரணி ஹிஜாஸ் சார்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.
சி.ஐ.டி. குழுவினர் தனது வீட்டுக்கு வந்து தன்னுடன் மத்ரஸாவில் படித்த மாணவர்களின் புகைப்படங்களைக் காட்டி விசாரித்ததாகவும், அதனைத் தொடர்ந்தே தான் மத்ரஸாவில் நடந்தவற்றை அவர்களுக்கு கூறியதாகவும் குறுக்கு விசாரணைகளிடையே சாட்சியாளர் குறிப்பிட்டார்.
சி.ஐ.டி.யினர் தன்னை அவர்களது ஜீப்பில் சகோதரனுடன் சேர்த்து கொழும்புக்கு அழைத்து சென்று முதல் வாக்கு மூலத்தை பதிவு செய்ததாகவும், வாக்கு மூலத்தை பதிவு செய்ய முன்னர் சில புகைப்படங்களை காட்டியதாகவும் சாட்சியாளர் கூறினார்.
முதலில் தனது வாக்கு மூலத்தை கையி னால் எழுதிக்கொண்டதாகவும் பின்னர் தட்டெழுத்து செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் நீதிமன்ற வழக்காவணத்தில் தட்டெழுத்து செய்யப்பட்ட பிரதி மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் குறித்த தினத்தின் இறுதியில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸவும், சமிந்த அத்துகோரளவும் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய, கையெழுத்தினால் எழுதப்பட்ட வாக்கு மூலம் இருப்பின் அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கையிட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட உத்தரவிட்டார்.
இந் நிலையில் குறுக்கு விசாரணைகளின் போது சாட்சியமளித்த சாட்சியாளர், சி.ஐ.டி.யினர் தன்னிடம் புகைப்படங்களைக் காட்டுவதற்கு முன்னர் சுயாதீனமாக தான் எதனையும் அவர்களுக்கு கூறவில்லை என தெரிவித்தார்.
இதனைவிட, தான் ஒரு போதும் கோராத நிலையில், நீதிமன்றுக்கு செல்ல பயமாக உள்ளது என கூறிய நிலையில், கோட்டை நீதிவான் முன்னிலையில் வாக்கு மூலம் அளிக்க சி.ஐ.டி.யினர் தன்னை அழைத்து சென்றதாக சாட்சியாளர் குறிப்பிட்டார்.
தனது வீட்டுக்கு அருகே உள்ள சியம்பலாகஸ்கொட்டுவ பெரிய சந்திக்கு கெப் ரக வாகனத்தில் வந்த சி.ஐ.டி.யினர் அங்கிருந்து தன்னை சி.ஐ.டி. தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து கோட்டை நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.
சி.ஐ.டி.யினரிடம் கூறிய விடயங்களை அப்படியே கோட்டை நீதிவானிடம் கூற வேண்டும் என சி.ஐ.டி.யினர் தனக்கு தெரிவித்ததாகவும், கோட்டை நீதிமன்றுக்கு செல்லும் போது அங்கு நாமலி சில்வா எனும் பெண் சட்டத்தரணியை சி.ஐ.டி.யினர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
சட்டத்தரணிக்கு வழங்க தம்மிடம் பணம் கூட இருக்காத நிலையில், தாம் சட்டத்தரணிகளை நியமிக்க வில்லை எனவும் சி.ஐ.டி.யினரே நியமித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸவின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்த சாட்சியாளர், சி.ஐ.டி.யில் கூறியவற்றை அப்படியே நீதிவானிடம் கூறுமாறும், சட்டத்தரணியை ஏற்பாடு செய்து கொடுத்தவரும் சி.ஐ.டி.யில் இருக்கும் மெலிந்த உயரமான ஒரு அதிகாரி எனவும் அவரது பெயர் தெரியாது எனவும் சாட்சியமளித்தார்.
இதனைவிட, நீதிவானும் தான் ஏற்கனவே சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டே தனது இரகசிய வாக்கு மூலத்தை பதிவு செய்ததாக சாட்சியாளர் கூறினார்.
இந் நிலையில் சாட்சியாளர் சி.ஐ.டி.யினருக்கு வழங்கிய வாக்கு மூலம் மற்றும் நீதிவானுக்கு வழங்கிய வாக்கு மூலம் ஆகியவற்றை வழங்கும் போது எந்த அச்ச நிலையிலும் இருக்கவில்லை என்பதை சாட்சியாளர் நீதிமன்றில் பிரஸ்தாபித்தார்.
அவ்வாறான நிலையில், குறித்த எந்தவொரு வாக்கு மூலத்திலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் , சுஹைரியா மத்ரஸாவுக்கு வந்ததாகவோ, அதிபருடன் பேசிக்கொன்டிருந்தை கண்டதாகவோ சாட்சியாளர் கூறவில்லை என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ நீதிமன்றில் சுட்டிக்காட்டி, அவற்றை சாட்சியாளரின் முரண்பாடான நிலையாக மன்றில் பதிவு செய்தார்.
இதன்போது சாட்சியாளர் ஒரு சந்தர்ப் பத்தில், சி.ஐ.டி. வாக்கு மூலங்களின் போது சில விடயங்களையே தான் கூறியதாகவும், புத்தளம் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த போது முதல் சாட்சியாளர் மலிக்குடன் தானும் ஓரிரு தடவைகள் வந்ததாகவும் கூறினார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மலிக் தன்னிடம் கூறிய விடயங்களை மையப்படுத்தியே ஹிஜாஸ் தொடர்பில் இந்த மன்றில் தான் ஞாபகப்படுத்தி வாக்கு மூலம் அளித்ததாக சாட்சியாளர் பெளசான் குறிப்பிட்டார்.
இந் நிலையில் 2 ஆம் சாட்சியாளர் சி.ஐ.டி.யின் தேவைக்காக, உண்மைக்கு புறம்பான விடயங்களை சாட்சியாக கூறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ மன்றில் முன் மொழிந்தார். எனினும் அதனை மறுக்காத சாட்சியாளர் அது தொடர்பில் தனக்கு தெரியாது என பதிலளித்தார்.
பல கேள்விகளுக்கு சாட்சியாளர், தெரியாது, ஞாபகம் இல்லை போன்ற பதில்களை வழங்கியமையை அவதானிக்க முடிந்தது.
இந் நிலையில் சாட்சியாளர் நோன்புடன் மிக நீண்ட நேரம் சாட்சியமளிப்பதை கருத்திற்கொண்டு, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா முன் வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, வழக்கினை 2 ஆம் பிரதிவாதி சார்பிலான குறுக்கு விசாரணைகளுக்காக எதிர்வரும் மே 12 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தார்.-Vidivelli