சஹ்ரானின் சிப்பிக்குளம் இரகசிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றொரு இளைஞனும் கைது
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பிலும் விசாரணை
(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹஷீம், தாக்குதலுக்கு முன்னர் அம்பாந்தோட்டை சிப்பிக்குளம் பகுதியில் நடாத்திய பயிற்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனைக் கைது செய்ததாகவும், அவ்விளைஞன் கண்டி பகுதியைச் சேர்ந்த அப்துல்லாஹ் எனும் பெயரை உடையவர் எனவும் சி.ரி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும் கிடைக்கப் பெற்ற தகவல்களை மையப்படுத்தி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கொழும்பில் தங்கியிருந்தவாறு, தொலைபேசி வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றில் சேவையாற்றி வந்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் அம்பாந்தோட்டை சிப்பிக்குளம் இரகசிய முகாமில், சஹ்ரானின் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சந்தேக நபர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உதவி ஒத்தாசைகளை முன்னெடுத்தமை, தகவல்களை மறைத்தமை தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக சி.ரி.ஐ.டி.யின் சிறப்புக்குழுவினர், பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.- Vidivelli